Thursday, November 13, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 139

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

0

2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை, மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 3527 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய, 2025.03.11 நள்ளிரவு 12.00 மணி முதல் பரீட்சைகள் முடிவடையும் வரை, குறித்த பரீட்சை தொடர்பான தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள், எதிர்பார்ப்பு வினாக்களை வெளியிடுதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு..

கல்பிட்டியில் சிக்கிய 160,000 கடத்தல் சிகரெட்டுகள்!

0

சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட சுமார் 160,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மாத்திரைகள் கல்பிட்டிய கடற்படையினரால் பறிமுதல்!

கல்பிட்டி இப்பனதீவு கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையில், குறித்த கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த டிங்கி படகொன்றில் இருந்த சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வர முற்பட்ட சுமார் ஒரு இலட்சத்தி அறுபதாயிரம் (160,000) வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் இருபத்தி இரண்டாயிரத்தி நூறு (22,100) மாத்திரைகளுடன் குறித்த டிங்கி படகொன்று (01) கடற்படையினரால் கைது பறிமுதல் செய்யப்பட்டது.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தடுப்பதற்காகவும் கடற்படையினர் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினருக்கு கிடைத்த தகவல்களின்படி, உச்சமுனை கடற்படை முகாமின் விசேட கப்பல் படையணி குழுவொன்றை அனுப்பி இப்பனதீவிற்கு அப்பால் உள்ள கடற் பகுதியில் மற்றும் குறித்த கடற்கரைப் பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இப்பனதீவு கடற்கரையில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று (01) அவதானிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

அங்கு, குறித்த டிங்கி படகிலிருந்து இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் ஒரு இலட்சத்தி அறுபதாயிரம் (160,000) வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் இருபத்தி இரண்டாயிரத்தி நூறு (22,100) மாத்திரைகளுடன் குறித்த டிங்கி படகொன்று (01) கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கடற்படையின் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக கரைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் இருந்த குறித்த வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மாத்திரைகளை இவ்வாறு இப்பனதீவு கடற்கரையில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

மேலும், கடற்படையினரால் மீற்க்கப்பட்ட டிங்கி படகு, சுமார் ஒரு இலட்சத்தி அறுபதாயிரம் (160,000) வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் இருபத்தி இரண்டாயிரத்தி நூறு (22,100) மாத்திரைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாயின் உயிரை பறித்த மகனின் கார்!

0

கொஹுவல பொலிஸ் பிரிவின் சுமனாராம வீதியில் நேற்று (7) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்த பெண் தனது மகன் மற்றும் அவரது மனைவியுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​கார் திடீரென நின்றுள்ளது.

இதன் காரணமாக, மகன் காரின் முன் சக்கரத்தில் ஒரு கல்லை வைத்து காரை இயக்க முயற்சி செய்துள்ளார்.

இதற்கிடையில், உயிரிழந்த பெண்ணும் அவரது மருமகளும் காரை இயக்குவதற்காக முன் சக்கரத்திலிருந்து கல்லை அகற்றியுள்ளனர்.

இருப்பினும், வாகனம் சரிவான பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததால், அது திடீரென முன்னோக்கி நகர்ந்துள்ளது.

இதன்போது, இறந்த பெண் காரின் சில்லில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கார் முன்னோக்கி வந்த போது மருமகள் உடனடியாக விலகிய போதும், உயிரிழந்த பெண்ணால் விலக முடியாததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றும் 59 வயதுடையவர் என்றும், கொஹுவல சுமனாராம வீதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

beautiful women’s day flower decorative wishes greeting design

இன்று சர்வதேச மகளிர் தினம்!

0

சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும் என ஜனாதிபதி அநுரக குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மகளிர் தின வாழ்த்துச் செய்தியை வெளியிட்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

தொழில் செய்யும் நேரத்தைக் குறைத்தல், மிகச் சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி சுமார் 15,000 பெண்கள் நியூயோர்க் நகரில் நடத்திய பேரணியின் விளைவாக மார்ச் 08 சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது.


கடந்த  காலங்களில் மகளிர் தினத்தைக் கொண்டாடுவதற்காக நம் நாட்டில் பல கலந்துரையாடல்களும் கருத்தாடல்களும் நடத்தப்பட்டிருந்தாலும், மேடைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட  அந்த கலந்துரையாடல்கள், பூமியில் ஒரு யதார்த்தமாக விதைக்கப்படவில்லை.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கட்டியெழுப்புவதில் இலங்கை பெண்களின் பங்களிப்பு மகத்தானது.

