தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் நேற்று (13) பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
குறித்த சட்டத்தரணி ‘கரன்தெனிய சுத்த’ என்ற குற்றவாளியின் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், தனது கட்சிக்காரரின் தகவல்களை ‘லொகு பெட்டி’ என்ற குற்றவாளி தலைமையிலான குழுவிற்கு வழங்கிய காரணத்தினால், கரன்தெனிய சுத்தவினால் இந்தத் துப்பாக்கிச் சூடு வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.
அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியில் இருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இன்று மாலை 5.00 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக இன்று (14) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய, 14 ஆண்டுகளின் பின்னர் சட்டத்தரணிகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களினதும் அவசரக் கூட்டமொன்று நாளை (15) கொழும்பில் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார்.
நாளை பிற்பகல் 3.00 மணிக்கு இந்த அவசரக் கூட்டம் அழைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இன்று சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு கூடியது.
இது முழு சட்டத்தரணிகள் சமூகத்தையும் பாதிக்கும் ஒரு சம்பவமாகும். இது எமது நிறைவேற்றுக் குழுவினால் மட்டும் தீர்மானிக்கப்பட வேண்டிய விடயமல்ல.
எனவே, நாளை மாலை 3.00 மணிக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களினதும் அவசரக் கூட்டத்தை அழைக்கின்றோம்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை அந்தப் பொதுக்கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படும்.
நாங்கள் 2012 ஆம் ஆண்டிற்குப் பின்னரே இவ்வாறானதொரு கூட்டத்தை கூட்டுகின்றோம். இறுதியாக முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் அந்தத் தண்டனைப் பிரேரணை பிரச்சினையின் போதே இவ்வாறான கூட்டம் கூட்டப்பட்டது. அதன் பின்னர் 14 வருடங்கள் கழித்தே நாம் இந்தக் கூட்டத்தை அழைக்கின்றோம்” என அவர் தெரிவித்தார்.
இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய கொலையாளிகள் வந்ததாக அடையாளம் காணப்பட்ட மோட்டார் காரின் இலக்கத் தகட்டை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். அந்த இலக்கத் தகட்டிற்குரிய மோட்டார் கார் தொடர்பில் ஏதேனும் தகவல் இருந்தால் தலங்கம பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு சட்டத்தரணியும் அவரது மனைவியும் உயிரிழந்துள்ளனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக பொலிஸ் மா அதிபரால் 10 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



