வியர்வை சிந்தி உழைக்கும் எளிய மனிதர்களின் விடாமுயற்சியை அடையாளம் கண்டு கைகொடுக்கும் போதுதான் சமூகத்தின் உண்மையான வளர்ச்சி சாத்தியமாகிறது. அந்த வகையில், புத்தளம் நாகவில்லு பகுதியில் பல வருடங்களாக அர்ப்பணிப்புடன் உழைத்து வரும் ஒரு சுயதொழில் முயற்சியாளரின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் உன்னத நிகழ்வொன்று இன்று பதிவாகியுள்ளது.
நாகவில்லு B பகுதியில் வீட்டிலே இருந்து சைக்கிள் திருத்தும் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு, அப்பகுதி மக்களுக்கு நீண்டகாலமாகச் சேவையாற்றி வருபவர் ஜனாப் தாவூத் காக்கா. முதுமையிலும் சொந்தக் காலில் நின்று உழைக்கும் மன உறுதி இவரிடம் முழுமையாக இருந்தபோதிலும், தொழிலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கும் வாடிக்கையாளர்களுக்குத் துரித சேவை வழங்குவதற்கும் தேவையான நவீன, அத்தியாவசிய உபகரணங்களின் பற்றாக்குறை ஒரு பாரிய முட்டுக்கட்டையாக இருந்து வந்தது.
இவரது இந்த நியாயமான தவிப்பும், உழைப்பின் மீதான தாகமும் புத்தளம் பிரதேச சபையின் பொத்துவில்லு வட்டார உறுப்பினர் ஜனாப் ஷாஹீன் ரீசா அவர்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. கள நிலவரத்தையும் உழைக்கும் அந்த முதியவரின் தேவையையும் உடனடியாக உணர்ந்துகொண்ட உறுப்பினர், எவ்வித தாமதமுமின்றி இதனை புத்தளம் பிரதேச சபையின் தலைவர் ரதிக அவர்களின் நேரடிப் பார்வைக்குக் கொண்டுசென்றார்.
விடயத்தை உள்வாங்கிய பிரதேச சபைத் தலைவர் ரதிக, உழைப்பாளர்களைத் தேடிச்சென்று கைகொடுக்கும் தனது தூரநோக்குச் சிந்தனையின் அடிப்படையில், தாவூத் காக்கா அவர்களின் தொழில் தேவைகளுக்கான உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான நேரடி நிதி உதவியை ஒதுக்கீடு செய்யத் துரித நடவடிக்கை எடுத்தார். அதற்கமைய, குறித்த நிதியுதவி புத்தளம் பிரதேச சபை வளாகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகப் பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த வளப் பற்றாக்குறைக்கு உடனடித் தீர்வு கிடைத்ததைத் தொடர்ந்து, தனது சுயதொழிலை மேலும் வலுப்படுத்தி வாழ்வாதாரத்தை ஒரு புதிய பரிமாணத்திற்குக் கொண்டு செல்லப் போவதாக தாவூத் அவர்கள் இதன்போது மனநிறைவுடன் தெரிவித்தார். எளிய உழைப்பாளர்களின் கனவுகளுக்குப் பலம் சேர்க்கும் இத்தகைய களப்பணிகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.


