- உலக வீட்டுத் தினத்தில் கல்பிட்டியில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்!
- சொந்தக் கூரை கனவு நனவானது: மண்டலங்குடா, புதுக்குடியிருப்பு, வண்ணிமுந்தல் குடும்பங்களுக்கு புதிய வீடு கையளிப்பு!
- வறிய குடும்பத்திற்கு நிரந்தர முகவரி: கல்பிட்டியில் புதிய வீட்டுத்திட்டம் திறந்துவைப்பு!
உலக வீட்டுத் தினத்தை முன்னிட்டு “தமக்கென ஒரு இடம், அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளின் கீழ், கல்பிட்டி பகுதியில் வசிக்கும் சில வறிய குடும்பங்களின் நீண்ட நாள் கனவு நனவாக்கப்பட்டுள்ளது.
கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மண்டலங்குடா கிராம உத்தியோகத்தர் பிரிவில் வாழும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்திற்கு அமைக்கப்பட்ட புதிய நிரந்தர வீடொன்று நேற்று (05) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத் தலைவருமான முஹம்மது பைசல் இந்நிகழ்வில் கலந்துகொண்டு வீட்டின் திறவுகோலை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
மேலும் கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு மற்றும் வண்ணிமுந்தல் கிராம உத்தியோகத்தர் பிரிவில் வாழும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கும் நிரந்தர வீடுகள் கையாளிக்கப்பட்டன.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த இல்லங்கள், அடிப்படை வசதிகளின்றித் தவித்த குறித்த குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
எளிய குடும்பங்களின் பாதுகாப்பான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில், பல முக்கிய துறைசார் அதிகாரிகளும் சமூகப் பிரதிநிதிகளும் இணைந்து ஆதரவளித்தனர்.
குறிப்பாக, புத்தளம் மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிர்வாக உத்தியோகத்தர் ஆர். குமாரசிங்க, கல்பிட்டி பிரதேச சபையின் தலைவர் சகோதரர் ரிகாஸ்,உப தலைவர் சகோதரர் சமன் குமார, கல்பிட்டி பிரதேச செயலாளர் பிரியதர்ஷினி, வீட்டுத்திட்ட உத்தியோகத்தர் அதில்ஸான், தேசிய மக்கள் சக்தியின் பிரஜா சக்தி (CDC) தலைவர்களான நேவில் மற்றும் நிகால், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் சிபாஸ் உள்ளிட்ட பல அரச உத்தியோகத்தர்கள், கிராமவாசிகள் மற்றும் பயனாளிக் குடும்பத்தினர் கலந்துகொண்டு இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினர்.




