Wednesday, March 18, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 137

குருக்கள்மட ஜனாஸாக்களில் வஞ்சம் தீர்க்காதீர்!

0

புதைக்கப்பட்ட குருக்கள்மட ஜனாஸாக்களில் வஞ்சம் தீர்க்காதீர்.
முன்னாள் நீதியமைச்சர் ஹக்கீம் நிதி கொடுக்க மறுத்தாரா?

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.

இலங்கை அரசியலில் இன்றைய பேசுபொருளாக இரு சிறுபான்மை இனங்களின் மனிதப்புதைகுழிகள் காணப்படுகின்றன.

தமிழ் மக்கள் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான நியாயத்தைக்கோரி தொடர்ந்த ஆர்ப்பாட்டங்கள், ஏனைய நகர்வுகளால் தற்போது அவை தோண்டப்படுகின்றது.

அதேநேரம், 1990ல் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு ஊர் திரும்பிய காத்தான்குடியைச்சேர்ந்த ஆண், பெண், சிறுவர்கள் உள்ளடங்களாக சுமார் 60-160 பேர் வரையான முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் கடத்திக்கொலை செய்து குருக்கள்மடத்தில் புதைக்கப்பட்ட புதைகுழிகளைத் தோண்டியெடுத்து அவர்களுக்கான நியாயம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையாகும்.

எவ்வாறு செம்மணிக்கான தீர்வைப்பெற உழைத்து தற்போதைய சூழ்நிலையில் அதனை சாத்தியப்படுத்திக் கொள்ள தமிழ் சமூகம் முயற்சிக்கிறதோ, அதேபோன்று, இச்சூழ்நிலையைப்பயன்படுத்தி தங்களுக்கான நியாயங்களை முஸ்லிம் சமூகம் பெற முயற்சிப்பதில் எவ்விதத்தவறுமில்லை.

கடந்த 2010ல் மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தவணை ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் ஐநா மனித உரிமைப்பேரவையில் இலங்கை தொடர்பான தொடரான அழுத்தங்களைச்சமாளிக்கும் நோக்கில் காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டது.

இவ்வாணைக்குழு அமைக்கும் பின்னணியில் அன்றைய நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் முக்கிய பங்கிருந்தது என்பது நினைவூட்டத்தக்கது.

இவ்வாணைக்குழு அமைக்கப்பட்ட காலப்பகுதியில் இவ்வாய்ப்பினை சாதகமாக பயன்படுத்தி குருக்கள்மடத்தில் புலிகளால் கொன்று புதைக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்களும் தோண்டியெடுக்கப்பட வேண்டுமென்ற விடயத்தில் காத்தான்குடியைச்சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாருக் கடுமையான பிரயேத்தனங்களை அக்காலப்பகுதியில் மேற்கொண்டிருந்தார்.

கடத்திக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் உறவினர்களினூடாக முறைப்பாட்டைப்பதிவு செய்து, களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தினூடாக புதைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இடத்தைத்தோண்டுவதற்கான அனுமதியையும் பெற்றுக்கொண்டனர்.

ஆனால், குறித்த புதைகுழிகள் தோண்டுவதை அன்றைய ஆட்சியாளர்கள் விரும்பவில்லை. ஏனெனில், மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில், அவரின் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவராகவும் பிரதியமைச்சராகவும் இருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) இக்கொலை இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கிழக்குத்தளபதியாக செயற்பட்டிருந்தார்.

அன்று இவை தோண்டியெடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் கருணாவை சாட்சியாளராகப் பெயரிட வேண்டிய சூழ்நிலை வரும். இதை கருணாவும் விரும்பவில்லை,
ஜனாதிபதியும் சிங்கள மக்கள் மத்தியில் தனது கட்சிக்கு அவப்பெயர் வருவதை விரும்பவில்லை.

