ஜூட் சமந்த
தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் அவர்கள் பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்று 29 ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் சிலாபம் – கொழும்பு வீதியின் பண்டாரவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்து நடந்த தருணத்தில் காரில் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே இருந்துள்ளார். இந்த விபத்தினால் அவருக்குப் பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்ற போதிலும், விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் இதயக் கோளாறு காரணமாக அவர் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, சுவர் ஒன்றில் மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
அவர் கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னரும், சில மாதங்களுக்கு முன்பு நாத்தாண்டியா – கொச்சிக்கடை வீதியின் ஹல்தடுவன பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் பயணித்த கார் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. அந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