 அந்த மகத்தான பணிக்காக ஒரு அரசாங்கமென்ற வகையில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை, கடந்த குறுகிய காலத்தில் இலங்கைப் பெண்களுக்கு பல வெற்றிகளை அடைய தேவையான  ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம் என்பதையும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

பல தசாப்தங்களாக  கலந்துரையாடலுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த  பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம், பங்கேற்பு மற்றும்  வகிபாகத்தை அதிகரித்து, கடந்த பொதுத் தேர்தலில் இருபத்தி இரண்டு பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இந்நாட்டின் அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.

அதேபோல், ஆண்- பெண் சமூக சமத்துவத்திற்கான சமூக நீதியை அடைவதற்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையான உற்பத்திப் பொருளாதார செயல்பாட்டில், இந்நாட்டின் சனத்தொகையில் 51.7% ஆக இருக்கும் பெண்களை தீவிரமாகவும்  செயற்திறனுடனும்  ஈடுபடுத்தும் திட்டத்தை நாம் செயல்படுத்தியுள்ளோம்.


நீதியான சமூகம்,  சுதந்திரமான நாடு, சுதந்திரமான பெண்கள் என்ற அபிலாஷைகளை அடையும் வகையில் வீடு, போக்குவரத்து, சமூகம், தொழிலிடம் மற்றும் அரசியல் உட்பட அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கும், பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் போன்ற பெண்களின் தனித்துவமான உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அரச கொள்கைகளை வகுப்பதற்கு நாம் முன்னுரிமை அளித்துள்ளோம்.

இதற்கமைய,  ” சகல பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கும் சமத்துவம்,உரிமைகள் மற்றும் வலுவூட்டல் எனும் தொனிப்பொருளின் கீழ் ” நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் ” என இந்த ஆண்டு மகளிர் தினத்தை ஏற்பாடு செய்வதிலுள்ள  அர்த்தம் மற்றும் நடைமுறைச்சாத்தியம்  என்பனவற்றை நினைவூட்ட வேண்டும்.

பொருளாதார சுபீட்சத்தை அடைவதற்கும், நாட்டின் பெண்களுக்கு பாதுகாப்பான வாழ்வு மற்றும் நாகரிகமான  சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஒரு புதிய மறுமலர்ச்சியை நோக்கிய நமது பயணத்தில் முழுமையான பெண்கள் தலைமுறையினரின் ஆதரவை  எதிர்பார்த்து சர்வதேச மகளிர் தினத்திற்கு எனது மனார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை வந்த பாகிஸ்தான் போர் கப்பல்!

0

நல்லெண்ண விஜயமொன்றை மேட்கொண்டு பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் (PNS) அஸ்லட் புதன்கிழமை (மார்ச் 5) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கடற்படை மரபுகளுக்கு இணங்க, இலங்கை கடற்படை வருகை தந்த கப்பலுக்கு வரவேற்பு அளித்ததாக கடற்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஸ்லட் ஒரு 123 மீட்டர் நீளமுள்ள போர்க்கப்பலாகும். இதன் கட்டளை அதிகாரியாக கெப்டன் முஹம்மத் அசார் அக்ரம் பணியாற்றுகிறார்.  தமது விஜயத்தின் போது, கப்பலின் குழுவினர் இங்குள்ள பல  சுற்றுலா தலங்களுக்கு விஜயம் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கப்பல் அதன் விஜயத்தை நிறைவு செய்து நேற்று (மார்ச் 6) இலங்கையை விட்டு புறப்பட்டது.

மத்தல விமான நிலையம் குறித்து அதிரடி அறிவிப்பு!

0

மத்தல மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை விமான பழுதுபார்க்கும் மையமாக மாற்ற அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இடம்பெற்று வரும் வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் போது கருத்து தெரிவித்த அமைச்சர், பொருத்தமான வெளிநாட்டு பங்காளியுடன் இணைந்து மத்தல விமான நிலையத்தை இலாபம் ஈட்டும் தொழிலாக மாற்ற அரசாங்கம் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

“மத்தல விமான நிலையம் 36.5 பில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதன் மொத்த இழப்பு 38.5 பில்லியன் ரூபாய் ஆகும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன ரீதியான பாகுபாடு!

0

கல்குடா முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்தில் தீர்வினைக்கோரிய ரவூப் ஹக்கீம்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி.

