கல்பிட்டி, ஏத்தாளை பிரதேச மக்களின் நீண்டகால வர்த்தக மற்றும் பொருளாதாரக் கனவுகளை நனவாக்கும் வகையிலான பாரிய அபிவிருத்தித் திட்டமொன்றுக்கு உத்தியோகபூர்வமாக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பிரதேச மக்களின் பொருளாதார நடவடிக்கைகளை இலகுபடுத்தவும், வர்த்தக வசதிகளைப் பலப்படுத்தவும் அமையவுள்ள ‘ஏத்தாளை பல்நோக்கு வர்த்தக மத்திய நிலையத்தின்’ கட்டுமானப் பணிகள் மிக விமரிசையாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
அப்பகுதியின் எதிர்கால வர்த்தக முகத்தையே மாற்றியமைக்கவுள்ள இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, 2026 ஆகஸ்ட் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 08.00 மணியளவில் ஏத்தாளையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இத்திட்டத்தின் நிதிப் பின்னணியும் அதன் பிரம்மாண்டமும் பிரதேச மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாகாண அமைச்சின் ஊடாக 1 கோடி ரூபாயும், கல்பிட்டி பிரதேச சபையின் ஊடாக 92 இலட்சம் ரூபாயும் என, மொத்தமாக 1 கோடியே 92 இலட்சம் ரூபாய் நிதி இதற்காக நேரடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விசேட நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன மற்றும் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கயான் ஜானக ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
அவர்களுடன் இணைந்து, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.ஜே.எம். பைசல், கல்பிட்டி பிரதேச சபையின் தலைவர் ஏ.எஸ்.எம். ரிகாஸ், உப தலைவர் சமன் குமார, கல்பிட்டி தொகுதி அமைப்பாளர் சஞ்சீவ பெர்னாண்டோ, ஏத்தாளை வட்டார கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஷிபான் உள்ளிட்ட சபை உறுப்பினர்கள், பிரதேச சபைச் செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் பெருந்திரளான பிரதேசவாசிகள் இந்நிகழ்வில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.




