Friday, August 1, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 125

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு பொய்யா?

0

2025 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்படவுள்ள சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப்புறம்பானவை என்பதோடு அதற்கான அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளது. 

2024 மே மாதம் 27   திகதியிட்ட  எண் 24/பல்வகை (020)  என்ற அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம், அரச சேவையில் உள்ள பல்வேறு சேவைக் குழுக்களுக்கு இடையே உள்ள சம்பள முரண்பாடுகளை ஆய்வு செய்து, 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில்  உள்ளடக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய வகையில்,  அரச சேவையின் அனைத்து பிரிவுகளினதும் சம்பளம், ஊதியம்  மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை மீளாய்வு செய்து மேற்கொள்ளவேண்டிய திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளை வழங்க ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.

அந்த நிபுணர் குழுவானது அரச துறையின்  81 பிரதான தொழிற் சங்கங்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடி, உரிய தகவல்களை ஆய்வு செய்து இடைக்கால அறிக்கையை தயாரித்துள்ளது. 

இது தொடர்பாக குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன தெளிவுபடுத்தும் போது, இந்த அறிக்கை தயாரிப்பில் மேலும் பல தொழிற் சங்கங்கள், பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும்  சுமார் 391 தனிநபர்களால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு தகவல்கள் பெறப்பட்டன என்று தெரிவித்தார்.

தற்போதுள்ள அரச நிதி வாய்ப்புகள் மற்றும் அரச துறை ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்களை கருத்தில் கொண்டு, அரச செலவை முகாமைத்துவம் செய்வதற்கான முன்மொழிவுகளுடன்,  

ஏற்கனவே உள்ள ஊதிய கட்டமைப்புகளை திருத்துவதற்கான அளவுகோள்கள் மற்றும் தரநிலைகள் அத்துடன்  அரச செலவுகளை குறைத்தல் மற்றும் வருமானம் ஈட்டும் மூலோபாயங்களை உள்ளடக்கிய கொள்கை ரீதியிலான கட்டமைப்பை இந்த இடைக்கால அறிக்கை, பரிந்துரைக்கிறது

அதன்படி, அமைச்சரவைப் பத்திரம் எண் 24/1609/601/097,  ஆன  “அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகளைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் இடைக்கால அறிக்கை”     நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை  அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினினால்   12-08-2024 ஆம் திகதி அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த இடைக்கால அறிக்கையை , அமைச்சரவை  பரிசீலித்து கலந்துரையாடிய பின்னர், அந்த இடைக்கால அறிக்கையின் பந்தி 03 இல் குறிப்பிடப்பட்டுள்ள (3.1) முதல் (3.18) வரையிலான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கொள்கை  ரீதியிலான அங்கீகாரம் அளித்தல் மற்றும்  மேற்படி இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை  2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உட்படுத்தி நடைமுறைப்படுத்தும் வகையில் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.   

•    2025 ஆம் ஆண்டை  அடிப்படை ஆண்டாகக் கருதி அனைத்து அரச ஊழியர்களுக்கும் (ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை திருத்தத்திற்கு உட்படும் வகையில்) ரூ.25,000/- மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை வழங்கல், 

•    அரச சேவையில் குறைந்தபட்ச ஆரம்ப மாதாந்தச் சம்பளம்   24% முதல் 50% – 60% வரையில்   அதிகரிப்பதோடு  வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுடன்   மொத்த சம்பளம் ரூ. 55,000 ஆக மாற்றி  அதற்கேற்ப ஏனைய அனைத்து பதவிகளுக்குமான அடிப்படை சம்பளத்தை மாற்றியமைத்தல், வர்த்தக அரச நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தவிர அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இந்த புதிய சம்பளம் மற்றும் கொடுப்பனவு முறையை நடைமுறைப்படுத்துதல்,

•    2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளுக்கு அவர்களுக்கு உரிய சம்பள அதிகரிப்புகளை வழங்கி அவர்களின்  ஓய்வூதியங்களை மீளாய்வு செய்தல் மற்றும் அது தொடர்பான முரண்பாடுகளைத் தீர்த்தல், 

•    ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு, கடமையில் உள்ள அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவின் 50%க்கு சம்மாகும் வகையில்  ஜனவரி 2025 முதல்   வழங்குதல்,  

