இலங்கையில் பிஸ்கட், ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் உள்ளிட்ட இனிப்பு பண்டங்களின் விலைகளை எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிப்பதில்லை என இலங்கை இனிப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் (Lanka Confectionery Manufacturers Association) உறுதியளித்துள்ளது.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கும், இனிப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (26) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய தாக்கம் மற்றும் உள்நாட்டுத் தொழிற்றுறையில் அதன் பாதிப்புகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
தற்போதைய பொருளாதாரச் சூழலில் நுகர்வோரால் மேலதிக விலை உயர்வைத் தாங்கிக்கொள்ள முடியாது என்பதை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். உள்நாட்டு பிஸ்கட் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் அதேவேளை, நுகர்வோர் பாதிக்கப்படுவதை ஆகக்குறைந்த மட்டத்தில் பேணுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்தார்.
அத்துடன், கடினமான காலப்பகுதியிலும் நுகர்வோர் நலன் கருதி செயற்படுமாறு கேட்டுக்கொண்ட அமைச்சர், உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் தலையிடத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.டி. சூரியகுமார, பின்வரும் முக்கிய விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்:
- இலங்கையின் இனிப்புப் பண்டத் தேவையானது 95% உள்நாட்டு உற்பத்தியின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.
- இத்தொழிற்றுறையில் சுமார் 50,000 பேர் நேரடியாகவும், 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
- கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 15 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொழில்நுட்ப முதலீடுகள் இத்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மின்சார மற்றும் எரிவாயு கட்டண உயர்வு மற்றும் இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவை இத்துறை எதிர்கொள்ளும் பிரதான சவால்களாக உள்ளன. குறிப்பாக, கரோனா காலத்திற்குப் பிறகு பெரிய அளவில் விலையேற்றம் செய்யப்படாமல், மிகக் குறைந்த இலாபத்துடனேயே இத்தொழிற்றுறை இயங்கி வருவதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
இருப்பினும், சித்திரைப் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குச் சுமையை ஏற்படுத்தாத வகையில் மே மாதம் வரை விலையை அதிகரிப்பதில்லை என சங்கம் ஒருமனதாகத் தீர்மானித்துள்ளது. மே மாதத்திற்குப் பின்னரும் எரிவாயு, மின்சாரம் மற்றும் மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்தால் மட்டுமே விலை திருத்தம் குறித்து பரிசீலிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், துறைமுகத்தில் மூலப்பொருட்களை விடுவிப்பதில் ஏற்படும் தாமதம் மற்றும் கப்பல் கட்டண உயர்வு போன்ற பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டிய உற்பத்தியாளர்கள், புத்தாண்டு கால விநியோக நடவடிக்கைகளுக்காகத் தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


