ஜூட் சமந்த
சைபர் குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட 152 வெளிநாட்டவர்களையும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க சிலாபம் மாவட்ட நீதிபதியும் நீதவானுமான ஜே.எஸ்.டி. வீரசிங்க இன்று (09) உத்தரவிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி மாலை, சிலாபம் – அம்பகடவில பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த போதே இவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
சுமார் மூன்று மாதங்களாக அந்த விடுதியில் தங்கியிருந்த இவர்கள், தாம் உள்ளூர் வர்த்தகர்களுக்குப் பயிற்சித் திட்டங்களை நடத்துவதாக விடுதி நிர்வாகத்திடம் கூறி வந்துள்ளனர்.
எனினும், இவர்கள் குறித்த விடுதியில் தங்கியிருந்து கணினி ரீதியான குற்றங்களில் ஈடுபடுவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையைத் தொடர்ந்தே இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது. இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 99 டெஸ்க்டாப் கணினிகள், 26 மடிக்கணினிகள் மற்றும் 259 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில் 131 சீன பிரஜைகள் (அவர்களில் 6 பெண்கள்), 10 வியட்நாம் பிரஜைகள் (அவர்களில் 3 பெண்கள்), ஒரு தாய்வான் நாட்டுப் பெண் மற்றும் ஒரு மலேசியப் பிரஜையும் அடங்குவர். இவர்கள் அனைவரும் சுற்றுலா மற்றும் வர்த்தக விசாக்களின் அடிப்படையில் இலங்கைக்கு வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 3ஆம் திகதி சிலாபம் மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள், இன்று (09) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இன்றைய தினம் சிறைச்சாலைக்குச் சொந்தமான இரு பேருந்துகளில் சந்தேக நபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
நீதிமன்றம் இவர்களுக்குப் பிணை வழங்கிய போதிலும், பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற எவரும் முன்வராத காரணத்தால், அவர்கள் மீண்டும் சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர். பிணை நிபந்தனைகள் பூர்த்தியாகும் வரை இவர்களை வெலிசரையில் உள்ள வெளிநாட்டவர்கள் தடுப்பு மையத்தில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை எதிர்வரும் அக்டோபர் மாதம் 20ஆம் திகதி மீண்டும் நடைபெறவுள்ளது.



