கொழும்பில் இருந்து வடக்கே சுமார் 105 கிலோமீட்டர் பயணித்தால், இயற்கை அன்னை தன் இரு கரங்களால் அள்ளி அணைத்தபடி வைத்திருக்கும் ஒரு விசித்திரமான கிராமத்தை நீங்கள் அடையலாம். அதுதான் உடுப்பு எனும் அழகிய கிராமம்.
மேற்குப் பக்கம் ஆர்ப்பரிக்கும் இந்தியப் பெருங்கடல், கிழக்கே அமைதி காக்கும் முந்தல் ஏரி, தெற்கே சுற்றுலாப் பயணிகளைக் காந்தமாய்க் கவரும் ஆண்டிமுனை மணல் குன்றுகள் என இயற்கையின் அத்தனை எழிலும் கொட்டிக்கிடக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரியத் தமிழ் கிராமமே இந்த உடப்பு.
சுமார் 15,000இற்கும் அதிகமான மக்கள் வாழும் இந்த உடுப்பு கிராமம், வெறும் மீன்பிடி கிராமம் மட்டுமல்ல. பாரம்பரிய மீன்பிடித் தொழில், கடலோர இறால் வளர்ப்பு மற்றும் நுணுக்கமான பொற்கொல்லு தொழில் (தங்க நகைகள் செய்தல்) எனப் பன்முகத்தன்மையோடு இக்கிராமத்தின் பொருளாதாரம் சுழல்கிறது.
இந்தக் கிராமத்தின் மிக சுவாரஸ்யமான அம்சமே இவர்களின் கலாசாரப் பின்னணிதான். சிலாபம் கடற்கரையோரத்தைச் சுற்றியுள்ள பிற மீன்பிடி கிராம மக்கள் பெரும்பாலும் கத்தோலிக்கர்களாகவோ அல்லது பௌத்தர்களாகவோ, தங்களைச் சிங்களவர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் ‘கறாவே’ சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அதற்கு நேர்மாறாக உடுப்பு மக்கள் முற்றிலும் தனித்துவமானவர்கள்!
இவர்கள் ‘கரையார்’, ‘அம்பலவாணர்’, ‘ஆசாரி’ (பொற்கொல்லர்) மற்றும் ‘செட்டி’ போன்ற சமூகக் கட்டமைப்பைக் கொண்ட இந்துத் தமிழர்கள் ஆவர். இவர்கள் தமக்கே உரித்தான, முற்றிலும் மாறுபட்ட மற்றும் தனித்துவமான வழிபாட்டு முறைகளையும் வாழ்வியலையும் இன்றும் தங்களின் அடையாளமாகப் பாதுகாத்து வரும் அதேவேளை அன்றுதொட்டு இன்றுவரை முஸ்லிம்களும் தமிழர்களோடு ஒன்றோடு ஒன்றாக இதே கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்துவருகின்றனர்.
யுத்த வடுக்களும் தற்போதைய வாழ்வியலும்:
அமைதியான இந்த இயற்கைச் சூழலுக்குப் பின்னணியில், நீண்டகாலமாக நீடித்த இலங்கை உள்நாட்டுப் போரின் ஆறாத வடுக்களும் மறைந்துள்ளன. யுத்தத்தின் கோரப்பிடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இந்தக் கிராமத்தில், நாட்டின் பிற பகுதிகளிலிருந்து, குறிப்பாகக் கிழக்கின் திருகோணமலை மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த பெருமளவிலான தமிழ் அகதிகளும் தஞ்சம் புகுந்து இங்கு வாழ்ந்து வருகின்றனர்.
யுத்த காலப் பாதிப்புகள் இந்த மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தையும் சமூகப் பொருளாதாரத்தையும் இன்னும் ஆழமாகப் பாதித்துக் கொண்டே இருக்கின்றன என்பது கசப்பான உண்மை.
அதிகாலையில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து, மாலையில் கரையேறும் எளிய தமிழ் மக்களின் வாழ்விடம். ஆன்மீகப் பெருமை வாய்ந்த, இலங்கையில் பிரசித்திபெற்ற ‘ஸ்ரீ பார்த்தசாரதி’ ஆலயத்தைக் கொண்டுள்ள புண்ணியமும், அமைதியும் நிறைந்த உடப்பு கிராமம் இயற்கையின் கோரத் தாண்டவத்தாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் மெல்ல மெல்லக் கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் அதிர்ச்சித் தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கரையைத் தாண்டும் கடல்: வீடுகளைக் காவு கொள்ளும் அலைகள்!
