- புத்தளம் – உடப்பு கடற்பரப்பில் சட்டவிரோத பீடி இலை கடத்தல் முறியடிப்பு.
- நடுக்கடலில் கைமாற்ற முயன்ற 2 இந்திய டவ் படகுகளும் 2 உள்ளூர் டிங்கி படகுகளும் பறிமுதல்.
- சுமார் 2,400 கிலோகிராம் எடைகொண்ட 60 பொதிகள் பீடி இலைகள் மீட்பு.
புத்தளம் உடப்பு கடற்பரப்பில் நடுக்கடலில் இடம்பெறவிருந்த பாரிய கடத்தல் திட்டம் ஒன்றை இலங்கை கடற்படையினரும் கடலோரக் காவல்ப்படையும் இணைந்து அதிரடியாக முறியடித்துள்ளனர்.
மேற்கு கடற்படை கட்டளைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய உளவுத் தகவலையடுத்து, நேற்றைய தினம் (2026 ஒக்டோபர் 21) குறித்த கடற்பரப்பில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சந்தேகத்திற்கிடமாக எல்லை தாண்டி வந்த இரண்டு இந்திய டவ் படகுகளையும், அங்கு காத்திருந்த இரண்டு உள்ளூர் டிங்கி படகுகளையும் கடற்படையினர் சுற்றிவளைத்தனர்.
சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட தீவிர சோதனையின்போது, இந்தியப் படகுகளில் இருந்து உள்ளூர் டிங்கி படகுகளுக்கு பீடி இலைகள் கடலில் வைத்து கைமாற்றப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதில் 60 உறைகளில் மிக நேர்த்தியாக பொதி செய்யப்பட்டிருந்த சுமார் 2,400 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து, இந்தியப் படகுகளில் இருந்த 7 இந்தியப் பிரஜைகளும், உள்ளூர் டிங்கி படகுகளில் இருந்த 4 இலங்கையர்களும் சம்பவ இடத்திலேயே மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 11 சந்தேகநபர்கள், பறிமுதல் செய்யப்பட்ட 4 படகுகள் மற்றும் கைப்பற்றப்பட்ட பெருமளவிலான பீடி இலைத் தொகை ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு சுங்கத் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.



