தலைப்பு: 20 வருச ஏமாற்றம்: எல்லையில மாட்டுன ரோடு! அரசியல்வாதியை வச்சு செஞ்ச மக்கள் – பிங்கிரியவில் பரபரப்பு!
மாதம்பே: “நடந்து கூட போக ஏலாது தம்பி, இது ரோடா இல்ல வயலா?” என்று கேட்கும் அளவுக்கு மோசமடைந்துள்ள மாதம்பே – பனிரெந்தாவ சந்தியிலிருந்து பிங்கிரிய – வத்துவத்த வரையான வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி, பிரதேச மக்கள் இன்று (20) மதியம் திடீர் வீதி மறியல் போராட்டத்தில் குதித்தனர். 20 வருடங்களாக ஒரு துண்டு தார் கூட இடப்படாமல் கைவிடப்பட்டுள்ள இந்த வீதியால் மக்களின் பொறுமை எல்லை கடந்துள்ளது.
இந்தப் பகுதியில் பெருமளவிலான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதனால் நாளொன்றுக்கு 300 க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் இந்த வீதியைப் பயன்படுத்துகின்றன. ஏற்கனவே குன்றும் குழியுமாக இருந்த வீதி, இந்த அசுர வாகனங்களின் நடமாட்டத்தால் முற்றாக அழிந்து போயுள்ளது. “வாகனங்கள் போறதை விடுங்க, எங்களால கால்நடையாகக் கூட இந்த வீதியில நடக்க ஏலாது” என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஆத்திரத்துடன் தெரிவித்தனர்.
இந்த வீதிப் பிரச்சினைக்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான ‘அரசியல் நழுவல்’ ஒளிந்திருக்கிறது. இந்த வீதியானது பிங்கிரிய மற்றும் உடுபத்தாவ ஆகிய இரு பிரதேச சபைகளை பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளது. இதனால், “அது அவங்க எல்லை, இது இவங்க எல்லை” என இரு பிரதேச சபைகளும் மாறி மாறி சாக்குப்போக்கு சொல்லி, கடந்த 20 வருடங்களாக மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளதாக கிராமவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
போராட்டம் சூடுபிடித்த வேளையில், அந்த வீதியால் வந்த பல வாகனங்களை மக்கள் மறித்து திருப்பி அனுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது. அப்போதுதான் அந்த ‘கிளைமாக்ஸ்’ காட்சி அரங்கேறியது. போராட்ட இடத்திற்கு பிங்கிரிய பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் ஒருவர் வருகை தந்தார். அவரைக் கண்டதும் மக்கள் மேலும் கொதித்தெழுந்தனர். “20 வருசமா எங்கிருந்தீங்க?” என மக்கள் சூழ்ந்து கொள்ள, மக்கள் பிரதிநிதிக்கும் கிராமவாசிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
நிலைமை கைமீறிப் போவதைக் கண்ட பிங்கிரிய பொலிஸார் உடனடியாக களத்தில் குதித்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நின்ற பொலிஸார், நிலைமையை ஒருவாறாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இறுதியாக, பிங்கிரிய மற்றும் உடுபத்தாவ ஆகிய இரு பிரதேச சபைகளின் தவிசாளர்களையும் அழைத்து, உடனடியாக ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்து தருவதாக பொலிஸார் உறுதியளித்தனர். பொலிஸாரின் இந்த உத்தியோகபூர்வ வாக்குறுதியை அடுத்தே மக்கள் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். 20 வருட பிரச்சினைக்கு இந்த பேச்சுவார்த்தையிலாவது தீர்வு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தகவல்: ஜூட் சமந்த




