காசாவை முழுமையாக கைப்பற்றுமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தனது படையினருக்கு உத்தரவிடவுள்ளார் என சிஎன்என் தெரிவித்துள்ளது.
இது குறித்து சிஎன்என் மேலும் தெரிவித்துள்ளதாவது-
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு இராணுவநடவடிக்கைகளை விரிவுபடுத்துவது குறித்து தீவிர ஆர்வத்துடன் உள்ளதாலும்,பேச்சுவார்த்தைகளிற்கு முன்னர் மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வை காணவேண்டும் என ஹமாஸ் வேண்டுகோள் விடுத்துவருவதாலும்,காசாவில் யுத்த நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் முட்டுகட்டைநிலைக்குள் சிக்குண்டுள்ளன.
இன்று செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ள பாதுகாப்பு அமைச்சரவையின் கூட்டத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு காசாவை முழுமையாக கைப்பற்றுமாறு உத்தரவிடுவார் என இந்த விடயம் குறித்து நன்கறிந்த தரப்புகள் தெரிவித்துள்ளன.
தீர்மாமொன்றை எடுத்துள்ளேன், அதிலிருந்து பின்வாங்க முடியாது,காசாவை முழுமையாக கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் நாங்கள் இறங்கப்போகின்றோம்,முப்படைகளின் பிரதானி இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவர் பதவி விலகவேண்டும் என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்தார் என அவருக்கு நெருக்கமான சிரேஸ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என இஸ்ரேலின் வைநெட் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் இராணுவஅதிகாரிகள் தரைநடவடிக்கையை விஸ்தரிப்பதை விரும்பவில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்தன.
ஹமாஸ் பணயக்கைதிகளை வைத்திருக்கும் பகுதியை நோக்கி தரை நடவடிக்கையில் ஈடுபடுவது பணயக்கைதிகளிற்கும் படையினருக்கும் உயிராபத்தை ஏற்படுத்தலாம் என இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர்.
பெஞ்சமின் நெட்டன்யாகு இராணுவநடவடிக்கையை விஸ்தரிக்கவிரும்புகின்றார் என வெளியான தகவல்களை இஸ்ரேலிய படையினரின் தாய்மார் கண்டித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட 54 சான்றுப் பொருட்கள் செவ்வாய்க்கிழமை (05) பிற்பகல் 1.30 மணியிலிருந்து பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு நீதிமன்றினால் வைக்கப்படவுள்ளன.
இதன்போது பொதுமக்கள் குறித்த சான்றுப் பொருட்களைப் பார்வையிட்டு அது பற்றிய தகவல்கள் தெரிந்திருப்பின் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கோ, நீதிமன்றுக்கோ குறிப்பிட முடியும்.
இந்நிலையில் செம்மணி மனிதப் புதைகுழி சான்றுப்பொருள்களைப் பார்வையிடுவது தொடர்பான ஒழுங்கு விதிகள் பற்றி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கடந்த 2ஆம் திகதி கட்டளை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
1.இது ஒரு நீதிமன்றச் செயல்முறை என்பதனால், அந்நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் நீதிமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் கண்ணியத்தினை கடைப்பிடிக்க வேண்டும்.
2. காணாமல் போன நபர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்த உறவினருக்கே முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் தம்முடைய உறவுகள் காணாமல் போனதை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணம் ஒன்றினைச் சமர்ப்பிப்பது விரும்பத்தக்கது. ஏனைய நபர்களை அனுமதிப்பது தொடர்பில், முற்படுத்தப்படும் தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
3. மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் நபர்களது பெயர், அடையாள அட்டை இலக்கம் (அல்லது கடவுச்சீட்டு இலக்கம் அல்லது சாரதி அனுமதிப்பத்திர இலக்கம்). முகவரி என்பன நீதிமன்ற உத்தியோகத்தர்களால் பதிவு செய்யப்படும்.
4. இருபத்தொரு (21) வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மாத்திரம், மேற்படி நடவடிக்கையில் பங்குபற்ற அனுமதிக்கப்படுவார்கள்.
5. பங்குபற்றும் நபர்கள், மேற்படி நீதிமன்ற நடவடிக்கையையோ அல்லது காண்பிக்கப்படும் பொருட்களையோ, ஒலி, ஒளிப்பதிவு செய்யவும், எந்தவொரு இலத்திரனியல் உபகரணங்களை எடுத்துவரவும் தடை விதிக்கப்படுகின்றது.
6. மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் காணாமல் போன நபர்களின் உறவினர்கள் சட்டத்தரணி ஒருவருடன் தோன்றவும் நீதிமன்றம் அனுமதி வழங்குகின்றது.
7. பங்குபற்றும் நபர்கள், காண்பிக்கப்படும் சான்று பொருட்களை கையாளுவதற்குத் தடை விதிக்கப்படுகின்றது.
8. மேற்படி நடவடிக்கை ஒரு நீதிமன்ற நடவடிக்கையாகக் காணப்படுவதனால், நடவடிக்கைகளை ஒளிப்பதிவு செய்வது தடை செய்யப்படுகின்றது. ஆகவே, இந்நடவடிக்கை நடைபெறும் வேளையில், அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான வளாகத்திற்குள் ஊடகவியலாளர்கள் எவரும் ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேற்படி ஒழுங்குவிதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக, நீதிமன்றினால் உரிய சட்ட ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேல்ஸ் நாட்டில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் தன் சகோதரியின் மகள்மாரை காப்பாற்றுவதற்காக அருவி ஒன்றிற்குள் குதித்து, பிள்ளைகளை மீட்டுக் கரை சேர்த்த நிலையில், அவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் Swanseaயில் வசித்து வந்த மோகன நீதன் முருகானந்தராஜா என்ற 27 வயதுடையவர் ஆவார்.
அவர் தனது உறவினர்களுடன் Brecon Beacons என்னுமிடத்துக்குச் சென்றுள்ளார்.
அவரது குடும்பத்தினர் பலர் அங்குள்ள அருவியில் விளையாடிக்கொண்டிருந்த, சிறிது நேரத்தில் அவரது சகோதரியின் மகள்மார் இருவர் நீரில் மூழ்கியுள்ளனர்.
தன் சகோதரியின் மகள்மாரை குறித்த நபர் மீட்டுக் கரை சேர்த்துள்ளார்.
பின்னர் அவர் நீரில் மூழ்கியுள்ளார்.
நீரில் மூழ்கிய மோகனை மீட்கும் முயற்சி தோல்வியில் முடிய, மறுநாள் அவரது உடலை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.
பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை ஒழிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டவுடன், தனது தந்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவார் என்று இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்த சொத்துக்கள் எதுவும் பலவந்தமாக அபகரிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதிகள் ஆட்சியில் இருந்தபோது எடுக்கப்பட்ட சில முடிவுகள் பின்னர் அவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பக்கூடும் என்றும், ஜனாதிபதி எடுக்கும் இந்த முடிவுகள் எதிர்காலத்தில் அவருக்கு ஒரு தடையாக மாறக்கூடும் என்றும் நாமல் ராஜபக்ஷ கூறினார்.
கொழும்பில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு அமைப்பாளர் குழுவிற்கு நியமனக் கடிதங்களை வழங்கிய பின்னர், பத்திரிகையாளர்களுடனான கேள்வி பதில் அமர்வின் போது அவர் இவ்வாறு கூறினார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை ஒழிக்கும் மசோதா குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் தினும் அமுனுகம, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பிலிருந்து அனுப்பினால், மக்கள் அவருக்கு நூறு வீடுகள் பத்திரங்களுடன் வழங்க முன்வருவார்கள் என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் மஹிந்தவுக்கு அதிகாரப்பூர்வமற்ற ஜனாதிபதி மாளிகைகளை கட்ட மக்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இலங்கை தேசத்திற்கு ஒரு அற்புதமான வரமாகக் கருதப்படும் புத்தளம், கல்பிட்டி, தலவில புனித அன்ன முனீஸ்வரியா தேசிய ஆலயத்தின் 263 வது ஆண்டு விழா நிகழ்வு, கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிலாபம் பிஷப் விமல் சிறி ஜெயசூரியவின் தலைமையில், தலவில மீசம் நிர்வாகியும் ஆலய நிர்வாகியுமான அருட்தந்தை ஜெயந்த பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ், சனிக்கிழமை மாலை 6.45 மணிக்கு மாலை ஆராதனை நடைபெற்றதுடன் ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு தெய்வீக வழிபாட்டின் மகத்தான பாடலின் கொண்டாட்டம் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளும் பங்கேற்றனர். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு முக்கிய விழாக்களான, சதுரிகா மற்றும் மகா மாங்கல்யம் ஆகியவை நடத்தப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் யாத்திரையில் பங்கேற்கின்றனர்.