அதேநேரம், இக்காலகட்டத்தில் குருக்கள்மடத்திலுள்ள புலிகளால் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி ஆண், பெண், சிறுவர்களின் உடல்கள் வெளிவருவது சர்வதேச ரீதியாக விடுதலைப்புலிகள் கொடூரமானவர்கள், சிறுவர்களைக்கூட விட்டுவைக்காதவர்கள் என்ற அவப்பெயர் வருவதை புலம்பெயர் தமிழர் தரப்பும் விரும்பவில்லை.

அதே போன்று, கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக சிவநேசனத்துறை சந்திரக்காந்தன் (பிள்ளையான்) உட்பட விடுதலைப்புலிகளின் அன்றைய முக்கியஸ்தர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதுகாக்கும் கடப்பாட்டுடன் இருந்ததால், குறித்த புதைகுழி தோண்டப்படுவதில் அவருக்கு விருப்பமிருக்கவில்லை.

தற்போது சொல்லப்படுவது போல் குருக்கள்மடத்தில் இருக்கும் புதைகுழியைத்தோண்டுவதற்கு நீதியமைச்சு நிதி கொடுக்கவில்லை. அதனால் தான் தோண்டப்படவில்லை. நீதியமைச்சராக ரவூப் ஹக்கீம் இருந்தும் எதுவும் செய்யவில்லை என உண்மைக்குப் புறம்பான அரசியல் காழ்புணர்வு கொண்ட ஒரு சிலர் விமர்சிப்பது போன்று நிதி இவ்விடயத்திற்கு தடையாக இருக்கவில்லை. குறித்த அகழ்வுப்பணிகளுக்கு நிதி தேவைப்பட்டாலும் அதனை நிறுவன ரீதியாக சேகரித்துக் கொள்ளும் வழிமுறைகள் தாராளமாக இருந்தது. அதனை அக்காலப்பகுதியில் மாகாண சபை உறுப்பினராக இருந்த இம்மனிதப் புதைகுழியைத் தோண்ட வேண்டுமென்று பிரயத்தனங்களை எடுத்த ஷிப்லி பாறுக் பல்வேறு ஊடக அறிக்கைகளில் உறுதிப்படுத்தி இருந்தார். அதற்கான முழு நிதியையும் வழங்குவதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்( ICRC) முன்வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அன்று ரவூப் ஹக்கீம் தானே நீதியமைச்சர்? ஆம், அன்று ரவூப் ஹக்கீம் தான் நீதியமைச்சர், அவர் எவ்வாறான சூழ்நிலையில் அன்று மஹிந்த அரசாங்கத்தோடு இணைந்து கொண்டார் என்பது இன்று சிலருக்கு தெரியாவிட்டாலும், இவ்விவகாரம் பலரும் அறிந்த
விடயம். முஸ்லிம் காங்கிரஸை முழுமையாக உடைக்கும் அரசாங்கத்தின் சதியிலிருந்து கட்சியைப்பாதுகாப்பதற்கு அரசாங்கத்தோடு இணைந்து கொண்டார்.

அன்று யுத்த வெற்றியைக்காரணங்காட்டி ஆட்சிபீடமேறிய அரசாங்கம் நினைத்ததைச்செய்யும் அதிகாரங்களோடு இருந்ததால் அதன் ஆபத்துகளை முடியுமானளவு தவிர்த்துக்கொள்ளும் நோக்கில் இணைந்து கொண்டார்.

அன்றைய ஆட்சியில் றிசாட்,அதாவுள்ளாஹ் போன்ற சில முஸ்லிம் தலைவர்கள் ஆட்சியாளர்களின் செல்லப்பிள்ளைகளாக இருந்ததன் காரணத்தினால் அரச தலைவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை மாற்றாந்தாய் பிள்ளை மனப்பாங்கிலேயே பார்த்தார்கள்.

