ஜூட் சமந்த
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டு தேங்காய் எண்ணெயின் விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளதாக பேக்கரி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பேக்கரி உற்பத்தியாளர்களின் தகவல்படி, ஒரு கிலோகிராம் 850 ரூபாயாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயின் (RDB) விலை தற்போது 1,130 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், 850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் உள்நாட்டு தேங்காய் எண்ணெயின் விலை 1,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
தேங்காய் எண்ணெய் மட்டுமின்றி, பாம் ஆயில் (Palm Oil) உள்ளிட்ட இதர சமையல் எண்ணெய் வகைகளின் விலையும் கிலோவிற்கு 700 ரூபாயிலிருந்து 960 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. விலை உயர்வு ஒருபுறமிருக்க, சந்தையில் இந்த எண்ணெய் வகைகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், உள்நாட்டு எண்ணெய் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கிலோகிராம் கள்ளுத் தேங்காய் (Katu Pol) 135 ரூபாயிலிருந்து 175 ரூபாயாக அதிகரித்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் விலை உயர்வு காரணமாக, எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பேக்கரி தொழில் முற்றாகச் சரிவடையும் அபாயம் உள்ளதாக உற்பத்தியாளர்கள் எச்சரித்துள்ளனர். மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் சந்தையில் நிலவும் தட்டுப்பாடு காரணமாகத் தொழிலை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் சிக்கல்கள் எழுந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.


