ஜுட் சமந்த
கல்பட்டிக்கு வடக்கே அமைந்துள்ள பத்தலங்குண்டு தீவை அண்டிய கடல் பிராந்தியம் என்பது வெறும் மீன்பிடி எல்லை மட்டுமல்ல; அது பல வருடங்களாகத் தீராத மர்மங்களும் கடத்தல்களும் நிறைந்த ஒரு களமாகும். இந்திய எல்லை தாண்டிய படகுகள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து ‘ட்ரோலிங்’ முறை மூலம் கடல் வளங்களை அள்ளிச் செல்வதுடன் நின்றுவிடுவதில்லை. பீடி இலைகள், கேரள கஞ்சா, தடைசெய்யப்பட்ட கிருமிநாசினிகள் இலங்கைக்குள் இறக்கப்படுவதும், இங்கிருந்து சங்கு, கடல் அட்டை, தங்கம் என்பன சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதும் இன்றும் தொடர்கதையாகவே உள்ளது.
சுமார் 23 வருடங்களுக்கு முன்னர், அதாவது 2003 ஒக்டோபர் 27 அன்று, கல்பட்டி கடலில் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் புத்தளம் உதவி கடற்றொழில் பணிப்பாளர் ராஜா விதானகேக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. படகுகளைப் பதிவு செய்யும் போர்வையில் மாறுவேடத்தில் தனது 3 அதிகாரிகளுடன் பத்தலங்குண்டு தீவுக்குள் களமிறங்கினார் அவர். அங்குதான் யாருமே எதிர்பாராத அந்தப் பரபரப்பான திருப்பம் நிகழ்ந்தது.
தீவிலிருந்து கடலுக்குள் சென்றபோது, இந்தியப் படகொன்று அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருப்பதை அவதானித்துள்ளார். கையில் துப்பாக்கியோ, கூடவே கடற்படையோ, பொலிஸாரோ இல்லாத சூழல். ஆனால் எதையும் பற்றி யோசிக்காமல், உயிராபத்தையும் பொருட்படுத்தாமல் இந்தியப் படகிற்குள் பாய்ந்து ஏறிய ராஜா விதானகே, அதிலிருந்த 6 மீனவர்களையும் அவர்களின் படகு, ஜி.பி.எஸ் கருவி மற்றும் வலைகளுடன் ஒற்றை ஆளாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து வியக்க வைத்தார்.
அதேநேரம் கரைக்குத் திரும்பியதும் நிலைமை தலைகீழானது. தடைசெய்யப்பட்ட வலைகளைப் பறிமுதல் செய்த ஆத்திரத்தில் சில உள்ளூர் முதலாளிகள் கல்பட்டி நகரில் போராட்டத்தைத் தொடங்கினர். இதனால் தரைவழியாகச் செல்ல முடியாது போனதால், கைதான படகுகளுடன் களப்பு வழியாக சேரக்குலிய பகுதிக்கு இரவோடு இரவாகப் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த இருண்ட நள்ளிரவில் (சுமார் 9.10 மணியளவில்) கடற்றொழில் அதிகாரியுடன் பயணித்த ஒரு படகு திடீரென மாயமானது. கல்பிட்டி தீவொன்றுக்குக் கடத்திச் செல்லப்பட்ட அந்த அதிகாரியை, அடுத்த நாள் அதிகாலை 2 மணியளவில் பெரும் வியூகம் அமைத்து சாதுரியமாக மீட்டெடுத்தார் இந்தத் துணிச்சல் அதிகாரி.
இலங்கை வரலாற்றிலேயே ஆயுதமோ அல்லது பாதுகாப்புப் படையினரின் உதவியோ இன்றி நடுக் கடலில் இந்தியப் படகைத் தனி ஆளாகக் கைது செய்த ஒரேயொரு சம்பவமாக இது பதிவானது. இந்த வீரச் செயலுக்கு அரசும் திணைக்களமும் அவருக்குக் கொடுத்த பரிசு என்ன தெரியுமா? அவரது தனிப்பட்ட கோப்பில் எழுதப்பட்ட சில வரி பாராட்டு மட்டுமே.
“என் உயிரையோ, குழந்தைகளையோ பற்றி நினைக்காமல் அன்று செய்த அந்த ஆபத்தான வேட்டைக்கு எனக்குக் கிடைத்தது இந்தக் கோப்பில் எழுதப்பட்ட பாராட்டு மட்டுமே…” என்று ஓர் ஆழ்ந்த பெருமூச்சுடன் விடைபெறுகிறார் ஓய்வுபெற்ற உதவிப் பணிப்பாளர் ராஜா விதானகே.


