இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்தின் அடையாளங்களில் ஒன்றான, மிகவும் அரிய வகை உயிரினமான “உக்லான்” (Pangolin/அழுங்கு வகை) விலங்கினை இறைச்சிக்காக கடத்திச் சென்ற கும்பலை தர்மபுரம் பொலிஸார் இன்று (03.02.2026) அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், அரிய வகை விலங்கு ஒன்று இறைச்சிக்காகக் கொல்லப்பட்டு கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து உடனடியாகச் செயற்பட்ட தர்மபுரம் பொலிஸார், குறித்த பகுதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையின் போது, உக்லான் விலங்கினை இறைச்சிக்காக எடுத்துச் சென்ற சந்தேக நபர்கள் கையும் மெய்யுமாகப் பிடிபட்டனர். இயற்கையின் பொக்கிஷமாக கருதப்படும் இவ்வுயிரினத்தை, வெறும் பணத்திற்காகவும் நாவசைவிற்காகவும் சிதைக்க முற்பட்ட செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள தர்மபுரம் பொலிஸார், நாளை (04.02.2026) அவர்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் வனப்பகுதிகளில் மிக அரிதாகக் காணப்படும் உக்லான் (அழுங்கு) போன்ற உயிரினங்கள், உலக அளவில் பாதுகாக்கப்பட்ட பட்டியலிலுள்ளவை.
இவ்வாறான விலங்குகளை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றம் என்பதால் பொலிஸாரின் இந்த அதிரடி நடவடிக்கை பிரதேசவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



