- “வேலை செய்ய விடாமல் தடுப்பது எது?” – அரச பொறிமுறை மீது வெடித்த ஆளுங்கட்சி எம்.பி.யின் ஆதங்கம்!
- புத்தளம் குளங்களுக்காக ரூ. 100 கோடி: அரச சேவையின் செயலற்ற தன்மையால் முடங்கும் அபிவிருத்திகள்!
- “செய்யத் துடிக்கிறோம்… வழியில்லை!” – அரச இயந்திரத்தின் பின்னடைவை போட்டுடைத்த அஜித் கிஹான்!
ஜுட் சமந்த
அரசாங்கம் பணத்தை அள்ளி இறைத்துத் திட்டங்களைத் தீட்டினாலும், அதனை மக்கள் மயப்படுத்துவதில் தடையாக நிற்பது யார்? பலரும் பொதுவெளியில் பேசத் தயங்கும் இந்த நிர்வாகக் குறைபாட்டை ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே நேரடியாகச் சுட்டிக்காட்டியிருப்பது அரசியல் அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
மகாவலி ஆலோசனைக் பணியகத்தின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘வாரி மஹிம’ வேலைத்திட்டத்தின் கீழ், புத்தளம் மாவட்டத்தில் 10 குளங்களை முழுமையாகப் புனரமைக்கும் மாபெரும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கத்தினால் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சிலாபம் – திம்பில்ல குளத்தை 17.5 கோடி ரூபாய் செலவில் நவீனமயப்படுத்தும் பணிகள் நேற்று வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
ஆனால், இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் தெரிவித்த விடயங்கள் அங்கிருந்தோரை உற்றுநோக்க வைத்தன. கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு பெருமளவிலான பணிகளைச் செய்து முடித்திருந்தாலும், இன்னும் செய்ய வேண்டிய பல வேலைகள் வழியிலேயே முடங்கிக் கிடப்பதை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
அதற்குக் காரணமாக அவர் சுட்டிக்காட்டிய விடயம்தான் நிர்வாக மட்டத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. அரசாங்கம் திட்டங்களை வேகமாக நகர்த்த முற்பட்டாலும், நாட்டின் அரச இயந்திரம் அதற்கு ஈடுகொடுத்து முறையாக இயங்காததே அபிவிருத்திப் பணிகள் நத்தை வேகத்தில் செல்வதற்கு மூலக் காரணம் என அவர் நேரடியாகவே விரல் நீட்டினார்.
இதற்கு அரச நிறுவனங்களில் தலைவிரித்தாடும் உத்தியோகத்தர் மற்றும் ஊழியர் பற்றாக்குறையே பிரதான காரணம் எனத் தெரிவித்த அவர், பணியில் உள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய சில ஊழியர்களுக்கும் போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். முன்னைய அரசாங்கங்கள் அரச சேவையைச் சீரமைக்கத் தவறியதன் மோசமான விளைவுகளையே தற்போதைய ஆட்சி எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும், இது அரசாங்கம் வேலை செய்யாமல் இருப்பதனால் அல்ல, மாறாக வேலைகளைத் தடையின்றி முன்னெடுக்க வழி இல்லாத சூழலே நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.
தற்போது உலகளவில் பாரிய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் தோற்றம் பெற்றுள்ள போதிலும், அதனைக் காரணம் காட்டி அரசாங்கம் தனது அத்தியாவசிய அபிவிருத்திப் பணிகளை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என அவர் மேலும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிலாபம் நகர சபைத் தலைவர் சுமேத பெரேரா, சிலாபம் பிரதேச சபைத் தலைவர் அருண ஸ்ரீ ஆனந்த, சிலாபம் பிரதேச செயலாளர் சானக பிரேமசூரிய, உதவி விவசாய சேவைகள் ஆணையாளர் அருண தென்னகோன் மற்றும் மகாவலி ஆலோசனைக் பணியகத்தின் புத்தளம் மாவட்டப் பொறியியலாளர் நாலக சமரசிங்க உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.