பாராளுமன்றத்தில் ( 04) பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் மீதான செலவு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கல்குடா முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தொடர்பில் பல்வேறு விடயங்களை பட்டியலிட்டு தனது ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்தார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய அவர்,
நிலத்தொடர்பற்ற ஒரு பிரதேச செயலகம் ஒரு பிரதேசத்தை நிர்வாகம் செய்ய முடியாது. நிலத்தொடர்பற்ற வகையில் நிர்வாகம் கல்முனையில் அமைய வேண்டுமென்று தமிழ்த்தரப்பில் விரும்பப்படுகின்ற போது, அதேபோன்று, நிலத்தொடர்பற்ற வகையில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற கோறளைப்பற்று மத்திக்கு சொந்தமாக ஏற்கனவே எல்லை நிர்ணய சபையால் நிர்ணயிக்கப்பட்ட ஜெயந்தியாய, ரிதிதென்ன போன்ற கிராமங்கள் மாத்திரம் இன்று கோறளைப்பற்று மத்தியோடு நிலத்தொடர்பற்ற வகையில் இணைக்கப்பட்டிருக்கிறது.

இது வேண்டுமென்று ஒரு அமைச்சரவைப்பத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற விடயத்திற்கு மாற்றமானதாகும். ஏற்கனவே ஒரு ஆணைக்குழு பரிந்துரை செய்திருக்கத்தக்கதாக அது சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடாமல் வேண்டுமென்று தவிர்க்கப்பட்டு வருகின்றது.

11 கிராம சேவர் பிரிவுகள் உள்ளடக்கிய கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் எல்லைகள் சம்பந்தமாக பாரிய பிரச்சனை இருக்கிறது.

இந்தப்பிரச்சனைக்கான தீர்வை கட்டாயமாக இந்த அரசாங்கம் பெற்றுத்தர வேண்டும்.

இது ஒரு மிகப்பாரிய அநீதியாகும். 2000ம் ஆண்டு ஜூலை 13ம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவைத்தீர்மானம் பனம்பல ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானமாகும்.

குறிப்பாக, கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்திற்கு 18 கிராம சேவகர் பிரிவுகளும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு 11 கிராம சேவகர் பிரிவுகளும் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு, அது சம்பந்தமான முடிவுகள் எட்டப்பட்டிருக்கும் நிலையில், வேண்டுமென்றே கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகம் சுமார் 686 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை தங்களுடைய ஆளுகைக்குள் வைத்துக் கொண்டிருக்கின்றது.

கோறளைப்பற்று மத்திக்கு ஆணைக்குழுவின் பரிந்துரையின் மேல் உரித்தாக வேண்டிய 240 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை முழுமையாக ஆளுகை செய்ய முடியாத ஒரு நிலை பிரதேச செயலகத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது.

இது தற்போது 7.78 சதுர கிலோ மீட்டருக்கு நிலப்பரப்புக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற மிக மோசமான செயற்பாடாகும்.

மட்டக்களப்பு மாவட்ட அரச நிர்வாகம் இவ்விவகாரத்தில் அநீதியாக நடந்து கொள்வது மிகப்பாரதூரமான விடயமாகும்.

இப்படியான எல்லைப்பிரச்சனைகளுக்கான தீர்வாக ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளவாறு வர்த்தமானியில் பிரசுரித்து, நிர்வாக ரீதியாக இருக்கின்ற பிரச்சினை தீர்க்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறான சிக்கல் நிலையினால் சில கிராம சேவகர் பிரிவுகளுக்கு 02 கிராம சேவகர்கள் நிர்வாகம் செய்கின்ற குழப்பமான நிலை ஏற்பட்டிருக்கின்றது.

எல்லை நிர்ணய ஆணை குழுவின் சிபாரிசுகள் பின்பற்றப்படாத காரணத்தினால் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு 02 கிராம உத்தியோகத்தர் கடமை புரியும் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொறுப்பான அமைச்சர் கவனஞ்செலுத்தி, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு உரிய 240 சதுர கிலோ மீட்டர் நிலைப்பரப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இது வேண்டுமென்றே மாவட்ட நிர்வாகம் அம்மக்களுக்கு செய்யும் சட்ட விரோதசெயலாகும்.

இது தொடர்பில் இதற்கு முன்னரும் பாராளுமன்றத்தில் பல தடவை பேசியுள்ளோம். ஆனால், அவற்றுக்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும், ஓட்டமாவடி பலநோக்குக் கூட்டுறவு சங்க வளாகத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட கலாசார மண்டபக்கட்டிடம் இன்னும் முழுமை பெறாது கம்பிக்கூடாக காட்சியளிக்கிறது.

