வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கண்டி எசல பெரஹர உற்சவம் களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், ஒட்டுமொத்த கண்டி நகரையும் உச்சக்கட்ட பாதுகாப்பு வலயத்திற்குள் கொண்டுவர இலங்கை பொலிஸார் தீர்மானித்துள்ளனர். நாளை (18) முதல் பெரஹர பருவகாலம் முடியும் வரை இந்த விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம் முழுமையாக அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கும்பல் பெரஹர நாளை ஆரம்பமாகி ஒகஸ்ட் 22ஆம் திகதி வரை வீதி உலா வரவுள்ளதுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க ரந்தோலி பெரஹர ஒகஸ்ட் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மிக விமரிசையாக இடம்பெறவுள்ளது.
நாடெங்கிலும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், முன்னெப்போதும் இல்லாத வகையில் முப்படையினரின் ஒருங்கிணைப்புடன் பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கடமைகளுக்காக 6,200 பொலிஸ் அதிகாரிகள், 564 விசேட அதிரடிப் படையினர் (STF), முப்படையைச் சேர்ந்த 1,200 வீரர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 29 பேர் என பெரும் படையணியே களமிறக்கப்பட்டுள்ளது. அத்துடன், எந்தவொரு சந்தேகத்திற்கிடமான நகர்வுகளையும் கண்டறிய பொலிஸ் மோப்ப நாய் பிரிவுகளும் முழுநேரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
நகரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கண்டி நகருக்குள் நுழையும் 14 முக்கிய நுழைவுப் புள்ளிகளை உள்ளடக்கி விசேட வீதி மறிப்புச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வழிகாட்டல்களும் அதே இடத்தில் வழங்கப்படும்.
பெரஹரவை நேரில் கண்டு ரசிக்க வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக 13 பிரத்தியேக வாகன நிறுத்துமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் இலகு ரக வாகனங்களுக்காக 6 இடங்களும், கன ரக வாகனங்களுக்காக 7 இடங்களும் பிரிக்கப்பட்டு நெரிசலற்ற போக்குவரத்து முகாமைத்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, பெரஹர காலப்பகுதியில் அவசியமின்றி கண்டி நகருக்குள் பிரவேசிக்காமல் பிற இடங்களுக்குப் பயணிக்கும் சாரதிகளின் நலன் கருதி, மாற்றுப் பாதைகளை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். எனவே, சாரதிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரின் இந்த விசேட போக்குவரத்து நெறிப்படுத்தல்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிஸ் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.


