நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகம் இன்று காலை ஒரு யுத்தக் களமாக மாறியுள்ளது. இன்று (06) காலை 10.15 மணியளவில் சிறைச்சாலைக்குள் மீண்டும் ஒரு பாரிய வன்முறை வெடித்துள்ளது. ஆரம்பத்தில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்டதாகக் கருதப்பட்ட இந்த மோதல், கணப்பொழுதில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையிலான பெரும் போராக உருவெடுத்தது. நிலைமை விபரீதமானதை அடுத்து, வன்முறையைக் கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.
நேரம் செல்லச் செல்ல சிறைச்சாலைக்குள் இருந்து வந்த செய்திகள் ஒட்டுமொத்த நாட்டையும் அதிரவைத்துள்ளன. முற்பகல் 11.38 மணியளவில் 5 பேரின் மரணத்துடன் ஆரம்பித்த இந்த கொடூரம், மதியம் 12.00 மணிக்கு 7 ஆகவும், 12.46 மணிக்கு 19 ஆகவும் உயர்ந்து, இறுதியாகக் கிடைத்த உத்தியோகபூர்வ தகவல்களின்படி பலி எண்ணிக்கை 25 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த பலி எண்ணிக்கையானது தற்போதைய நிலவரப்படி மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் அதிகாரிகளும் அடக்கம்: மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர்!
இந்த கொடூர மோதலில் கைதிகள் மாத்திரமன்றி, கடமையில் இருந்த சிறை உத்தியோகத்தர்கள் நால்வரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், பாதுகாப்புப் படையினர் மற்றும் கைதிகள் உட்பட சுமார் 100 பேர் வரை படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வைத்தியசாலை வளாகத்திலும் தற்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஆரம்பக்கட்ட மோதலில் இரு கைதிகள் உயிரிழந்ததுடன் 38 பேர் காயமடைந்திருந்தனர். அவர்கள் இன்னமும் சிகிச்சை பெற்று வரும் நிலையிலேயே, இன்று காலை இந்தத் திடீர் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. சிறைச்சாலையின் உட்பகுதியில் தற்போதும் பதற்றமான சூழல் நிலவுவதுடன், மேலதிக இராணுவ மற்றும் பொலிஸ் பிரிவினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.