நீதியமைச்சைக்கொடுத்தார்கள். அதனைச் செயற்படுத்துவதற்கு போதிய நிதிகளை ஒதுக்கிக் கொடுக்கவில்லை. அபிவிருத்திகளுக்கும் நிதிகளை ஒதுக்கிக்கொடுக்கவில்லை. அந்த ஆட்சியில் இணைந்ததை ரவூப் ஹக்கீம் இப்படிச்சொன்னார், “கண்ணைத்திறந்து கொண்டு குழியில் விழுந்து விட்டேன்” என்று.

அதேநேரம், அந்த ஆட்சியில் இனவாதிகளால் முஸ்லிம் சமூகம் பல நெருக்கடிகள், இழப்புக்களைச்சந்தித்த நேரம், அவ்வாறான நேரங்களில் ரவூப் ஹக்கீம் ஆளுங்கட்சிக்குள் ஒரு எதிர்க்கட்சியாகச் செயற்பட்டு அரசின் போக்கைக்கடுமையாக விமர்சித்ததையும், கண்டித்ததையும் பாராளுமன்றத்தில் உரத்து குரல் எழுப்பியதையும் மறக்க முடியாது.

சர்வதேசப்பரப்பில் அன்றைய ஆட்சி எப்படி இருக்கிறது என்பதையும், முஸ்லிம் விரோதப்போக்குகளை விளக்கும் நோக்கோடு ரவூப் ஹக்கீம் “நீதியில்லாத நாட்டில் தான் நீதியமைச்சர்” என்று வெளிப்படையாகக்கூறியது ஆட்சியாளரின் போக்கை தெட்டத்தெளிவாக விளக்கியது.

இவைகள் சர்வதேச மட்டத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை ஏற்படுத்தியது. முஸ்லிம் விரோதப்போக்கிற்கெதிராக தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்து முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பிற்காகச்செயற்பட்டார் என்பது இன்றைய தேசிய மக்கள் சக்தி பிரதியமைச்சர் முனீர் முளப்பர், பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் போன்றவர்களுக்கு தெரியவாய்ப்பில்லை.

அதனால் தான் ரவூப் ஹக்கீம் இந்த அரசாங்கத்தின் கவனத்திற்கு மக்களின் நியாயமான பிரச்சினைகளை கொண்டு சென்றால் அதற்குப்பதில் வழங்காது அரசாங்கம் இவ்வாறானவர்களைக் கொண்டு ரவூப் ஹக்கீமுக்கு சேறுபூச முனைகின்றது.

குருக்கள்மடத்தில் விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத்தோண்டும் வழக்கு 2014ல் களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது.

இந்தாண்டு மஹிந்த ஆட்சியின் இறுதிப்பகுதியாகும். நீதிமன்றம் தோண்டுவதற்கு அனுமதி கொடுத்து அவை தோண்டுவதற்கான சட்டவைத்திய நிபுணர்களும் குறித்த இடத்திற்கு வந்த போது, குறித்த இடத்தை அடையாளப்படுத்துவதில் ஷிப்லி பாறுக் மற்றும் நகர சபை உறுப்பினர் றவூப் ஏ மஜீத் ஆகியோருக்கிடையில் இடத்தை அடையாளப்படுத்துவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவை நிறுத்தப்பட்டு, உரிய இடத்தை அடையாளப்படுத்தாமல் பரவலாகத்தோண்ட முடியாது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இதற்குப்பின்னால் வேறு அஜந்தாக்களோடு சிலர் செயற்பட்டார்களா? என்ற ஐயமும் வெளிப்படுத்தப்படுகிறது.

இந்த விடயத்தில் ஆரம்பம் முதல் முழுமையாக தன்னை ஈடுபடுத்திய ஷிப்லி பாறுக்கினால் பிரதேச மக்களின் கருத்துக்களை பெற்று ஊர்ஜிதமாக புதைகுழி அடையாளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும்,றவூப் ஹாஜியாரால் வேறு இடம் அடையாளப்படுத்தப்பட முரண்பாடு ஏற்பட்டது. சட்டவைத்திய அதிகாரிகளால் தெளிவாக இடத்தை அடையாளப்படுத்துமாறு கூறப்பட்டு, அவர்கள் திரும்பிச்சென்ற நிலையில், குறித்த வழக்கு சட்டமாஅதிபரின் ஆலோசனையின் பேரில் கிடப்பில் போடப்பட்டது.

