போதைப்பொருள் கடத்தல் மூலம் கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்து வந்த பாதாள உலகப் பெண் புள்ளியொருவரின் சட்டவிரோத சாம்ராஜ்யத்திற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய கறுப்புப் பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாக கையகப்படுத்திய குற்றச்சாட்டில், ‘பொட்டி’ என அழைக்கப்படும் விந்தனிய சூரியாரச்சி என்ற பெண் அதிரடியாகக் கைது செய்யப்பட்டிருந்தார்.
சிஐடியின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, தீவிர தடுப்புக் காவல் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த இவர், இன்று (14) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
14 வருட கடத்தல் பின்னணி:
குறித்த பெண் கடந்த 14 வருடங்களாக ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை நடத்தி, அதன் மூலம் 850 இலட்சம் ரூபாவிற்கும் (8.5 கோடி) அதிகமான பெறுமதியான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை சேர்த்துள்ளமை விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, போதைப்பொருள் பணத்தில் கொழும்புக்கு அருகாமையில் வாங்கிக் குவிக்கப்பட்ட மூன்று சொகுசு வீடுகள், மூன்று வர்த்தக நிலையங்கள் (கடைகள்) மற்றும் ஆறு வங்கிக் கணக்குகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது முழுமையாகத் தடை செய்து முடக்கியுள்ளது.
நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளதால் விரிவான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எனவே சந்தேகநபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் கோரினர்.
பொலிஸாரின் சான்றுகளையும் சமர்ப்பணங்களையும் கவனத்தில் கொண்ட கொழும்பு நீதவான் நீதிமன்றம், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள குறித்த பெண் சந்தேகநபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.