•    தற்போதுள்ள வரிக் கொள்கைகளுக்குள் இந்தச் செலவுகளை நிர்வகிப்பதற்கு உட்பட்டு, இந்த சம்பள முறை மற்றும் முன்மொழியப்பட்ட சம்பள முறை 2025 ஜனவரி 01  முதல்  நிதி வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு படிநிலையாக செயல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

•    இதன்படி, மேற்படி நிபுணர் குழு தமது இறுதி அறிக்கையை 03.09.2024 அன்று ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதுடன், குறித்த அறிக்கையின் 01 முதல் 08 வரையான பரிந்துரைகளால் முன்வைக்கப்பட்டுள்ள அரச சேவைகளின் வகைப்பாடு, அரச  ஊழியர்களின் கொடுப்பனவுகள், ஓய்வூதிய வேறுபாடுகளை நீக்குதல், விதவைகள், தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் மற்றும் அக்ரஹார செலுத்தல்கள் தொடர்பான பரிந்துரைகள் மற்றும் திருத்தங்கள் 01.01.2025 முதல் நடைமுறைப்படுத்துவதற்கு கொள்கை ரீதியிலான அங்கீகாரத்தை வழங்குதல், அந்த பரிந்துரைகள் 2025 வரவு செலவு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. 

எனவே, இவ்வாறான உணர்வுபூர்வமான விடயங்களை வெளியிடும் போது மக்களை தவறாக வழிநடத்தும் பொய்யான செய்திகளை வெளியிடாமல் உண்மைகளை ஆராய்ந்து சரியான தகவல்களை மக்கள் மயப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு!

0

ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி தபால் மூல வாக்களிப்பு இன்றும் (11) நாளையும் (12)  இடம்பெறவுள்ளதாக என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்காக கடந்த 4, 5 மற்றும் 6ம் திகதிகளில் வாக்களிக்க முடியாத அனைத்து அரசு ஊழியர்களும் இந்த இரண்டு நாட்களிலும் தபால் மூலம் வாக்களிக்கலாம் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு தினங்களில் தபால் மூல வாக்குகளைப் அடையாளப்படுத்தாவிட்டால் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 21ஆம் திகதி அல்லது வேறு எந்த நாளிலோ வாக்குகளை அளிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று தபால்மூல வாக்களிப்பை பயன்படுத்தும் வாக்காளர்கள் தமது பணியிடங்கள் அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகம் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சென்று வாக்களிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

5 இராஜாங்க அமைச்சர்கள் அதிரடி நீக்கம்!

0

5 இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கியுள்ளார்.

இதற்கமைய, இராஜாங்க அமைச்சர்களாக கீதா குமாரசிங்க, சஷீந்திர ராஜபக்ஷ, அமித் தேனுக விதானகமகே, பிரசன்ன ரணவீர மற்றும் டி.வி. சானக ஆகியோர் குறித்த இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47(3) (அ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பளப்பிரச்சினை தீர்ந்தது – ரணிலுக்கு நன்றி

0

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று  முதல் கட்டாயமாக 1,350 ரூபாய் அடிப்படை சம்பளம் வங்கப்பட்டுள்ள நிலையில், அதை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக இன்றைய தினம் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில், மிகுதி 350 ரூபா பேச்சுவார்த்தைகளின் ஊடாக  பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உறுப்பினர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் இன்று முதல் 1,350 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்க பெருந்தோட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சிறிதரன் எம்.பி

0

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 3 மணியளவில் மாவட்டக் கிளை அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் குருகுலராஜா, பிரதேச சபைகளின் முன்னாள் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய நியமிக்கப்பட்ட குழு கூடாமலே கட்சியின் ஆதரவு அறிவிக்கப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி  கட்சி அலுவலகமான அறிவகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச வட்டார கிளைகளின் நிர்வாகிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த 18-08-2024 அன்று மத்திய குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்ந்து யாருக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான குழு நியமிக்கப்பட்டது. 

இந்த குழு கூடி முடிவெடுக்காது முடிவு அறிவிக்கப்பட்டது தவறு.  நாளைய தினம் குறித்த குழு கூடவுள்ளது. கூடி சில முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கூடியிருந்த அனைவரும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக ஏக மனதாக தீர்மானம் எடுத்திருக்கிறார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு தேசிய விருதுகள்!

