ஜுட் சமந்த
கடலோர கிராமத்தின் நள்ளிரவு அமைதியை கிழித்துக்கொண்டு புகுந்த பொலிஸ் குழு, அங்கு கண்ட காட்சி அதிகாரிகளையே உரைய வைத்தது. கல்பிட்டி – மண்டலக்குடாவ பகுதியில் வசிக்கும் 50 வயதுடைய பெண் ஒருவரின் வீட்டில் நீண்டநாட்களாக நடந்துவந்த இரகசிய நிழல் உலக வியாபாரம் ஒரே அடியில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
புத்தளம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாசவிற்கு கிடைத்த துல்லியமான இரகசியத் தகவலே இந்த விசேட வேட்டையின் திருப்புமுனையாக அமைந்தது. இதனையடுத்து, புத்தளம் பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பெர்னாண்டோ தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆகஸ்ட் 12ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் குறித்த வீட்டை சுற்றி வளைத்தனர்.
வீட்டின் அறை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 பொலித்தீன் பைகளை பரிசோதித்தபோது, அதற்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த 1,764 சட்டவிரோத கடல் சங்குகள் கண்டெடுக்கப்பட்டன. சுற்றாடல் அமைப்பிற்கும் கடல்வளத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்தச் சங்குகளை சேகரித்து, சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு கடத்துவதே இவர்களின் முதன்மை திட்டமாக இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள பெண் மற்றும் கைப்பற்றப்பட்ட பெரும் அளவிலான சங்குத் தொகுதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்ட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச கடத்தல் பின்னணியில் இயங்கும் ஏனைய நபர்களை வலைவீசித் தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.





