முறிகண்டியில் புகையிரதத்துடன் கார் மோதி விபத்து: தம்பதியினர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!
கிளிநொச்சி – முறிகண்டி பகுதியில் இன்று (16) சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்து ஒன்று அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் தம்பதியினர் இருவர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
முறிகண்டி பகுதியில் அமைந்துள்ள புகையிரதப் பாதையை கார் ஒன்று கடக்க முற்பட்ட வேளையில், அதே திசையில் வந்துகொண்டிருந்த புகையிரதத்துடன் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது காரில் பயணித்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவருமே காயங்களுக்குள்ளாகினர்.
விபத்து இடம்பெற்ற உடனேயே அப்பகுதி மக்கள் மற்றும் அவசர உதவிப் பிரிவினர் இணைந்து காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். காயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அப்பகுதிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய உடல்நிலை குறித்து வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.