0

உலக சுகாதார நிறுவனத்தினால் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் சுகாதார தரம் மற்றும் பாதுகாப்பு  பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வு நேற்று (7) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு, நோயாளிகள் பாதுகாப்பு சம்பந்தமான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்திய வைத்தியசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இரு சிறப்பு விருதுகள் கிடைத்துள்ளன.

இருநூற்றுக்கும் மேற்பட்ட மத்திய மற்றும் மாகாண சுகாதார நிறுவனங்களுக்குள் அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற போட்டியில் வட மாகாணத்தில் இருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மாத்திரமே இந்த சிறப்பு விருதை வென்றுள்ளமை குறிப்பிட்டதக்கது.

இலங்கைக்கான பிரதிநிதி வைத்தியர் அலோகா சிங்கா, சுகாதார அமைச்சின் செயலாளர்  வைத்தியர் பாலித மஹிபால மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா விருதுகளை பெற்றுக்கொண்டார்.

தயாசிறியின் கருத்துக்கு நீதிமன்றம் தடை!

0

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சமீபத்தில் அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தொடர்பில் கருத்து வௌியிட்ட தயாசிறி ஜயசேகரவின் உரையை சமூக வலைத்தளங்களில் வௌியிடுவதற்கு தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதவான் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.

அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் வைத்தே பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தொடர்பில் அவதூறான கருத்தை வௌியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்த கருத்துக்களால் தமது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே இதற்காக 500 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தாக்கல் செய்த முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இதன்படி, இது தொடர்பான காணொளிகளை தயாசிறி ஜயசேகரவின் முகநூல், ஐக்கிய மக்கள் சக்தியின் முகநூல் பக்கம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதைத் தடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், அது 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் குறித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணிலுடன் கை கோர்த்த செய்னூலாப்தீன் எஹியா

0

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் வெற்றியை உறுதிசெய்யும் நோக்கில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உச்ச பீட உறுப்பினருமான செய்னூலாப்தீன் எஹியாகான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் இணைந்துகொண்டார்.

நாட்டின் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், புத்தளம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை ஜனாதிபதியின் சிறப்பான எதிர்கால திட்டத்தின் மூலம் தீர்த்து வைக்கவும், புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் அவர்களின் கரங்களை பலப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை தனது இணைவு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளிப்படுத்தும் வகையில் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உச்ச பீட உறுப்பினருமான செய்னூலாப்தீன் எஹியாகான் இன்று கலந்துகொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் நீண்டகாலம் தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டு வந்த இவர், தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளமை புத்தளம் அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் MKM ஆதீர், புத்தளம் நகர சபை வேட்பாளர் NMM முயீன், மக்கள் விடுதலை முன்னனியின் மதுரங்குளி தொகுதி வேட்பாளர் H சஸ்மீர் ஆகியோர் புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் அவர்களின் கரங்களை பலப்படுத்துவதோடு எமது நாட்டின் அதிமேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் வெற்றிக்கு முழு மூச்சாய் செயற்படப் போவதாக இன்று கொழும்பில் கட்சி ஆதவாளர்களுடன் இணைந்து கொண்டதுடன் குறித்த செய்தியாளர் சந்திப்பிலும் கலந்துகொண்டனர்.

இதேவேளை கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நிமல் லான்சா அவர்களுடனான சந்திப்போன்றும் நீர்கொழும்பு Gold Dee Sans Hotel வளாகத்தில் பிரத்தியேக இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலிசப்ரி ரஹீம் அவர்களின் ஏற்பாட்டில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இச் சந்திப்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஹியா, வடமேல் மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் ஏ.ஆர்.எம் அமீன், கல்பிட்டி முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் முஷாம்மில் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

ரணிலின் மடியில் கொடுங்கோலன் சகாக்கள்!

0

கொடுங்கோலன் கோட்டாவின் சகாக்களைத் தண்டிக்க இத்தேர்தலை பயன்படுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, நேற்று (03) மாலை புத்தளத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 


தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், “ஒரு இனத்தின் சார்பாகவே, ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதாக இறுமாப்புப் பேசிய கோட்டாபய ராஜபக்ஷவின் சகாக்களைத் தோற்கடிக்க இத்தேர்தலைப் பயன்படுத்துங்கள்.