அன்று குறித்த இவ்வழக்கு களுவாஞ்சிக்குடி நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட போது முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஷிப்லி பாருக்கின் சார்பாக ஆர்வமாக இவ்வழக்கில் தோன்றி தன்னாலான ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவை இவ்வாறிருக்க, கடந்த 09.07.2025 பாராளுமன்ற அமர்வில் செம்மணி விவகாரத்தில் அரசாங்கத்தின் போக்கு, அதேபோன்று சிங்கள சகோதரர்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் மற்றும் குருக்கள்மடத்தில் புனித ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டு வந்தவர்களை புலிகள் கொன்று புதைத்த குருக்கள்மடத்திலிருக்கும் புதைகுழிகளும் தோண்டப்பட வேண்டுமென்பதை நியாயபூர்வமாக ரவூப் ஹக்கீம் நீதியமைச்சருக்கு காட்டமாக எடுத்துரைத்தார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தை அமைத்து அதனூடாக அரசியல் காரணங்களுக்காக கிடப்பில் போடப்பட்ட இவ்வாறான விடயங்களைத்தோண்டி எடுக்கப்பட்டு அரசியல் தலையீடின்றி உண்மை வெளிப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்கான பங்களிப்பை ரவூப் ஹக்கீம் வழங்கினார்.

குறித்த அலுவலகம் 2016ல் ஆரம்பிக்கப்பட்டு, 2017ல் நடுப்பகுதியில் நடைமுறைக்கு வந்தது. அதன் விளைவாகவே இவ்விவகாரங்கள் இன்று கவனஞ்செலுத்தப்படுகின்றன.

மேலும், குறித்த அலுவலகத்தின் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுத்து இவ்வாறான பிரச்சினைக்குத்தீர்வை வழங்குமாறே பாராளுமன்றத்தில் நீதியமைச்சரை ரவூப் ஹக்கீம் கோரியிருந்தார்.

இதன் பின்னர் தேசிய அரசியலிலும், சர்வதேச ரீதியாகவும் குருக்கள்மடம் பேசுபொருளாக மாற்றப்பட்டு பலரும் அவை தொடர்பாக அவதானஞ்செலுத்துகின்றனர்.

இதன் விளைவாக கிடப்பில் போடப்பட்ட வழக்கு நகர்த்தல் பத்திரத்தினூடாக மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

செம்மணி மனிதப்புதைகுழி போன்று குருக்கள்மட மனிதப்புதைகுழியும் தோண்டப்பட்டு உண்மை வெளிச்சத்திற்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வவகாரம் தற்போது சூடுபிடித்து பேசுபொருளாக மாறியது ரவூப் ஹக்கீமின் பாராளுமன்ற உரை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இதனைத்தாங்கிக்கொள்ள முடியாத தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் உட்பட எதிரணியினர் உண்மையை மறைத்து, தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பதோடு, நீதியமைச்சு தோண்ட நிதி கொடுக்கவில்லை என நடக்காத விடயத்தை கற்பனை செய்து, போலியாக புனைந்து, தவறான செய்தியினை வதந்தியாக பரவவிட்டு, அப்பாவி மக்களைக்குழப்பும் மோசமான செயலைச் செய்திருக்கிறார்கள் என்பது மேற்சொன்ன விடயங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ரவூப் ஹக்கீம் ஒரு கட்சித்தலைவராக, முப்பது வருட பாராளுமன்ற அனுபவத்தைக்கொண்ட மூத்த அரசியல் தலைவருக்கு எந்த விடயத்தை, எந்த காலப்பகுதியில் பேசுவது பொருத்தமென்பது தெரியும், இதனையே காலம் அறிந்து பயிரிடல் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

