- ரூ. 17,719 இல் ஒரு மாதம் வாழ முடியுமா? பாராளுமன்றத்தில் சஜித் சரமாரி கேள்வி!
- IMF கைப்பாவையாக மாறிய அரசாங்கம்: 220 இலட்சம் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறி!
- காணாமல் போன 2.5 மில்லியன் டொலர்: அம்பலப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர்!
இன்றைய கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நபர் ஒருவர் ஒரு மாதம் வாழ்வதற்கு வெறும் ரூ.17,719 போதுமானது என அரசாங்கம் முன்வைக்கும் கணக்கீடு மக்களை ஏமாற்றும் செயல் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், மத்திய வங்கியினதும் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினதும் போலியான தரவுகளைக் கொண்டு அரசாங்கம் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வதாகச் சுட்டிக்காட்டினார். உலக வங்கியின் மதிப்பீட்டின்படி ஒரு நபருக்கு நாளாந்தம் ரூ. 2,724 வரை தேவைப்படுவதாகவும், நடைமுறையில் நாட்டின் 30 முதல் 40 வீதமான மக்கள் கடும் வறுமையில் வாடிவரும் நிலையில் இவ்வாறான போலிக் கணக்குகள் 220 இலட்சம் மக்களின் வாழ்வையும் சீரழிக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.
அதேவேளை, தேர்தல் மேடைகளில் IMF உடன்படிக்கையை மாற்றி அமைப்போம் என்று முழங்கியவர்கள், இன்று சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு நிபந்தனையைக் கூட மாற்ற முடியாமல் அதன் கைப்பாவையாக மாறியுள்ளதாக அவர் விமர்சித்தார்.
துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு மக்களுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொடுக்க முடியாத இந்த அரசாங்கம், முன்னைய ஆட்சியாளர்களின் நவ-தாராளவாதக் கொள்கைகளையே தொடர்கின்றது. கடுமையான வரிகளை மக்கள் மீது சுமத்தி மூளைசாலிகளின் வெளியேற்றத்தை தீவிரப்படுத்தியுள்ளதுடன், மறுபுறம் ‘Macro-Linked Bonds’ ஊடாகப் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் போது அதிக கடனைச் செலுத்தும் சுமையையும் நாட்டு மக்களுக்கு மறைத்து உருவாக்கியுள்ளது.
பொருளாதார நெருக்கடி ஒருபுறமிருக்க, வெளிநாட்டு முதலீடுகளையும் நிதி முகாமைத்துவத்தையும் அரசாங்கம் கையாண்ட விதம் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக சஜித் பிரேமதாச மேலும் அம்பலப்படுத்தினார்.
One Stop Shop முறையில் முதலீட்டாளர்களைக் கவர்வதற்குப் பதிலாக, தேவையற்ற அரச அதிகாரக் கட்டுப்பாடுகள் மூலம் அவர்களை நாட்டை விட்டே விரட்டும் சூழல் உருவாகியுள்ளது. அதைவிட அதிர்ச்சியாக, அவுஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டியிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கூட பாதுகாக்க முடியாமல் நாட்டின் கையிருப்பில் இருந்து இழக்க நேரிட்டமைக்கு அரசாங்கத்தின் பலவீனமான கடன் முகாமைத்துவமே காரணம் எனக் குற்றம் சுமத்தினார்.
இதேவேளை, அரசாங்கம் அறிவிக்கும் நிதி உதவிகள் நடுத்தர மற்றும் சிறிய தொழில்முயற்சியாளர்களைச் சென்றடையாமல், பெரும் செல்வந்தர்களுக்கே போய்ச் சேர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கறுப்புப் பட்டியலில் உள்ள பாதிக்கப்பட்ட சிறிய தொழில்முயற்சியாளர்களுக்கு வங்கி முறைமை ஊடாக நிவாரணம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்த அவர், முன்னைய போராட்டங்களின் போது ஆசிரியர்களுக்காக வீதியில் இறங்கிவிட்டு தற்போது ஆசிரியர் தினத்தில் அவர்களுக்கு வழங்க வேண்டிய 2/3 சம்பளக் கொடுப்பனவை அரசாங்கம் மறந்துவிட்டதா என்றும் கேள்வி எழுப்பினார். இறுதியாக, பாராளுமன்றத்தில் 37 வருடங்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி ஓய்வுபெறும் படைக்கலச் சேவிதர் உபுல் சோமரத்னவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் தனது வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டார்.


