ஜூட் சமந்த
கடலோர பாதுகாப்புப் படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்து, அவர்களைச் சுட்டுக் கொன்றுவிடுவோம் என அச்சுறுத்திய ஆறு பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் வென்னப்புவ – வெள்ளமங்கரையைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஆவார். இச்சம்பவம் கடந்த மார்ச் 4ஆம் திகதி மாலை வென்னப்புவ – சிந்த்ராத்ரிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சிலாபம் முகாமில் பணிபுரியும், சிந்த்ராத்ரிய மா ஓயா கடலோர பாதுகாப்பு உப பிரிவைச் சேர்ந்த இரண்டு புலனாய்வு அதிகாரிகள் கடல் மார்க்கமாக இடம்பெறும் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகள் குறித்துக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அங்கு வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர், அதிகாரிகளை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டியதுடன், அவர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
அச்சுறுத்தல் விடுத்தவர்களில் ஒருவரை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். அவர் வென்னப்புவ – வைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், ஏற்கனவே கடல் மார்க்கமாக சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்டதற்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அதிகாரிகள் இது குறித்து வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதோடு, அவர் பயன்படுத்திய மோட்டார் கார் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தலைமறைவாகியுள்ள ஏனைய ஐந்து சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாரவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


