Thursday, November 13, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 136

வடக்கில் கட்டுப்பணம் செலுத்திய EPDP!

0

ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி (EPDP) கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டு சபைகளுக்கான கட்டுப்பணத்தை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று செலுத்தியது.

கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான வைத்தியநாதன் தவநாதன் குறித்த கட்டுப்பணத்தை செலுத்தினார்.

கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தினையே இன்றைய தினம் செலுத்தியிருந்தனர்.

கடந்த முறை போன்று இம்முறையும் தனித்து போட்டியிடவுள்ளதாகவும், பொது அமைப்புக்கள் சார்ந்தோர் உட்பட பலர் போட்டியிடவுள்ளதாகவும் சுகந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடாத்துவதற்கு தமது கட்சி பூரண ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்தார்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

பூதாகரமாகிய பட்டலந்த விவகாரம்!

0

பட்டலந்த விவகாரம் போன்று எத்தனை ஆயிரமாயிரம் சம்பவங்கள் எமது மண்ணிலே நடந்திருக்கிறது. இந்தச் சம்பவங்கள் உங்களுக்கு தெரியவில்லையா? இதற்கு என்ன நடவடிக்கையை நீங்கள் எடுக்கப் போகிறீர்கள்? என தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் நல்லூரடியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (13) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது.. 

“பட்டலந்த விவகாரம் போன்று எத்தனையோ ஆயிரமாயிரம் சம்பவங்கள் நம் மண்ணில் நடந்துள்ளன. இந்தச் சம்பவங்கள் உங்களுக்கு தெரியாதவையா? இவற்றுக்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? இப்போது பலரும் பேசி வரும் பட்டலந்த விவகாரம், அந்தக் காலத்திலேயே பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இளமைக் காலத்தில், இதற்கு அவருக்கும் தொடர்பு இருந்ததாகவே பேசப்பட்டு வந்தது. அந்த ஆணைக்குழு அறிக்கையும் இது போன்ற விடயங்களை உள்ளடக்கியதாகவும், அதனை உறுதிப்படுத்தியதாகவும் உள்ளது.

அவர்களைப் பொறுத்தவரை இது காலம் கடந்த விடயமாக இருந்தாலும், அதனை பகிரங்கப்படுத்தி உண்மையை வெளிக்கொண்டுவந்து, அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது சரியென்றே நான் கருதுகிறேன். உண்மையைச் சொல்லப்போனால், பட்டலந்த படுகொலை விவகாரம் என்பது இந்த நாட்டு மக்களுக்காக அங்கு நடைபெறும் ஒரு விடயம்.

ஆனால், ஆட்சியில் இருக்கும் எந்த அரசாங்கமும் தமிழர்களுக்கு எதைச் செய்தாலும் அதனை நியாயப்படுத்துவதையே மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் செய்து வந்துள்ளன. இதுவே அவர்களது கொள்கையாகவும், நிலைப்பாடாகவும் இருக்கிறது. ஏனெனில், காட்சிகள் மாறினாலும் ஆட்கள் மாறவில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களது சிந்தனையில் மாற்றம் ஏற்படுவதில்லை.

பட்டலந்த விவகாரம் தொடர்பாக ஆட்சியாளர்களிடம் நாங்கள் எந்தக் கோரிக்கையையும் வைக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களே அதுகுறித்து சண்டையிட்டுக் கொள்வார்கள். அப்படித்தான் இப்போது நடக்கிறது. இதுபற்றி சிங்கள அரசியல்வாதிகள் பேசிக்கொள்ளட்டும். ஒரு பட்டலந்த பற்றி அவர்கள் இப்போது அங்கு பேசுகிறார்கள். ஆனால், இங்கு எத்தனையோ ஆயிரம் பட்டலந்த கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. எவ்வளவு பேர் கொடுமைப்படுத்தப்பட்டு, காயப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டிருக்கிறார்கள்? அவை அனைத்திற்கும் விசாரணை நடக்கப் போகிறதா என்றால், இல்லை.

ஆகவே, பட்டலந்த போன்ற பற்பல சம்பவங்கள் எங்களுக்கு எதிராக நடந்துள்ளதற்கு, நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? ஏன் உங்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை? என்று பல்வேறு கேள்விகளை நாங்கள் எழுப்பலாம். அதைச் செய்வோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பல்கலை விரிவுரையாளர்களுக்கு பிரச்சினை!

0

ஜனாதிபதி மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்துக்கு இடையில் சந்திப்பு.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்துக்கு (FUTA) இடையிலான சந்திப்பொன்று இன்று (13) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தற்போது முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், அதற்குரிய தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தற்போது இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்குள் நுழைந்திருப்பதால், அதன் பரிந்துரைகள் மற்றும் நியதிகளுக்கு அமைவாக அரசாங்கம் செயற்பட வேண்டியிருப்பதாக தெரிவித்தார்.