இந்த ஆண்டும் மட்டும் 05 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பாதுகாப்பு, தண்ணீர், கழிப்பறைகள், மின்சாரம் மற்றும் தங்குமிடம் போன்ற தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாட்டுக் குழு விரைவாக வழங்கியது.
புத்தளம் மாவட்டச் செயலாளர் எச்.எம். சுனந்த பிரியதர்ஷன ஹேரத்தின் வழிகாட்டுதலின் கீழ், மாவட்டத்தின் அனைத்து அரசு நிறுவனங்களும் அதிகாரிகளும் இந்த விழாவை வெற்றிகரமாக நடத்த மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.
தலவில புனித அன்னேயின் சிலை, தலவில ஆலயத்திற்கு அப்பால் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. தலவில அருகே உள்ள கல்பிட்டியின் நாவக்கடுவா கடற்கரையில் (1696) ஒரு உடைந்த கம்பம் காரணமாக சிக்கித் தவித்த போர்த்துகீசிய வணிகக் கப்பலின் மாலுமிகள் குழு, இன்று தேவாலயம் இருக்கும் இடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டதன் காரணமாக புனித அன்னேயின் சிலை இந்த இடத்திற்கு வந்தது. அவர்கள் கப்பலில் இருந்து மரச் சிலையை அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு கொண்டு வந்து ஒரு பெரிய ஆலமரத்தில் வைத்து வழிபட்டனர்.
கப்பலை பழுதுபார்த்த பிறகு, கடற்படை குழு காலிக்குச் செல்வதற்கு முன்பு ஒரு சபதம் எடுத்தது.
வர்த்தகம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு கப்பல் திரும்பினால், இந்த இடத்தில் புனித அன்னேவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தேவாலயம் கட்டப்படும். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கப்பல் உரிமையாளர் பிலிப் டி குவார்டி மற்றும் கேப்டன் ஜுவான் மதேரா தலைமையிலான மாலுமிகள் இந்த சம்பவத்திற்குப் பிறகு, காலிக்குத் திரும்பும் பயணத்தில் தலவிலவுக்குச் செல்ல மறக்கவில்லை. தேவாலயத்தின் ஆரம்பகால மேம்பாட்டுப் பணிகளும் அவர்களின் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டன.
டச்சு ஆளுநர் தாமஸ் வான் ரீயின் நாட்குறிப்பில் கல்பிட்டியில் (1696) விபத்துக்குள்ளான போர்த்துகீசியக் கப்பல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர் கெரிட் டி ஹீர் (1697) இன் கவுன்சில் அறிக்கையிலிருந்த தகவலும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
காலியில் உள்ள கிறிஸ்தவர்கள் குழு ஒன்று அன்றிலிருந்து இன்றுவரை தலவிலாவில் நடந்த இந்த மாபெரும் தெய்வீக தியாகத்தில் பங்கேற்று வருகிறது என்பது இன்றுவரை எஞ்சியிருக்கும் ஒரு வரலாற்று நிகழ்வின் மற்றொரு சான்றாக பதிவு செய்யப்படலாம்.
புத்தளம் பகுதியில் புனித அன்னாள் பக்தி மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளது, ஏனெனில் மாந்தோட்டை (மன்னாய்), திருகோணமலை (கோகன்னா) மற்றும் சிலாபம் வரையிலான கடற்கரை கி.பி. முதல் நூற்றாண்டு வரை நீண்டு செல்லும் கிறிஸ்தவ வரலாற்றைக் கொண்டுள்ளது. கிறிஸ்தவத்திற்கு முந்தைய காலத்திலிருந்தே மாலுமிகள், வணிகர்கள், படையெடுப்பாளர்கள், இராஜதந்திரிகள் மற்றும் ஆய்வாளர்கள் இந்தியா வழியாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த நாட்டிற்கு வருவதை நன்கு அறிந்திருப்பதே இதற்குக் காரணம்.
