இலங்கையின் இயற்கை அழகை கண்டு ரசிப்பதற்காகப் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்தவண்ணம் உள்ளனர். ஆனால், நாட்டைத் தேடிவரும் விருந்தினர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அப்படியொரு அதிர்ச்சிச் சம்பவம்தான் தற்போது நாட்டின் பிரபல சுற்றுலாத் தலமான கல்பிட்டி பகுதியில் இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
தலவில – கப்பலடிப் பகுதியில் அமைந்துள்ள முன்னணி சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த இவர், கல்பிட்டியின் அழகை ரசித்தபடி தலவில – களப்புப் பள்ளி வீதியில் சென்று கொண்டிருந்த அந்த நொடியில்தான், அந்தத் திடுக்கிடும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
திடீரென அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அந்தப் பெண்ணின் அருகில் உரசி நின்றது. அதில் வந்த மர்ம நபர் ஒருவர், அச்சமுற்ற அந்த வெளிநாட்டுப் பெண்ணை பலவந்தமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், கூச்சலிட்டுத் தப்பியோடித் தன் உயிரையும் கற்பையும் காப்பாற்றிக் கொண்டுள்ளார்.
காயப்பட்ட மனதுடன் உடனடியாகச் செயற்பட்ட அந்த ஈரான் பெண், கல்பிட்டி காவல் நிலையத்திற்குச் சென்று தனக்கு நேர்ந்த கொடுமை குறித்துப் புகார் அளித்துள்ளார். நாட்டிற்குச் சுற்றுலா வரும் வெளிநாட்டவர் ஒருவருக்கு நாட்டின் வீதியிலேயே இவ்வாறானதொரு அச்சுறுத்தல் ஏற்பட்டது சுற்றுலாத் துறையினரிடையேயும் அப்பகுதி மக்களிடையேயும் பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்துள்ள கல்பிட்டி காவற்துறையினர், தப்பியோடிய மோட்டார் சைக்கிள் ஆசாமியைக் கைது செய்யப் பெருமுயற்சி எடுத்து வருகின்றனர். “சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும், குற்றவாளி யார் என்பது விரைவில் அடையாளம் காணப்பட்டுச் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்” என காவற்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறையினரின் தீவிர விசாரணை தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது!
ஜுட் சமந்த