அதன்படி வரவு செலவு கட்டுப்பாடுகளின் கீழ் முன்னுரிமைகளை அறிந்துகொண்டு இம்முறை வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதுடன், அந்த இக்கட்டான நிலைக்கு மத்தியிலும் அரச ஊழியர்களுக்கு பெருமளவில் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

தொழில்வாண்மையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு நல்லதொரு புரிதல் இருப்பதாகவும், அது தொடர்பில் கவனம் செலுத்தி அனைவரினதும் உரிமைகளை பாதுகாக்கவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரினி அமரசூரிய, நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி அநுருத்த கருணாரத்ன, செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த.பீ.இலங்கசிங்க உள்ளிட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்க பிரிதிநிதிகளும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிய முக்கியஸ்தர்!

0

களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

அதன்படி, அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்ததாகக் கூறப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கான புதிய தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் நியமனம் நேற்று (12) மேற்கொள்ளப்பட்டது.

அந்த நேரத்தில், களுத்துறை தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்ட லக்ஷ்மன் விஜேமான்ன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை களுத்துறை மாவட்டத் தலைவராக நியமிப்பதற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்.

மூன்றாவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

0

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு அவர் வருகை தந்தபோது இந்தக் கருத்தை தெரிவித்தார். 

மேலும் மூன்றாவது நாளாகவும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளிநொச்சி சேவைச்சந்தை வியாபாரிகளையும் அமைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சேவைச்சந்தை வியாபாரிகளின் கோரிக்கை சம்மந்தமாக ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

முழுக்குடும்பமும் தூக்கிட்டு தற்கொலை!

0

சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (13) காலை, அண்ணாநகருக்கு அருகிலுள்ள திருமங்கலம் பகுதியில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

தற்போதைய தகவல்களின்படி, இறந்தவர்கள் மருத்துவர் பாலமுருகன் (52), அவரது மனைவி சுமதி (47) (உயர்நீதிமன்ற வழக்கறிஞர்), மற்றும் அவர்களது இரு மகன்கள் (வயது 15 மற்றும் 17) ஆவர். இவர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

குடும்பத்தின் ஓட்டுநர், அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் சந்தேகப்பட்டு பொலிஸாருக்கு தகவல் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து, பொலிஸார் வீட்டிற்குள் நுழைந்து உடல்களை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், சுமார் 5 கோடி ரூபாய் கடன் தொல்லையே இந்த தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

பாலமுருகன் மற்றும் சுமதி ஆகியோர் நிதி நெருக்கடியால் மன உளைச்சலில் இருந்ததாகவும், இது அவர்களை இந்த முடிவை எடுக்க வழிவகுத்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கிறது.

உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளன, மேலும் திருமங்கலம் பொலிஸார் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஐஸ் போதை பொருட்களுடன் கப்ரக வாகனம் பறி முதல்!

0

தர்மபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ 35 பிரதான வீதியில் பயணித்த கப்ரக வாகனத்தை சிறப்பு அதிரடி படையினர் சோதனைக்குற்படுத்திய போது ஐஸ் போதை பொருட்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று13.03.2025 கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக ஏ 35 பிரதான வீதியில் பயணித்த கப்ரக வாகனத்தை சோதனையிட்ட பொழுது ஐந்து 05 கிராமம் 720 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளை சிறப்பு அதிரடிப்படையினர் கைப்பற்றியதுடன், சந்தேக நபர் ஒருவரும் அவர் பயன்படுத்திய கப்ரக வாகனமும் சிறப்பு அதிரடி படையினரால் பறி முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக தர்மபுரம் போலீஸ் நிலையத்தில் தடையப் பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

கள்ளக்காதலனுக்கு மரண தண்டனை!

0

ஒருவரை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைசெய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, பொலன்னறுவை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி ருச்சிர வெலிவத்த, பிரதிவாதிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 

தனது நண்பரை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த வழக்கில் நீதிமன்றத்தினால் குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்ட குறித்த பிரதிவாதி ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

பிரதிவாதிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த மேல் நீதிமன்ற நீதிபதி ருச்சிர வெலிவத்த, பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

அதன்படி, கொலைக் குற்றத்திற்காக பிரதிவாதிக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக கூறிய மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதியை கண்டி பல்லேகலையில் உள்ள தும்பர சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்று ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும் திகதி மற்றும் நேரத்தில் அவர் இறக்கும் வரை தூக்கு மேடையில் தூக்கிலிட உத்தரவிடுவதாகக் தெரிவித்தார். 

2015 நவம்பர் 1 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாள் ஒன்றில் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தின் அதிகார பிரிவிற்கு உட்பட்ட கவுடுல்லவில் பி.ஜி. ரன்பண்டாவை மண்வெட்டியால் வெட்டிக் கொன்றதாகக் கூறி, இலங்கை தண்டனைச் சட்டத்தின் பிரிவு 296 இன் கீழ், பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார். 

