- போதைப் பொருள் கடத்தலில் சிக்கும் பொலிஸாருக்கு மரண அடி: பொலிஸ் மா அதிபரின் அதிரடி உத்தரவு!
- பாடசாலைகளுக்குள் நுழையும் பொலிஸ் மோப்ப நாய்கள்: போதை மாஃபியாவுக்கு விழுந்த அடுத்த செக்!
- சிறைக்குள் இருந்து இயங்கும் பாதாள உலகம்: ஸ்கெட்ச் போட்டு தூக்க களமிறங்கிய புலனாய்வுப் பிரிவு!
நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொலிஸ் திணைக்களத்திற்குள்ளேயே புரையோடிப் போயிருக்கும் கறுப்பு ஆடுகளுக்கு எதிராக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இறுக்கமான நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளார். குற்றச் செயல்கள், போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் எந்தவொரு பதவித் தராதரமும் பார்க்கப்படாமல் இரக்கமின்றி சேவையிலிருந்து அதிரடியாக நீக்கப்படுவார்கள் என அவர் பகிரங்கமாக முழங்கியுள்ளார்.
நீதியை நிலைநாட்ட வேண்டிய ஒரு பாதுகாப்பு அமைப்பிற்குள் கறைபடிந்த கரங்களுடன் எவரும் நீடிக்க முடியாது என்பதை அழுத்தமாகக் கூறியுள்ள அவர், போதைப்பொருள் பின்னணியில் இயங்கும் பாதாள உலகத்தின் புதிய விபரீதத்தை அடுத்ததாகப் போட்டுடைத்துள்ளார். சிறைச்சாலைச் சுவர்களுக்குள் அடைபட்டிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள், அங்கிருந்தபடியே வெளியே குற்றங்களை இயக்கி வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த சிறைச்சாலை மாஃபியாவை வேரறுக்க புலனாய்வுப் பிரிவினர் தீவிர கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ள அதேவேளை, குற்றப் பின்னணிகளைத் துல்லியமாக அடையாளம் கண்டு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்த அதிரடி வேட்டை இத்துடன் நின்றுவிடவில்லை; நாட்டின் எதிர்காலத்தை சீரழிக்கும் பாடசாலைகளை நோக்கியும் பொலிஸாரின் பார்வை திரும்பியுள்ளது.
பாடசாலை மட்டத்திற்குள் ஊடுருவும் போதைப்பொருள் வலையமைப்பை முழுமையாகக் கண்டறிந்து வேட்டையாடுவதற்காக, விசேட பயிற்சி பெற்ற மோப்ப நாய்களை களமிறக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. இதற்குத் தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்களை எந்த நேரத்திலும் களமிறக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்த பொலிஸ் மா அதிபர், பிஞ்சுக் குழந்தைகளை இந்த கொடிய போதையிலிருந்து மீட்கப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவதானமாகச் செயற்பட வேண்டும் என உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
போதைப்பொருள் பரவலைத் தடுப்பதுடன் அதற்கான விநியோகச் சங்கிலியை அடிமட்டத்தோடு அறுத்தெறிய ஜனாதிபதியின் ‘ரட்டம எகட’ தேசிய வேலைத்திட்டம் தற்போது பிரம்மாண்ட களமிறங்கலுக்கு தயாராகிவிட்டது. இதன் கீழ் 5 பிரதான உயர்நிலைக் குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டம் அனைத்து பாதுகாப்பு மற்றும் துணைச் சேவைகளிடையேயான ஒருங்கிணைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி, போதை மாஃபியாவை முற்றாக ஒடுக்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.


