டித்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவருக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணத் தொகையில், பெருந்தொகையை இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக்கொண்ட கிராம உத்தியோகத்தர் மற்றும் அவரது உதவியாளர் ஒருவரை இலஞ்ச ஒழிப்புப் பிரிவினர் கையும் மெய்யுமாக கைது செய்துள்ளனர்.
💰 20 லட்சம் ரூபாயில் பாதியை கேட்ட “அதிகார துஷ்பிரயோகம்”
‘திட்வா’ புயலினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளரின் வீட்டை புனரமைக்க, அரசாங்கத்தினால் 50 இலட்சம் ரூபாய் நிதி உதவி அங்கீகரிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிதியின் முதல் தவணையாக வழங்கப்பட்ட 20 இலட்சம் ரூபாயில், 10 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக வழங்குமாறு சந்தேகநபர்கள் பயனாளியிடம் கோரியுள்ளனர்.
அதுமட்டுமன்றி, அடுத்தடுத்த தவணைக் கொடுப்பனவுகளின் போதும் தலா 5 இலட்சம் ரூபாய் வீதம் தங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் நிபந்தனை விதித்துள்ளதாக அதிர்ச்சி தகவலை முறைப்பாட்டாளர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்று (2026.05.22) பிற்பகல் 2.45 மணியளவில் மொணராகலை தலைமையகக் காவல் நிலையத்தில் வைத்து இந்த அதிரடி கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மொணராகலை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராம உத்தியோகத்தரான வெலலியத்த கெதர நிமல் மற்றும் பெலவத்தை சீனி தொழிற்சாலையில் பணியாற்றும் குரூஸ் வின்சென்ட் ஆகியோரே இவ்வாறு இலஞ்ச ஒழிப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் மொணராகலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவர்களை எதிர்வரும் 2026 மே 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முக்கிய குறிப்பு: உங்கள் உரிமைகளைப் பறிக்கும் வகையில் எவரேனும் இலஞ்சம் கோரினால், உடனடியாக 1954 என்ற இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அவசர அழைப்பு இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுங்கள்.
ஆதாரம்: இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (ஊடக அறிக்கை இலக்கம்: 2026/059).