கடந்த ஜனாதிபதித்தேர்தல் பிரசாரத்திற்குச் சென்ற ஜனாதிபதி வேட்பாளர் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக குறித்த கம்பிக்கூடுகளை கடுமையாக விமர்சித்திருந்தார்.

விமர்சித்த அவருக்கும் பொறுப்புள்ளது. இம்மண்டபத்தின் நிர்மாணப்பணியை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் அதிகாரத்தின் கீழுள்ள ஓட்டமாவடி முகைதீன் அப்துல் காதர் விளையாட்டு மைதானம் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கின்றது. இதனால் இதனைப்பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகின்றது.

அங்குள்ள பார்வையாளர்கூடம் சேதமடைந்து, பயன்படுத்தவே முடியாத நிலையில் அதில் பல்வேறு முறைகேடான சம்பவங்கள் இடம்பெறுகின்றது. ஆகவே, இவ்வமைச்சின் கீழான பிரதேச சபைக்குச் சொந்தமான மைதான என்பதால் நிதியொதுக்கீடுகளை மேற்கொண்டு இதனை அபிவிருத்தி செய்யுமாறு வேண்டுகிறேன்.

அத்துடன், கடந்த அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகக்கட்டிடத்தை பூரணப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இப்பிரதேசத்தில் நீண்ட காலமாக பிறப்பு, இறப்பு பதிவுகள் வாழைச்சேனை வைத்தியசாலையூடாக ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் பதியப்பட்டு வந்த நிலையில், அவை தற்போது கோறளைப்பற்று செயலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இது முழுக்க முழுக்க இனவாதத்துடன் செய்யப்பட்ட செயலாக மக்கள் பார்க்கிறார்கள். உண்மையில் வாழைச்சேனை வைத்தியசாலை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக எல்லைக்குள் அமைந்திருப்பதனால் குறித்த பதிவு விடயங்களை மேற்கொள்ளும் அதிகாரம் கோறளைபற்று மத்தி செயலகத்திற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

அதற்காக பல நியாயமான காரணங்கள் இருந்த நிலையில், அவைகளைப் புறக்கணித்து இவ்வாறான நடவடிக்கைகள் இனவாத நோக்குடன் கடந்த ஆட்சியிலிருந்த அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, இந்த பிறப்பு, இறப்பு பதிவு விவகாரம் பலவந்தமாக பறித்தெடுக்கப்பட்டு கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தோடு இணைக்கப்பட்டமை அப்பிரதேச மக்கள் மத்தியில் விஷனத்துக்குரிய விடயமாக நீண்டகாலமாக பேசப்பட்டு வந்தது. அதையும் கவனத்திலெடுத்து அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுத்தர வேண்டுமென அமைச்சரிடத்தில் கோரிக்கை விடுக்கின்றேன்.

கள்ளிச்சை கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கான சகல வசதிகளும் வழங்கப்பட்டு மீள்குடியமர்த்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

யுத்த காலத்தில் கள்ளிச்சையிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியேற்றுமாறு பல்வேறு கோரிக்கைகள் பிரதேச செயலகத்தினூடாக விடுக்கப்பட்ட போதும், அது மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு சென்றடையவில்லை.

கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவியில் மேற்கொள்ளப்படவுள்ள வீட்டுத்திட்டங்களில் கள்ளிச்சையையும் உள்ளட்டக்கி மீள்குடியேற்றம் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

கள்ளிச்சை மீள்குடியேற்றம் தொடர்பில் 2011ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக நளீம் எம்பி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாகரைப் பிரதேச செயலக எல்லைக்குள் வசிக்கும் காரமுனை, நாவலடி போன்ற பிரதேசங்களில் நீண்டகாலமாக வசித்து வரும் மக்கள் காணி அனுமதிப்பத்திரங்களை குறித்த பிரதேச செயலகத்திலிருந்து பெற முடியாமல் ஓரங்கட்டப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.

காரமுனை, நாவலடியில் வாழும் முஸ்லிம்களுக்கு கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தினால் அநீதியிழைக்கப்படுகின்றது.

எனவே, காணிக்கச்சேரி நடாத்தப்படுகின்ற வேளையில் காரமுனை, நாவலடி பிரதேச மக்களுக்கும் காணி அனுமதிப்பத்திரங்களை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளவதாக கல்குடா முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் ரவூப் ஹக்கீம் தீர்வினைக் கோரினார்.

வடக்கிற்கு அடிக்கடி செல்லும் அரசாங்கம்!

