புத்தளம் மாவட்டத்தின் முக்கிய போக்குவரத்து இணைப்பாக விளங்கும் உடப்பு மற்றும் ஆண்டிமுனை இடையிலான பிரதான பாலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், பிரம்மாண்ட நிர்மாண அபிவிருத்திப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (31.08.2026) திங்கட்கிழமை சுபவேளையில் சிறப்பாக இடம்பெற்றது.
நீண்டகாலமாக இப்பகுதி மக்கள் எதிர்பார்த்திருந்த இந்த உட்கட்டமைப்புப் பாதுகாப்புத் திட்டமானது, அரசாங்கத்தின் “வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற தேசிய கொள்கைத் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு, ரூபா 83 மில்லியன் நிதியொதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் நேரடி மேற்பார்வையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முழுமையாக முன்னெடுக்கப்படுகின்றது.
இப்பகுதி மக்களின் அன்றாடப் போக்குவரத்துப் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த முக்கியமான முன்னெடுப்பானது, தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைப்பாளருமான கயான் ஜானக, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத் தலைவருமான முகமது பைசல் ஆகியோரின் ஆலோசனையுடனும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைத் தலைவர் ஜயரத்ன ஆகியோரின் ஒத்துழைப்புடனும் களமிறக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர்கள், ‘பிரஜா சக்தி’ சமூக அபிவிருத்தி சங்கத் (CDC) தலைவர்கள், உறுப்பினர்கள், சமூக நலன்விரும்பிகள் மற்றும் பெருந்திரளான பிரதேச பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். இத்திட்டம் நிறைவடையும் போது உடப்பு மற்றும் ஆண்டிமுனை பிரதான வீதியூடான போக்குவரத்து மிகவும் பாதுகாப்பானதாகவும் தடையற்றதாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.





