பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எழுதிய ‘ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி’ நூல் வெளியீட்டு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேரில் கலந்துகொண்டார் என்பதை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (04) உறுதிப்படுத்தினார்.
சஜித் பிரேமதாச இந்த நிகழ்வில் பங்கேற்றது தொடர்பில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த சர்ச்சைகளுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட விவகாரம், குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பலத்த விவாதங்களையும் சில அரசியல் சங்கடங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தற்போதைய மற்றும் முன்னாள் அரசாங்கங்களின் அணுகுமுறைகளை சஜித் பிரேமதாச தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில், அதே ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கொண்ட உதய கம்மன்பில போன்ற ஒருவரின் நூல் வெளியீட்டில், அதுவும் ராஜபக்ஷக்களுடன் இணைந்து ஒரே மேடையில் அமர்ந்திருந்தது, அவரது அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இது கட்சிக்குள்ளேயே சஜித்தின் முடிவெடுக்கும் திறன் குறித்த விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை மறுத்திருந்தனர். சஜித் பிரேமதாச அங்கு செல்லவில்லை என்றும், அவர் அங்கு இருப்பது போன்ற காட்சிகள் ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கப்பட்டவை என்றும் அவர்கள் வாதிட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முஜிபுர் ரஹ்மான் நேரடியாகப் பதிலளித்தார்.
- ஊடகவியலாளர்: “எதிர்க்கட்சித் தலைவர் ஏன் இடையில் எழுந்து சென்றார் என்று தெரியுமா? “முஜிபுர் ரஹ்மான்: “அதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.”
- ஊடகவியலாளர்: “உங்கள் கட்சியின் சில உறுப்பினர்கள் அது ‘AI’ மூலம் செய்யப்பட்டது என்கிறார்கள்.. அவர் கலந்துகொண்டதை நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்களா? “முஜிபுர் ரஹ்மான்: “ஆம், அவர் கலந்துகொண்டார் என்று பொதுச்செயலாளரே (ரஞ்சித் மத்தும பண்டார) ஏற்கனவே கூறிவிட்டாரே.”
எதிர்க்கட்சி தலைவர் தலைவர் ஏன் இவ்வாறானதொரு மேடையில் தோன்றினார் என்பதற்குத் தமது தொகுதி மக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு எதிர்க்கட்சி முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தள்ளப்பட்டுள்ளனர். முஜிபுர் ரஹ்மான் போன்றவர்கள் இதனை உறுதிப்படுத்தினாலும், ஆரம்பத்தில் இது ‘AI’ மூலம் செய்யப்பட்டது என கட்சியின் சில உறுப்பினர்கள் கூற முயன்றதே அந்த அச்சத்திற்கு பிரதான காரணமாக உருவெடுத்துள்ளது.
முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க சமூகங்கள் சஜித் பிரேமதாசவின் முக்கிய வாக்கு வங்கிகளாக உள்ள நிலையில், ஈஸ்டர் தாக்குதலின் ‘சூத்திரதாரி’ யார் என்பது குறித்த உதய கம்மன்பிலவின் பார்வையும், அந்த மேடையில் இருந்தவர்களின் அரசியல் வரலாறும் இச்சமூகங்களுக்கு உடன்பாடானவை அல்ல. எனவே, இந்த நிகழ்வு சிறுபான்மைச் சமூகங்களின் நம்பிக்கையைச் சிதைத்து, எதிர்வரும் தேர்தல்களில் அது வாக்குகளாக மாறுவதைத் தடுக்கும் ஒரு காரணியாக அமையலாம் என கட்சி உறுப்பினர்கள் அஞ்சுகின்றனர்.
உதய கம்மன்பிலவின் இந்த நூல் வெளியீட்டு விழா அரசியல் ரீதியாகப் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிகழ்வில் சஜித் பிரேமதாசவுடன், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரும் ஒரே மேடையில் காணப்பட்டனர்.
இவர்களுடன் முன்னாள் பாதுகாப்புப் பிரிவு பிரதானிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் எனப் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கட்சிக்குள் நிலவிய முரண்பட்ட கருத்துகளுக்கு மத்தியில், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரே இதனை உறுதிப்படுத்தியிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.