பொலன்னறுவை, கவுடுல்ல பகுதியைச் சேர்ந்த காமினி ரணவீர என்ற நபருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

பிரதிவாதியான காமினி ரணவீர, உயிரிழந்தவரின் மனைவியுடன் கொண்டிருந்த கள்ளக்காதலின் விளைவாகவே இந்தக் கொலை நடந்ததாக நீதிமன்ற விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

பா.உ சுகத் வசந்த த சில்வாவுக்கு கிடைத்த கெளரவம்!

0

இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா தெரிவு

பத்தாவது பாாராளுமன்றத்திற்கான இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா தெரிவுசெய்யப்பட்டார். அவரது பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி முன்மொழிந்ததுடன், எதிர்க்கட்சி முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க அதனை வழிமொழிந்தார். கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் அண்மையில் (11) பாராளுமன்றத்தின் இடம்பெற்ற போதே அவர் தெரிவுசெய்யப்பட்டார்.

அத்துடன், ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவராக எதிர்க்கட்சி முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க தெரிவுசெய்யப்பட்டார். அவரது பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த குமார முன்மொழிந்ததுடன், சட்டத்தரணி சுசந்த தொடாவத்த வழிமொழிந்தார். அத்துடன், மற்றுமொரு பிரதி இணைத் தலைவராக (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர்களான (வைத்தியர்) செல்லத்தம்பி திலகநாதன் முன்மொழிந்ததுடன், அஜித் பி.பெரேரா வழிமொழிந்தார்.

இங்கு உரையாற்றிய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, இந்த ஒன்றியம் ஸ்தாபிப்பது சமத்துவம், நீதி மற்றும் உள்ளடக்கிய தன்மை என்பன தொடர்பில் நாம் அனைவரும் இணைந்து எடுக்கும் ஒரு முக்கியமான படியாகும் என்று சுட்டிக்காட்டினார். இயலாமையுடைய நபர்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் திருப்தி அடைந்து சமமாக நடத்தப்படும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே தூரநோக்காக இருக்க வேண்டும் என்றும், அதற்காக கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஏனைய சேவைகளுக்கு சமமான அணுகலை உறுதி செய்யும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் புதிய தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா, தன்னை ஒன்றியத்தின் தலைவராகத் தெரிவு செய்தமைக்கு நன்றி தெரிவித்தார். பாராளுமன்றம் என்ற ரீதியில் இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் முழு நாடும் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை உணர்திறன் மிக்கதாகவும், நேர்மையானதாகவும் மாற்றுவதே ஒன்றியத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். இயலாமைய உடைய நபர்களுக்காகத் தற்பொழுது நடைமுறையில் உள்ள 28 வருடங்கள் பழமையான சட்டத்தை மறுசீரமைத்து தற்காாலத்திற்குப் பொருத்தமான சட்டமாக மாற்றுவது, தற்பொழுது காணப்படும் தேசிய கொள்கையை எதிர்காலத்திற்குப் பொருத்தமானதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் ஒன்றியம் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார். பொது நிறுவனங்களுக்கான அணுகல் வசதிகள் இயலாமையுடைய நபர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 14 வருடங்கள் கடந்துள்ளபோதும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தத் தீர்ப்பை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்த ஒன்றியத்தின் ஊடாகத் தேவையான தலையீடு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

நாகவில்லு மாணவியை தேடிவந்த அதிஷ்டம்!

0

கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறு புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை மாணவியின் வாழ்வில் பெரும் அதிஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடைபெற்று முடிந்த 2024 புலமைப்பரிசில் பரீட்சையில் புத்தளம் மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளி 138 என வெளியாகியிருந்த நிலையில், பர்சான் பாத்திமா சபிய்யா எனும் மாணவி 137 புள்ளிகளை பெற்று பரீட்சையில் சித்திபெற தவறியிருந்தார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பரீட்சைக்கு தோற்றிய குறித்த மாணவி, ஒரு புள்ளி வித்தியாசத்தில் சித்திபெற தவறியமையால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார்.

இறைவன் மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையாலும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலாலும் குறித்த பரீட்சை வினாத் தாள்களை மீள்திருத்த விண்ணப்பித்திருந்த மாணவிக்கு மகிழ்ச்சியான பெறுபேறு கிடைத்துள்ளது.

பரீட்சை வினாத் தாள் மீள்திருத்ததின் பின்னர் புத்தளம் நாகவில்லுவில் வசிக்கும் பர்சான் பாத்திமா சபிய்யா எனும் மாணவி 139 புள்ளிகளை பெற்று 2024ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் மேலதிக ஒரு புள்ளியினால் சித்திபெற்றுள்ளார்.

இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், தான் இறைவன் மீது வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை என்றும் குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற பரீட்சைகளில் சித்திபெற தவறும் மாணவர்கள் கண்டிப்பாக வினா தாள்களை மீள்திருத்தம் செய்ய விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

கல்வியில் இவ்வாறு சாதிக்க துடிக்கும் பிள்ளைகளை ஊக்குவிக்கும் பொறுப்பு சமூக ஊடகங்களுக்கும் இருக்கின்றது என்பதை நினைவூட்டுகிறோம்.