ஈரானுக்கு எதிரான போர் தொடங்கி ஆறு வாரங்களுக்கு மேலாகியும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் தனது ராணுவ பலத்தை ஒரு நிலையான அரசியல் வெற்றியாக மாற்ற முடியவில்லை எனத் தெரிய வந்துள்ளது.
தெஹ்ரான் மீது ஒரு தீர்க்கமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெறுவதையே நோக்கமாகக் கொண்டு இந்தப் போர் தொடங்கப்பட்டது. இருப்பினும், தற்போதைய சூழல் நெதன்யாகுவிற்கு சாதகமாக இல்லை என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த மோதல் குறித்து இஸ்ரேலில் நடத்தப்பட்ட சமீபத்திய கருத்துக்கணிப்புகள் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. பெரும்பாலான இஸ்ரேலியர்கள் இந்த ஈரானியப் போரை ஒரு ‘தோல்வி’ என்றே பார்க்கின்றனர்.
மேலும் போர்க்களத்தில் இஸ்ரேல் தனது ராணுவ வலிமையைக் காட்டினாலும், அது நெதன்யாகுவின் அரசியல் நிலையை வலுப்படுத்தவோ அல்லது நாட்டுக்குத் தேவையான நீண்டகாலப் பாதுகாப்புத் தீர்வை வழங்கவோ தவறிவிட்டதாக கடுமையாக கண்டித்துள்ளனர்.
போரின் கால நீட்டிப்பு மற்றும் அதன் விளைவுகள் குறித்து இஸ்ரேலிய மக்களிடையே அதிருப்தி அதிகரித்து வருவது நெதன்யாகுவின் தலைமைத்துவத்திற்குப் பெரும் சவாலாக தற்போது உருவெடுத்துள்ளது.
“தெஹ்ரானை வீழ்த்தி ஒரு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்வோம் என்ற நெதன்யாகுவின் வாக்குறுதி, போர்க்கள யதார்த்தத்தில் இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது.”
ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் மற்றும் பிராந்திய ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இஸ்ரேல் இந்தப் போரைத் தீவிரப்படுத்தியது. ஆனால், ஆறு வாரங்கள் கடந்த நிலையிலும் ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படாதது, சர்வதேச அளவிலும் இஸ்ரேலுக்கு அழுத்தங்களை உருவாக்கி வருகிறது.
ராணுவ ரீதியாக சில இலக்குகளை எட்டியிருந்தாலும், போரை ஒரு முழுமையான வெற்றியாக மாற்றி, அதன் மூலம் தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்த நெதன்யாகு போராடி வருகிறார் என்பதே தற்போதைய களநிலவரம்.