0

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையம் மற்றும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை பகுதிகளுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

வடக்குக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டுள்ள கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி, கிளிநொச்சிக்கும் விஜயம் மேற்கொண்டு ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையம் மற்றும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தார்.

ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையத்திற்கு முதலில் சென்ற அமைச்சர், உப்பு உற்பத்தியின் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன், நவீன இயந்திரங்கள் கொண்டு அடுத்த மாதத்திலிருந்து முன்னெடுக்கப்படவுள்ள உப்பு உற்பத்தி செயற்பாட்டின் முன்னேற்றத்தினையும் பார்வையிட்டார்.

மேலும் உப்பு உற்பத்தி செய்யும் ஏனைய இடங்களையும் பார்வையிட்டார்.

அமைச்சருடன் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.சிறீபவாணந்தராஜா ஆகியோரும் தேசிய உப்பு உற்பத்தி நிறுவனத்தின் தலைவர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர், கண்டாவளை பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலை பகுதிக்கு சென்ற அமைச்சர் மற்றும் குழாமினர் தொழிற்ச்சாலையின் மீள் இயக்கம் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

மின்சார சபையின் இலாபம் 99% வீழ்ச்சி!

0

கடந்த 2024 டிசம்பர் 31 உடன் நிறைவடைந்த காலாண்டில் இலங்கை மின்சார சபையின் நிகர இலாபம் 99% வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதானமாக மின்சார சபையின் வருமானம் குறைதல் மற்றும் விற்பனை செலவு உயர்வே இந்த நிலைமைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

2024 டிசம்பர் 31 உடன் முடிவடைந்த காலாண்டில் மின்சார சபையின் வருமானம் 111.80 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதோடு, 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 156.25 பில்லியனில் இருந்து 28% குறைவாகும்.

இதற்கிடையில், மின்சார சபையின் விற்பனை செலவுகள் 78.03 பில்லியனாக இருந்து, இந்த காலாண்டில் இது 49% வீத அதிகரிப்புடன் 116.29 பில்லியனாக அதிகரித்துள்ளது.

இதன் பின்னணியில் கடந்த 2023 டிசம்பர் காலாண்டில் 78.22 பில்லியன் ரூபாவாக பதிவான மின்சார சபையின் மொத்த இலாபம், கடந்த காலாண்டில் 4.49 பில்லியன் வரையில் 106% வீதத்தால் குறைவடைந்துள்ளது.

மின்சார சபையானது 2024 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் 3.04 பில்லியன் இயக்க இழப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. 2023 டிசம்பர் காலாண்டில், 91.97 பில்லியன் செயல்பாட்டு இலாபத்தை பதிவு செய்ய முடிந்துள்ளமை விசேட அம்சமாகும். இருப்பினும், 2024 டிசம்பர் காலாண்டின் நிதி வருமானம் மற்றும் செலவுகளை சரிசெய்த பிறகு, மின்சார சபையின் நிகர இலாபம் 603 மில்லியனாக ரூபாவாக பதிவாகியுள்ளது.

இது 2023 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டின் நிகர இலாபத்துடன் ஒப்பிடும் போது, 99% சதவீத குறைவு எனவும் தெரியவந்துள்ளது.

ராஜிதவுக்கும் ரோஹிதவுக்கும் இடையில் மோதல்!

0

கடந்த பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணவும், புதிய முடிவுகளை வெளியிடவும் உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை செப்டெம்பர் 30ஆம் திகதி பரிசீலிப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

இந்த மனு இன்று (06) நீதிபதிகள் பிரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

இந்த மனுவில் பிரதிவாதிகளாக தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள், களுத்துறை தெரிவத்தாட்சி அதிகாரி, களுத்துறை மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினர் பெயரிடப்பட்டுள்ளனர். 

கடந்த பொதுத்தேர்தலின் போது களுத்துறை மாவட்டத்தில் விருப்பு வாக்குகளை எண்ணுவதில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட முடியாமல் போனதாக மனுதாரர் தெரிவித்தார். 

தனக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையிலான விருப்பு வாக்குகளில் உள்ள வித்தியாசம் 119 வாக்குகள் மட்டுமே என்றும், வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், கடந்த பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியில் களுத்துறை மாவட்டத்திற்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளை மீண்டும் கணக்கிட்டு புதிய முடிவுகளை வெளியிடுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். 

மனுதாரர் சார்பாக சட்டத்தரணி கீர்த்தி திலகரத்ன மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ​பைஸ் முஸ்தபா ஆகியோர் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.