2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலானது தற்செயலாக நடந்த ஒரு தனித்த சம்பவம் அல்ல எனவும், அது 2017ஆம் ஆண்டு முதல் மிகத் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு பாரிய சதித்திட்டம் என்பது தற்போதைய விசாரணைகள் மூலம் உறுதியாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இன்று (09) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
இந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில் மிக முக்கிய திருப்பமாக, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்தார்.
முன்னதாக இந்த வழக்கில் முதலாவது சாட்சியாகப் பெயரிடப்பட்டிருந்த சுரேஷ் சலே, 2024.10.11 அன்று அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தற்போது சந்தேகநபராகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தவகையில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டுக்களாக;
- இஸ்லாமிய கடும்போக்காளர்களின் வன்முறைத் திட்டங்கள் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதனைத் தடுக்கத் தவறியமை.
- தாக்குதல் நடத்துவதற்குத் தேவையான பின்னணிச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தமை.
- தாக்குதலின் பின்னர், அதன் உண்மையான சூத்திரதாரிகள் மற்றும் குழுக்கள் கண்டறியப்படுவதைத் தடுக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் தடையாக இருந்தமை தொடர்பில் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் குறித்த தகவல்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அப்போதே முறையான விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுத்திருக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இப்படுகொலை விசாரணைகள் திசைதிருப்பப்பட்டமையே பாரிய அழிவுக்கு வழிவகுத்ததாக அவர் தெரிவித்தார்.
தாக்குதலுக்குத் தலைமை தாங்கியதாகக் கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமுக்கு மேலிருந்து, அவரை இயக்கிய ஒரு தனி நபர் மற்றும் ஒரு குழு தொடர்பான பலமான ஆதாரங்கள் தற்போது புலனாய்வுப் பிரிவினரால் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள அரசியல் மற்றும் நிர்வாகச் சதிவலைகளை முழுமையாக வெளிக்கொண்டு வருவதற்கான விசாரணைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தனது உரையில் மேலும் தெரிவித்தார்.


