இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உண்மையிலேயே சுயாதீனமாகத்தான் செயற்படுகிறதா அல்லது குறிப்பிட்ட ஒரு சில உயர்மட்டப் பிரிவினரைப் பாதுகாப்பதற்காக மட்டும் இயங்குகிறதா என்ற கேள்வி தற்போது அரசியல் அரங்கில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தொடர்பில் “அவர்கள் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தைப் பாதுகாக்கிறார்களா?” என்று ஊடகங்கள் முன்னிலையில் கேள்வி எழுப்பியதுடன், அவர்களின் நடுநிலைமைத் தன்மை குறித்தும் விமர்சனங்களை முன்வைத்துள்ள விடயம் பெரும் அதிரவலையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அல்லது அவரது மகன் தொடர்பில் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டால் அது தமக்கு “மிக்க மகிழ்ச்சியைத் தரும்” எனப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அனைத்து விவகாரங்களிலும் சட்டத்தரணிகள் சங்கம் ஒரே மாதிரியான தரநிலைகளையும் நீதியையும் தான் கடைப்பிடிக்கிறதா என்பதை இதன் மூலம் மக்கள் அறிந்துகொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஊடகங்களிடம் மேலும் கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, “சட்டத்தரணிகள் சங்கத்தின் நடவடிக்கைகள் உண்மையிலேயே நேர்மையானவையா அல்லது ஒரு குறிப்பிட்ட சமூக வகுப்பினரைக் காப்பாற்றுவதற்காக எடுக்கப்படும் முயற்சிகளா என்பதை இத்தகைய தருணங்களில்தான் உறுதிப்படுத்த முடியும்” எனக் காரசாரமாகத் தெரிவித்தார்.
அரசியல் அரங்கில் இந்த விவாதம் ஒருபுறம் சூடுபிடித்துள்ள நிலையில், நாட்டின் நீதித்துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவர அரசாங்கம் தயாராகி வருவது குறித்த மற்றொரு முக்கிய தகவலும் வெளியாகியுள்ளது.
அதன்படி, இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக விசேட அரசமைப்புத் திருத்தம் (Constitutional Amendment) ஒன்றைக் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். நீதித்துறை சார்ந்த கட்டமைப்பு மாற்றங்களுக்கு அரசமைப்புத் திருத்தம் அவசியமானது என்றும், ஏனைய துறைசார் சீர்திருத்தங்கள் அமைச்சு மட்டத்திலேயே விரைவாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அசித்த நிரோஷன, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து மாகாண சபைத் தேர்தல் முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்காக அரசியல் உடன்படிக்கை செய்துகொண்டதாக நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