“உள்ளூராட்சி மன்றங்களில் எங்கள் உறுப்பினர்களின் வகிபாகம்” என்ற தொனிப் பொருளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இரு நாள் வதிவிட செயலமர்வு, இன்று (02) சனிக்கிழமை, மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் உள்ளூராட்சிமன்றங்களில் செயற்படவேண்டிய முறைகள் குறித்தும், எவ்வாறான முறையில் சேவைகளை பெற்றெடுக்க முடியும் என்பது பற்றியும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
உள்ளூராட்சிமன்றங்களின் ஊடாக மக்களுக்கு செய்யப்படவேண்டிய சேவைகள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் ஊடாக பெற்றெடுக்கவேண்டிய உதவிகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரனைகள் – சர்வதேசமயமாகப்பட வேண்டும் – ரவூப் ஹக்கீம்
எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.
1990ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் திகதி, காத்தான்குடியில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது பயங்கரவாதிகள் நடாத்திய தாக்குதலில் 103 முஸ்லிம்கள் மரணமடைந்தனர். இந்தக் கொடூரச் சம்பவத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் “தேசிய ஷுஹதாக்கள் தினம்” அனுஷ்டிக்கப்படுகிறது.
முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் சர்வதேச மயப்படுத்த வேண்டுமென காத்தான்குடியில் இன்று (03) அனுஷ்டிக்கப்பட்ட 35வது தேசிய ஷுஹதாக்கள் தின நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
1990ம் ஆண்டு ஆகஸ்ட் 03ம் திகதி ஹுஸைனியா பள்ளிவாயலிலும், மீரா ஜும்ஆ பள்ளிவாயலிலும் நடந்த படுகொலைச்சம்பவங்களில் ஷஹீதாக்கப்பட்ட 103 ஷுஹதாக்கள் நினைவாக இன்று துஆப்பிரார்த்தனை காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலாமா சபை மற்றும் ஊர் ஜமாஅதார்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.
அத்துயர நினைவுகளை மீட்டிக்கொள்வதற்கும் ஷுஹதாக்களுக்காக பிரார்த்தனை செய்வதற்குமான ஒரு சந்தர்ப்பமாக இது வாய்த்ததையிட்டு பெருமகிழ்வுறுகிறோம்.
இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான சம்பவங்களின் படிப்பினைகளை சரிவர உணர்ந்து இனங்களுக்கிடையிலான உறவை மீளக்கட்டியெழுப்புவதில் எமது கட்சியும், கட்சித்தொண்டர்களும் முழு மூச்சுடன் ஈடுபட வேண்டும்.
அத்திடசங்கர்ப்பத்தை நாம் இந்த ஷுஹதாக்கள் நினைவு நாளில் உறுதி பூணுவது மாத்திரமல்லாமல், இத்துன்பியல் சம்பவங்கள் குறித்த வரலாற்றையும் சரிவர தொடர்ந்தும் மனதிலிருத்தி முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் சர்வதேச மயப்படுத்த வேண்டியது முக்கியமானதாகும் எனத்தெரிவித்தார்.
காசா உதவி மையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பாலஸ்தீனர்கள் 48 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல்- ஹமாஸ் படையினர் இடையே நீண்ட நாட்களாக போர் நடந்து வருகிறது. காசாவில் இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் ராணுவ தாக்குதலில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர்.
காசா உதவி மையங்களில், நிவாரண பொருட்களுக்காக காத்திருந்த 1000க்கும் மேற்பட்ட மக்கள் இதுவரை கொல்லப்பட்டதாகவும், இஸ்ரேல் பசி, பட்டினியை ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் ஐநா குற்றம்சாட்டி உள்ளது.
இஸ்ரேல் தாக்குதல் ஒரு பக்கம், மறுபக்கம் காசாவில் உள்ள ஜிகிம் கிராசிங்கில் உள்ள உதவி மையத்தில் ஏற்பட்ட, கூட்ட நெரிசலில் சிக்கி, பாலஸ்தீனர்கள் 48 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் 12க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
காசாவின் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஜூன் மாதத்திலிருந்து குழந்தைகள் 89 பேரும், வயதானவர்கள் 65 பேரும் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துள்ளனர். சர்வதேச நாடுகள், காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.