அண்மைக் காலமாக உடப்பு கிராமத்தில் கடலரிப்பின் வேகம் முன்னெப்போதையும் விடக் கடுமையாக அதிகரித்துள்ளது. அலைகளின் சீற்றம் தற்போது மக்களின் குடியிருப்புப் பகுதிகள் வரை ஊடுருவியுள்ளது. கடற்கரையோரம் இருந்த பல வீடுகள் ஏற்கனவே கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. எஞ்சியிருக்கும் வீடுகளும் எந்த நேரத்திலும் கடலுக்குள் விழலாம் என்ற மிக ஆபத்தான நிலையிலேயே உள்ளன.
“இரவில் தூங்கப் பயமாக இருக்கிறது. எப்போது அலை வந்து எங்கள் வீட்டை இழுத்துச் செல்லும் என்று தெரியவில்லை” என அப்பகுதி மக்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.
கண்துடைப்பு நடவடிக்கைகள்: மண்ணுக்குள் புதைந்த கருங்கற்கள்!
மக்களின் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, தற்காலிகத் தீர்வாகக் கடலோரத்தில் சில கருங்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால், அது வெறும் “கண்துடைப்பு” நடவடிக்கை மட்டுமே என்பதைத் தற்போதைய நிலைமை நிரூபித்துள்ளது. முறையான திட்டமிடல் இன்றிப் போடப்பட்ட அந்தக் கற்களையும் தாண்டி கடல் நீர் ஊடுருவியுள்ளதுடன், அலைகளால் இழுத்து வரப்பட்ட மணல் அந்தக் கற்களை முழுமையாக மூடிவிட்டது. இதனால், கடலரிப்பைத் தடுப்பதற்காகச் செய்யப்பட்ட செலவுகள் அனைத்தும் வீணாகியுள்ளன என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உடப்பு கிராமத்திற்கு ஆபத்து கடலிலிருந்து மட்டுமல்ல, நிலத்திலிருந்தும் வருகின்றது. மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு இந்தக் கிராமத்தைப் பெரிதும் வதைக்கிறது. குறிப்பாக, வெள்ளநீர் கலப்பு (Lagoon) வழியாகப் பெருங்கடலுக்கு வெளியேற்றப்படும்போது, அதை அண்மித்துள்ள குடியிருப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் மிகத் தீவிரமான அரிப்புக்குள்ளாகின்றன.
இது ஒருபுறமிருக்க, பருவப்பெயர்ச்சிக் காற்று (Monsoon Wind) வீசும் காலங்களில் கடலரிப்பின் வேகம் பல மடங்கு அதிகரித்து, கிராமத்தையே வரைபடத்திலிருந்து ஒட்டுமொத்தமாக இல்லாதொழிக்கும் ஒரு துர்பாக்கிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியும் மௌனம் காக்கும் அரசு!
தங்கள் வாழ்வாதாரமும், சொந்த மண்ணும் அழிவதைக் கண்டு சகிக்காத உடப்பு கிராம மக்கள், இந்த அவல நிலை குறித்து நேரடியாக ஜனாதிபதிக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர். எனினும், இதுவரை எவ்விதமான ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் வேதனையான உண்மை.
உரிய அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் இந்த விடயத்தில் தொடர்ந்து அலட்சியம் காட்டி, கோப்புகளை இழுத்தடித்து வருகின்றனர்.
இறுதி எச்சரிக்கை: அழியப் போகிறதா ஒரு பாரம்பரிய கிராமம்?
அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கு நீடித்தால், இலங்கையின் மிக அழகிய ஒரு மீனவக் கிராமமும், அங்குள்ள மக்களின் பல தசாப்த கால வரலாறும் கடலுக்குள் சங்கமமாகிவிடும் பேராபத்து எழுந்துள்ளது.
இனிமேலும் தற்காலிகக் கண்துடைப்புகளைச் செய்யாமல், உடப்பு கிராமத்தைக் காப்பாற்ற “நிரந்தரக் கடல் தடுப்பு அணை” போன்ற முறையான பொறியியல் தீர்வுகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே ஒட்டுமொத்தப் பொதுமக்களினதும், சமூக ஆர்வலர்களினதும் அவசரக் கோரிக்கையாகும்!






