- சவூதி அரேபியாவில் சிவராசா அனோஜன் என்ற இலங்கை இளைஞருக்கு அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றில் இன்று அறிவித்தார்.
- அனோஜனை இணையக் குற்றவியல் சட்டத்திற்குப் பதிலாக ‘ஷரியா’ சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என சவூதி அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த மேன்முறையீட்டை அடுத்தே இம்மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு பொதுமன்னிப்பு கோரி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விசேட கடிதத்துடன் பிரதி சபாநாயகர் தலைமையிலான தூதுக்குழு சவூதி மன்னரை சந்திக்க விரையவுள்ளது.
சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த சிவராசா அனோஜன் என்ற இலங்கை இளைஞனுக்கு அந்நாட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவலை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (22) பாராளுமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இலங்கை இளைஞர் ஒருவரின் உயிர் சவூதியின் மரணக் கொட்டடியில் ஊசலாடிக் கொண்டிருக்கும் இந்தச் செய்தி, நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கு விசாரணையின் போது இலங்கைத் தரப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே இந்த விபரீத முடிவு வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் இணையக் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்டு வந்த விசாரணைகளை, சவூதி அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் விடுத்த கடுமையான கோரிக்கையை ஏற்று ஷரியா சட்டத்தின் கீழ் மாற்றி விசாரித்தமையே இந்த உச்சகட்ட மரண தண்டனைக்குக் காரணமாக அமைந்ததாக அமைச்சர் சபையில் சுட்டிக்காட்டினார்.
தண்டனை அறிவிக்கப்பட்டுவிட்ட போதிலும், அந்த இளைஞனின் உயிரை எவ்வாறாயினும் மீட்டெடுப்பதற்கான தீவிர இராஜதந்திர நடவடிக்கைகளில் அரசாங்கம் முழுமூச்சாக இறங்கியுள்ளது. இலங்கை மற்றும் சவூதி அரேபியாவின் தலைசிறந்த சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று, அடுத்தகட்ட சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் அதியுயர் மட்டத் தலையீடாக, அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சவூதி மன்னருக்கு எழுதியுள்ள அவசர கடிதத்துடன் பிரதி சபாநாயகர் தலைமையிலான விசேட தூதுக்குழு ஒன்று சவூதி அரேபியாவிற்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் போது, சவூதி வெளிவிவகார அமைச்சரை நேரில் சந்தித்து மரண தண்டனையைத் தளர்த்துவது குறித்து தாம் நேரடியாகப் பேசவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் நம்பிக்கை வெளியிட்டார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த இக்கட்டான சூழலில் தவிக்கும் அனோஜனின் குடும்பத்திற்குப் பலம் சேர்க்கும் வகையில், இந்த வழக்கிற்காக சவூதியில் ஏற்படும் அனைத்து சட்டச் செலவுகளையும் அரசே முழுமையாகப் பொறுப்பேற்கும் என அமைச்சர் அறிவித்தார். அத்துடன், அவரது குடும்பத்தினர் ஏற்கனவே மேற்கொண்டிருந்த சட்டச் செலவுகளுக்கான தொகையையும் அரசாங்கமே மீளச் செலுத்தும் என உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது. இளைஞனின் உயிரைக் காக்கும் இந்த சர்வதேசப் போராட்டம் தற்போது உலகளாவிய ரீதியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