எனவே, ரவூப் ஹக்கீமுக்கு அரசியல் படிப்பிக்க கத்துக்குட்டிகளும்,மூடர்களும் முனையக்கூடாது. இன்று பொருத்தமான நேரத்தில், பொருத்தமான சந்தர்ப்பத்தில் ரவூப் ஹக்கீம் குறித்த விடயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என சகோதர இன சமூக ஆர்வாளர்கள் அதன் நியாயங்களை முன்வைத்து ரவூப் ஹக்கீமின் செயலை பொதுத்தளங்களில் ஆதரித்துப்பேசும் போது, போதுமான அரசியல் அறிவில்லாதவர்கள் விமர்சனம் எனும் போர்வையில் காழ்ப்புணர்வோடு இவ்விடயத்தை விமர்சிப்பதை மக்கள் உணர்வார்கள்.

ரவூப் ஹக்கீம் அன்று பாராளுமன்றத்தில் இதனைப்பேசாவிட்டால் யார் பேசியிருப்பர்? என்ற கேள்வியை ஒவ்வொருவரும் கேட்டுப்பார்தால் உண்மை புரியும். இன்னும் இவ்விவகாரம் கிடப்பில்தான் இருந்திருக்கும்.

ரவூப் ஹக்கீம் பேசிய பின்னர் தான் அது பேசுபொருளாக இன்று பலரும் பேசுவதற்கு காரணமாகி, மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வைக் கொடுத்திருக்கிறது என்பது நிதர்சன உண்மையாகும்.

விமர்சனம் என்ற பேரில் நல்லவைகளுக்கு ஒத்துழைத்து சமூகத்திற்கு நலவு ஏற்படுவதை தங்களது வங்குரோத்து அரசியலுக்காக விமர்சித்து தடுக்கப்பார்க்கும் இத்தகையவர்கள் தான் முஸ்லிம் சமூகத்தின் கேடுகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இவ்வாறானவர்களை முஸ்லிம் சமூகம் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும்.

ஏற்கனவே ஷிப்லி பாறுக் மற்றும் றவூப் ஏ மஜீத் (றவூப் ஹாஜியார்) ஆகியோருக்கிடையில் இடத்தை அடையாளப்படுத்துவதில் இடம்பெற்ற முரண்பாடு காரணமாக கிடப்பில் போடப்பட்ட, அதே நேரத்தில் தற்போது றவூப் ஏ மஜீத் உடன் குரல்கள் அமைப்பின் சட்டத்தரணிகள் குழு இணைந்து இந்த விவகாரத்தில் முனைப்புக்காட்டுவது வரவேற்கக்கூடியது என்றாலும், கடந்த காலப்படிப்பினையிலிருந்து முரண்பாடில்லாமல் புதைக்கப்பட்ட இடத்தை சரியாக அடையாளப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.

எனவே, குருக்கள்மடத்திலுள்ள முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தோண்டும் விவகாரத்தில் அரசியல் தலைவர்கள், சமூகத்தலைவர்கள், சமூக அமைப்புக்கள் எல்லோரும் ஒத்துழைத்து, அன்று போன்று உரிய இடத்தை அடையாளப்படுத்துவதில் வந்த குழப்பங்கள் வருவதைத்தவிர்த்து, உரிய இடத்தை அடையாளங்கண்டு நீதி மன்றத்தில் அனுமதியோடு இவ்விவகாரங்களை முன்னெடுத்துச்செல்வதே சாலச்சிறந்தது.

மாகாண மட்ட உதைப்பந்தாட்டத்தில் புத்தளம் அணி சாம்பியன்!

பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற மாகாண மட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 18 வயதின் கீழ் பிரிவில் புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் பாடசாலை சம்பியன் பட்டம் வென்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியது.

தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் அகில இலங்கை போட்டிக்கு பு/வெட்டாளை அசன்குத்தூஸ் மு.வித்தியாலயம் இன்று (2025.07.15) புத்தளம் எருக்கலம்பிட்டி மு.வித்தியாலயத்தில் நடைபெற்ற வடமேல் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில் வெ/ஜோன்போல் அணியை 2:1 கோல் கணக்கில் வெற்றி பெற்று அகில இலங்கை போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டது

கடந்த இரண்டு தினங்களாக புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தில், 18 வயதின் கீழ் பிரிவில் இடம்பெற்ற மாகாண மட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில், புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் பாடசாலை மற்றும் வென்னப்புவ ஜோன் போள் சர்வதேச பாடசாலை ஆகியன பலப்பரீட்சை நடத்தின.

இதில் ஆரம்பம் முதல் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் பாடசாலை 2:1 கோல் கணக்கில் வெற்றிபெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியதுடன் இரண்டாம் இடத்தை வென்னப்புவ ஜோன் போள் சர்வதேச பாடசாலை பெற்றுக்கொண்டது.

இதேவேளை மூன்றாவது இடத்தை பெரும் அணியை தெரிவுசெய்வதற்காக இடம்பெற்ற போட்டியில் புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அணி மற்றும் புத்தளம் ஸாஹிரா கல்லூரிகள் மோதின.

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில், 2:0 அடிப்படையில் புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அணி, புத்தளம் ஸாஹிரா கல்லூரி அணியை வீழ்த்தி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா பறக்கும் இலங்கைக் குழு!

0

அமெரிக்காவின் தீர்வை வரி குறித்து கலந்துரையாட இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 18 ஆம் திகதி அமெரிக்கா செல்ல உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். 

கொழும்பில் இன்று (15) நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “எங்கள் குழு வொஷிங்டன் செல்கிறது. பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. ஓகஸ்ட் 1 ஆம் திகதிக்கு முன்பு எங்கள் மீது விதிக்கப்படும் வரிகளைக் குறைக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். அது குறித்து இருதரப்பு ஒப்பந்தத்தை எட்டுவது குறித்து ஏற்கனவே கலந்துரையாடினோம். நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்றார்.

கல்வித்துறையில் 1400 பேர் டிஸ்மிஸ்!

0

அமெரிக்காவில் கல்வித்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க அதிபரான பின்னர் டிரம்ப் செலவீனங்களை குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார். பல்வேறு அரசு துறைகளில் இருக்கும் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் உத்தரவுகளை அவர் பிறப்பித்து வருகிறார்.

அதன் முக்கிய கட்டமாக, கல்வித்துறையில் இருக்கும் 1300க்கும் அதிகமானோரை பணி நீக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்தார். ஆனால் டிரம்பின் நடவடிக்கைக்கு கடும் விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில், கல்வித்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. டிரம்பின் செலவின குறைப்பு நடவடிக்கைக்கு பாஸ்டன் நீதிமன்றம் தடை பிறப்பித்து இருந்தது.

ஆனால் தற்போது அந்த தடை உத்தரவை தகர்க்கும் வகையில் அந்நாட்டு உச்சநீதிமன்றம், பணியாளர்களை நீக்க ஒப்புதல் தந்திருக்கிறது. நீதிமன்றத்தின் இந்த அனுமதியை வரவேற்றுள்ள டிரம்ப், நாடு முழுவதும் உள்ள பெற்றோர், மாணவர்களுக்கு நன்றி என்று கூறி உள்ளார்.

மேலும் தனது நிர்வாகம் எடுக்க இருக்கக்கூடிய சில முக்கிய சீர்திருத்தங்களின் தொடக்கமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பலத்த காற்று தொடர்பில் கடும் எச்சரிக்கை!

