இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மூலோபாய பொருளாதார வளர்ச்சித் திட்டத்தை (Economic Growth Plan), தற்போதைய அரசாங்கம் முற்றாகக் கைவிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் தினுக் கொழம்பகே விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இந்தத் திடுக்கிடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அப்படியென்றால், நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பாதையில் என்னதான் நடக்கிறது? தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆரம்பக் கட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் திட்டத்தை மட்டுமே அரைகுறையாக முன்னெடுத்திருந்தது. ஆனால், நாட்டின் உண்மையான முன்னேற்றத்திற்குத் தேவையான பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை அதனுடன் இணைத்து ஒத்திசைவாகக் கொண்டு செல்ல இந்த அரசாங்கம் முற்றாகத் தவறிவிட்டது என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரத் திட்டத்தின் பிரதான இலக்காக இருந்தது இலங்கை ரூபாயின் மதிப்பை வலுப்படுத்துவதும், நாட்டின் பணவீக்கத்தை 3% க்கும் குறைவான மட்டத்தில் கட்டுக்குள் வைத்திருப்பதுமே ஆகும். ஆனால், இன்றைய நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியைக் பொறுப்பேற்ற நாள் முதல், இலங்கை ரூபாய் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதுடன், பணவீக்கம் 6% ஐயும் தாண்டி எகிறியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்டக்கூடிய எந்தவொரு புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்த தற்போதைய அரசாங்கம் அடியோடு தவறியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை முன்னெடுத்து வரும் திட்டமானது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வித பங்களிப்பும் செய்யாத, வெறும் பொருளாதாரத்தை ஒரு இடத்தில் முடக்கி வைக்கும் (Economic Stabilization) ஒரு தனித்த திட்டமாக மட்டுமே சுருங்கிப் போயுள்ளது.
இறுதியாக, தற்போதைய அரசாங்கத்திடம் ஐக்கிய தேசியக் கட்சி மில்லியனுக்கும் டாலர் பெறுமதியான கேள்வியொன்றை முன்வைத்துள்ளது. “நாட்டின் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு நிதியியல் ரீதியாகத் தயாராகும் அதேவேளையில், மறுபுறம் வறுமையை ஒழித்து, சாதாரண மக்களின் வருமான மட்டத்தை எவ்வாறு உயர்த்தப் போகிறீர்கள்?” என்ற எரியும் கேள்விக்கு தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என அந்த அறிக்கை அதிரடியாக வலியுறுத்தியுள்ளது.


