- ரியாத் விமான நிலைய தாக்குதலுக்கு முன் மௌனமான எச்சரிக்கை எச்சரிக்கை முறைமை: என்ன நடந்தது சவுதியில்?
- மக்களை நிலைகுலைய வைத்த விமான நிலையத் தாக்குதல்: முன்கூட்டியே எச்சரிக்காதது ஏன்? எழும் பரபரப்பு கேள்விகள்!
- 18 பேர் பலி, 300 க்கும் மேற்பட்டோர் காயம்: சவுதி பாதுகாப்பு பொறிமுறை பலவீனமடைகிறதா?
மௌனமான எச்சரிக்கை அமைப்புகள்: ரியாத் விமான நிலையத் தாக்குதலின் பின்னணி
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட பயங்கரத் தாக்குதல்களுக்கு சில நாட்களுக்கு முன்னரே, இராணுவத் தாக்குதல்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு முன்கூட்டியே வழங்கப்படும் அவசர எச்சரிக்கை முறைமைகளை சவுதி நிர்வாகம் திடீரென இடைநிறுத்தியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரத்தில் மாத்திரம் ரியாத் நகரை நிலைகுலையச் செய்த நான்கு தொடர் தாக்குதல்களில் ஆகக்குறைந்தது 18 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், 300 இற்கும் மேற்பட்டோர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். எனினும், இத்தகைய பாரதூரமான அச்சுறுத்தல்கள் நிலவிய போதிலும், பொதுமக்களுக்கு ஏன் எவ்வித முன்னெச்சரிக்கைகளும் வழங்கப்படவில்லை என்பது தொடர்பில் சவுதி அரசாங்கம் இதுவரை எந்தவொரு தெளிவுபடுத்தலையும் முன்வைக்கவில்லை.
ஏமனின் ஈரான் ஆதரவு ஹூதி ஆயுதக் குழுவினருடனான மோதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், தொடர்ச்சியாக எச்சரிக்கைகளை வெளியிடுவது நாட்டின் பாதுகாப்பற்ற தன்மையை வெளிக்காட்டும் எனவும், அமைதியான தேசம் என்ற பிம்பத்தை அது சீர்குலைக்கும் எனவும் சவுதி கருதியதாகத் தெரிகிறது. ஆனால், உயிர்களைப் பலிகொண்ட இந்த விமான நிலையத் தாக்குதலின் போது எச்சரிக்கைகள் விடுக்கப்படாமை, அந்நாட்டின் பாதுகாப்பு பலவீனம் மற்றும் அங்குள்ள பிரஜைகள், வெளிநாட்டுப் பயணிகளைப் பாதுகாக்கும் திறன் தொடர்பில் கடுமையான சந்தேகங்களை சர்வதேச அரங்கில் தோற்றுவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச மற்றும் அரபு நாடுகளின் இராஜதந்திரிகள், நாட்டில் சகல விடயங்களும் சாதாரணமாக இயங்குவது போன்ற தோற்றப்பாட்டைப் பேணவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடுகின்றனர். “இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதேவேளையில், உள்நாட்டு மக்களுக்கும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் அமைதி நிலவுவது போன்ற நம்பிக்கையை ஒரே நேரத்தில் கொடுக்கவே சவுதி அரசாங்கம் முயற்சிக்கிறது” என மத்திய கிழக்கு கொள்கை மையத்தின் (Middle East Policy Council) சிரேஷ்ட ஆய்வாளர் சுல்தான் அல்-ஆமர் (Sultan Alamer) வெளிப்படுத்தியுள்ளார்.