அன்புக்குரிய தாய்மார்களே, இளைஞர்களே, தந்தையர்களே மத குருமார்களே! சகல சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்ந்த மாவட்டம் புத்தளம். எம்மிடையே வேறுபாடுகளைத் தோற்றுவிக்க ஒரு கொடுங்கோலன் ஆட்சிபீடம் ஏறினான். நாட்டின் பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளிய அவரை மக்கள் விரட்டியடித்தனர். இவரது சகாக்களோ ரணிலின் மடியில் தஞ்சமடைந்துள்ளனர்.

உணர்ச்சிவசப்பட்டு தவறான வழிகளைத் தேர்ந்தெடுக்காதீர்கள். சீனா, வியட்நாம் நாடுகளில் நடப்பதை எண்ணிப்பாருங்கள். மதக்கடமைகளைச் செய்வதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கடந்த காலத்தில், ஒருசில இளைஞர்கள் உணர்ச்சிகளுக்கு அடிமையானதால், பயங்கரவாதிகளாக்கப்பட்டனர். ஈஸ்டர் தாக்குதலின் எதிரொலிகளை மறக்க முடியாது.

எந்த அனுபவமுமில்லாத தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டினால், கோட்டாவின் யுகமே மீண்டும் ஏற்படும். இந்தக் கட்சியின் செயற்குழுவிலுள்ள 28 பேரும் ஒரே இனத்தைச் சேர்ந்தோர்களே. இவர்களது மேலாதிக்க மனோபாவத்தைப் புரிந்துகொள்ள இதுவே போதும்.

ஆனால், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், திகாம்பரம், ராதாகிருஷ்ணண், சுமந்திரன் உள்ளிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கியஸ்தர்கள் மற்றும் எமது கட்சி எல்லாம் சஜித் பிரேமதாசவையை ஆதரிக்கின்றன.

கொழும்பிலுள்ள குப்பைகளை மட்டுமல்ல, இந்த ஆட்சி நீடித்தால் சிங்கப்பூரிலுள்ள குப்பைகளையும் இங்கேதான் கொட்டுவர்.

தபால்மூல வாக்களிப்பு வெற்றியை முன்னறிவிப்புச் செய்யும். எனவே, எமது வெற்றிக்கு வழிகாட்ட படித்த மக்கள் தாபால்மூல வாக்கைப் பயன்படுத்துங்கள்” என்று குறிப்பிட்டார்.

புத்தளத்தில் பொங்கி எழுந்த சஜித்!

0

ஊழல் மற்றும் மோசடிகளால் நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்றவர்களுக்கு எதிராக தங்களது அரசாங்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்றவர்களை தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கடந்த இரண்டரை ஆண்டுகளாகப் பாதுகாத்து வந்துள்ளது. 

நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்றவர்களுக்கு எதிராக எமது அரசாங்கத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

அவர்கள் கொள்ளையிட்ட நாட்டின் சொத்துக்கள், தேசிய வளங்கள் மற்றும் நிதியங்கள் என்பவற்றை மீளப்பெற்று அதனூடாக நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும். 

நிபந்தனைகளை விதித்து, பிரதமர் பதவியும், ஜனாதிபதி பதவியும் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நாம் அதனைப் பொறுப்பேற்கவில்லை. 

தற்போது நாம் ஆட்சியைப் பொறுப்பேற்காமைக்கான காரணம் அனைவருக்கும் தெளிவாகியிருக்கும். 

கொள்ளையர்களுடனும் மோசடிக்காரர்களுடனும் இணைந்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது. 

அதேநேரம் எமது கல்வி வேலைத்திட்டம் தொடர்பில் எமக்கு எதிரான 2 குழுக்களும் ஒன்றிணைந்து பல விமர்சனங்களை முன்வைக்கின்றன. 

சர்வதேச மற்றும் உள்நாட்டுச் செல்வந்தர்களின் நிதியுதவியுடன் நாட்டிலுள்ள 10,096 பாடசாலைகளை அபிவிருத்திச் செய்ய முடியாதென அவர்கள் கூறுகின்றனர். 

எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான கல்விக் கொள்கையின் போது அவர்கள் எமது செயற்பாட்டை அறிந்து கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.