ஜூட் சமந்த
புத்தளம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் 7,206 குடும்பங்களைச் சேர்ந்த 27,222 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் இந்திக சில்வா தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக புத்தளம், வனாத்தவில்லுவ மற்றும் ஆனமடுவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 22 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்:
- விசுத்தாராம விகாரை: 14 குடும்பங்களைச் சேர்ந்த 47 நபர்கள்.
- இந்து கோவில் (புத்தளம் தெற்கு): 2 குடும்பங்களைச் சேர்ந்த 5 நபர்கள்.
தற்போது முகாம்களில் தங்கியுள்ள 52 நபர்களுக்கும் தேவையான சமைத்த உணவுகளை வழங்கும் பணிகளை இடர் நிவாரண சேவை உத்தியோகத்தர்களும், கிராம உத்தியோகத்தர்களும் முன்னெடுத்து வருகின்றனர்.
அரசு அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் நீரில் மூழ்கின
வெள்ள நீர் ஊடுருவியதால் புத்தளம் நகரின் முக்கிய அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக:
- புத்தளம் ஆதார வைத்தியசாலை
- பொலிஸ் நிலையம்
- பிரதேச செயலகம்
- வானிலை ஆய்வு அலுவலகம்
- சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம்
- அரச உத்தியோகத்தர் விடுதிகள்
அத்துடன், இந்துக்கல்லூரி, பாத்திமா மத்திய மகா வித்தியாலயம், சாகிரா கல்லூரி மற்றும் ஆண்ட்ரூ ஆனந்த வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளும் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளன.
போக்குவரத்து பாதிப்புகள்
மழைவெள்ளம் காரணமாக வீதி மற்றும் புகையிரத போக்குவரத்துகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
- புகையிரத பாதை: வெள்ள நீர் காரணமாக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
- பிரதான வீதிகள்: புத்தளம் – அனுராதபுரம், புத்தளம் – குருநாகல் மற்றும் புத்தளம் – சிலாபம் ஆகிய பிரதான வீதிகளின் சில இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.





