Friday, September 25, 2026
Sponsored advertisementspot_img
Home Local News சிலாபம் வீதியில் போதையில் இரவு 10 மணிக்கு நடந்த கோர நாடகம்!

சிலாபம் வீதியில் போதையில் இரவு 10 மணிக்கு நடந்த கோர நாடகம்!

397 views

ஜுட் சமந்த

நிசப்தமான இரவில், ஆள் நடமாட்டம் குறைந்த அந்த வீதியில் வீசிய காற்று வெறும் சாதாரண காற்று அல்ல; அது ஒரு தொழிலதிபரின் உயிரைப் பறிக்கப் பார்த்த திகில் கணங்களின் தொடக்கம். கடந்த ஜூலை 26 ஆம் திகதி இரவு 10.00 மணியளவில் சிலாபம் – ஜெயபிம பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த தொழிலதிபர் இந்திக மனோஜ் பிரசன்ன குமாரவுக்கு, தன் முன்னால் சென்ற கார் ஒரு சாதாரண கார் அல்ல என்பது சட்டென்று புரிந்தது.

முன்னால் சென்ற காரில் இருந்தவர்கள் மது அருந்திக்கொண்டே அபாயகரமான முறையில் வாகனத்தை செலுத்தியதை அவதானித்த தொழிலதிபர், அவர்களை முந்திச் செல்ல முயன்றார். ஆனால், எதிர்பாராதவிதமாக இரு கார்களும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின. அந்த நொடியில் இருந்துதான் உண்மையான அச்சுறுத்தல் தொடங்கியது.

அச்சமயத்தில் தொழிலதிபரின் காரினுள் 11 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், விலையுயர்ந்த மாணிக்கக் கற்கள் மற்றும் அவரது பாதுகாப்புக்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட தனிப்பட்ட கைத்துப்பாக்கி என்பன இருந்துள்ளன. விபத்து நடந்த கையோடு, வீதியில் நின்ற வேறு சிலருடன் சேர்ந்து கொண்ட அந்த மதுபோதைக் கும்பல், தொழிலதிபரைச் சுற்றி வளைத்து, கொடூரமாகத் தாக்கவும் வாகனத்திற்குச் சேதம் விளைவிக்கவும் முயன்றது.

வெளியே வந்தால் உயிர் ஆபத்து என்பதை உணர்ந்த தொழிலதிபர், பொலிஸார் வரும் வரை காரினுள்ளேயே பூட்டிக்கொண்டு, நடக்கும் அனைத்து வன்முறைகளையும் தன் கையடக்கத் தொலைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்தார். பொலிஸார் வந்ததும், மதுபோதையில் காரைச் செலுத்திய நபரைக் காப்பாற்ற வேறு ஒருவரைச் சாரதியாக மாற்ற அக்கும்பல் முயன்றது. ஆனால், தொழிலதிபரின் எதிர்ப்பால் அது முறியடிக்கப்பட்டு, பரிசோதனையில் அந்தச் சாரதி மது அருந்தியிருந்தது உறுதியானது.

ஆனால், உண்மையான அதிர்ச்சி அதன்பின்னர்தான் காத்திருந்தது. இரு தரப்பையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற சிலாபம் பொலிஸார், பாதிக்கப்பட்ட தொழிலதிபரை மட்டும் கூண்டில் அடைத்து மறுநாள் நீதிமன்றில் ஆஜர்படுத்தி பிணையில் அனுப்பியுள்ளனர். தனக்கு கொலை மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்த முயன்ற நபர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சிலாபம் தலைமையக பொலிஸ் பரிசோதகர் எதிர்தரப்பிற்கு சாதகமாகச் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ள தொழிலதிபர், இநீதிக்கு எதிராக தற்போது பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.