0

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

புத்தளம் முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் எனவும், கடல் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடல் அலைகளின் உயரம் 2.5-3 மீட்டர் வரை அதிகரிக்கலாம் எனவும், இதனால் குறித்த பகுதிகளில் கடல் அலைகள் நிலத்தை அடைய வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகங்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் முறைகேடு!

0

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகளைப் பற்றி ஆராய்வதற்கு புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற, நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே சுயாதீன விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம் தொடர்பில் அரசாங்கப் பொறுப்புக் கணக்குகள் குழுவின் (COPE) பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்காக நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட இக்குழுவினை உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி விஜித் கே. மலல்கொட, ருஹுனு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் காமினி சேனாநாயக்க, அரச உடமைகள் மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் டபிள்யு.எம்.சி. பண்டார ஆகியோர் குழு அங்கத்தவர்களாகவும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உதவி கணக்காய்வாளர் திருமதி ஹஸ்தி பத்திரண அழைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட சம்பவம் பற்றிய விசாரணை அறிக்கையினை 60 நாட்களுக்குள் கல்வி, உயர் கல்வி, தொழிற்கல்வி அமைச்சிடம் கையளிக்க வேண்டும்.

விடைபெற்றது ‘பாத்திய’ காட்டு யானை!

0

நோய்வாய்ப்பட்டு மிகவும் பலவீனமான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ‘பாத்திய’ காட்டு யானை உயிரிழந்துள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் அசோக தன்கொல்ல தலைமையிலான குழு, பொல்பிதிகம பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் ஆபத்தான நிலையில் இருந்த ‘பாத்திய’ யானைக்கு சிகிச்சை அளிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. 

எனினும், தசைச் சிதைவு மற்றும் பாதிக்கப்பட்ட இரத்த ஓட்டம் காரணமாக யானை ஆபத்தான நிலையில் இருந்ததாக கால்நடை வைத்தியர்கள் தெரிவித்தனர். 

பல நாட்களாக ஒரே பக்கத்தில் இருந்த பாத்திய, நேற்று (14) மறு பக்கத்திற்கு திருப்பப்பட்டது. 

பேராசிரியர் அசோக தன்கொல்லவின் அறிவுறுத்தலின் பேரில், வைத்தியர் தரிந்து விஜேகோன், வனவிலங்கு மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து தேவையான பணிகளை மிகுந்த முயற்சியுடன் மேற்கொண்டார். 

இந்நிலையில், 30-35 வயது மதிக்கப்பட்ட ‘பாத்திய’ யானை, கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (15) காலை உயிரிழந்தது. 

புத்தளத்தில் சிக்கிய பாரியளவு கடத்தல் பீடி இலைகள்!

0

இலங்கை கடற்படையினர், 2025 ஜூன் 30 முதல் ஜூலை 10 வரை புத்தளம் மற்றும் கல்பிட்டி கடற்கரை மற்றும் கடல் பகுதிகளில் கலால் துறையுடன் இணைந்து மேற்கொண்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 1307 கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்களும் இரண்டு (02) டிங்கிகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளை புத்தளம் கலால் அலுவலகத்துடன் இணைந்து புத்தளம், பாரமுனை, வெல்லமுண்டலம் மற்றும் உச்சமுனை ஆகிய பகுதிகளில் புத்தளம் மற்றும் கல்பிட்டி ஆகிய இடங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் பீடி 1307 கிலோகிராம் இலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.

வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டம் ஆரம்பம்!

இலங்கையில் சவூதி அரேபியாவின் 11 வது மேம்பாட்டு முயற்சியான வயம்ப பல்கலைக்கழகம் நகர அபிவிருத்தி திட்டம் இன்று (14)  திறந்துவைக்கப்பட்டது.

வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டத்தின் திறப்பு விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்த கல்வி மற்றும் வளர்ச்சித் திட்டம், சவுதி அரேபியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்குமிடையேயான ஆழமான உறவுகளை பிரதிபலிக்கிறது என இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்
காலித் ஹமூத் அல்கஹ்தானி அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித வள அபிவிருத்தியில் முதலீடு செய்வதும், இலங்கையின் கல்வித்துறையின் எதிர்காலத்தை அபிவிருத்தி செய்வதும் முக்கியமானவை என்பதில் சவூதி அரேபிய கொண்டுள்ள நம்பிக்கையே இந்த திட்டங்களை செயற்படுத்த காரணமாக அமைந்துள்ளன.

பல்கலைக்கழகங்களை கட்டுதல், அபிவிருத்தி செய்தல் என்பது வெறும் கட்டிடங்களை நிர்மாணிப்பது மட்டுமல்ல, மாறாக அது ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான அடித்தளமாகவும், மக்களுக்கிடையேயான புரிதலையும் அறிவையும் இணைக்கும் பாலமாகவும் அமைகிறது.

இந்த திட்டம், எவ்வித உட்புற நோக்கங்களோ அல்லது நிபந்தனைகளோ இல்லாமல், பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்ட உண்மையான அபிவிருத்தி கூட்டுறவுகள் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்பதற்கான ஒரு முன்னுதாரணமாக உள்ளது.

1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து, சவூதி அபிவிருத்தி நிதியம், உலகம் முழுவதும் அபிவிருத்தி மற்றும் அமைதிக்காக சேவையாற்றும் சவூதியன் கொள்கையின் அடிப்படையில், 90க்கும் மேற்பட்ட நாடுகளில் நிலைத்த பயனுடைய திட்டங்களை செயற்படுத்த மிகுந்த முயற்சியுடன் செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக கல்விக்கு செய்கின்ற உதவி மாபெரும் தர்மம் என்பதை இத்திட்டத்தின் மூலம் அறிகிறோம். கல்வியே ஒரு சமூகத்தின் மேம்பாட்டுக்கு காரணமாகும்.

இது முன்னுதாரணம் மிக்க நடவடிக்கை என்றும் கூறலாம். ஒவ்வொருவரும் இந்த உலகில் வாழும் போது மற்ற மனிதனின் துன்பங்களில் பங்கு கொண்டு அதனை தீர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

எங்கள் தலைவர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த உலகத்தில் இப்படியான முன்னுதாரண மனிதராக மாநபியாக இருந்து வாழ்ந்து வழிகாட்டி இருக்கிறார்கள்.

இந்த வகையில் இப்பொழுது திறந்து வைக்கப்பட்டிருக்கின்ற வயம்ப பல்கலைக்கழகத்திட்டம் நபிகளாரின் சிந்தனையை பிரதிபலிக்கின்ற ஒரு செயல் என்பதையும் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

வயம்ப பல்கலைக்கழகம் அறிவின் கலங்கரை விளக்கமாகவும் நம்பிக்கையின் இல்லமாகவும் இருப்பதையும், மேலும் செழிப்பான மற்றும் பாதுகாப்பான இலங்கையை கட்டியெழுப்ப உதவும் புது தலைமுறைகளை உருவாக்கும் தளமாகவும் அமையும் என நான் எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்
காலித் ஹமூத் அல்கஹ்தானி தெரிவித்துள்ளார்.

துரியன் தோட்டம் சென்றவருக்கு துப்பாக்கி சூடு

0

மீரிகம, ஏக்கர் 20 பகுதியில் உள்ள துரியன் (முள்நாறி) தோட்டமொன்றில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் மீது தோட்டத்தின் காவலாளி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் மீரிகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட காவலாளி மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

இதேவேளை இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இன்று (14) பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார். 

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 2025.01.01 முதல் 2025.07.13 வரை பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 50 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்புடையவை என்றும், ஏனைய 18 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் தனிப்பட்ட காரணங்களுக்காக இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

மேற்படி 68 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 37 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களில் 34 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என்றும், துப்பாக்கிச் சூட்டில் 39 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 30 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.