இலங்கையில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயின் பரவல் மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் தீவிரமடைந்துள்ளதுடன் நாடு தழுவிய ரீதியில் 15 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுளள்து.
தற்போதைய அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, நடப்பு ஆண்டில் இதுவரை 29,589 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.
வழக்கமாக வீடுகளைச் சுற்றியே கண்டறியப்படும் டெங்கு நுளம்புக் குடம்பிகள், தற்போது பாடசாலைகள், அரச நிறுவனங்கள், தனியார் பணியிடங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் முன்னெப்போதையும் விட மிக அதிகளவில் பெருகி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பொது இடங்களில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகம் என்பதால், தொற்று பரவும் வேகம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதாக சமூக மருத்துவ நிபுணர் டாக்டர் பிரஷீலா சமரவீர எச்சரித்துள்ளார்.
இந்த ஆண்டின் (2026) டெங்கு பரவல் விபரம்
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே டெங்கு பரவலின் வேகம் அதிகரித்துக் காணப்படுகிறது. நாடு முழுவதும் 39 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் அதிவேக டெங்கு ஆபத்துள்ள வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் மேல் மாகாணம் முதலிடத்திலும், அதற்கு அடுத்தபடியாக தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் 25 மாவட்டங்களிலும் நோயாளர்கள் பதிவாகி வரும் போதிலும், கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, காலி, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே மிக அதிகப்படியான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு (2025) இதே காலப்பகுதியில் (மே நடுப்பகுதி வரை) சுமார் 22,500 நோயாளர்களே பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 29,000 ஐத் தாண்டியுள்ளது பரவலின் தீவிரத்தை உணர்த்துகிறது.
கடந்த ஆண்டின் (2025) முழுமையான டெங்கு தரவுகள்
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 51,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த அதேவேளை, கடந்த ஆண்டில் ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களிலே டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உச்சமடைந்திருந்ததாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


