Wednesday, March 18, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 145

இஸ்லாமிய புத்தாண்டில் சமாதானம் நிலவட்டும்!

0

ஹிஜ்ரி 1447 வாழ்த்துச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்

“நாம் அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு,எல்லா வாய்ப்புகளையும்  நன்றாகப் பயன்படுத்தி, ஒற்றுமைக்காகப் பாடுபடுவதோடு,பிறந்துள்ள இஸ்லாமியப் புத்தாண்டில் உலகில்   நிலையான சமாதானம்  ஏற்பட இறைவனைப்  பிரார்திப்போமாக” என ஹிஜ்ரி 1447 ஆவது இஸ்லாமிய புத்தாண்டையிட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்   விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பல பிரதேசங்களில் முஹர்ரம் தலைப் பிறை தென்பட்டதாக இன்றிரவு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து அவர்  வெளியிட்டுள்ள இஸ்லாமியப் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளளதாவது,

மக்கமாநகரில் இஸ்லாத்தின் எதிரிகளின் தொல்லைகள்     அதிகரித்த போது, இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் சஹாபாக்களுடன்  அங்கிருந்து வெளியேறி, மதீனாவுக்கு இடம்பெயர்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  சம்பவத்தை அடியொட்டியே  இஸ்லாத்தில் ஹிஜ்ரி ஆண்டுக் கணிப்பு  மேற்கொள்ளப் பட்டிருக்கின்றது.

மத்திய கிழக்கில் பலஸ்தீனத்தில் சில வல்லரசுகளின் ஒத்துழைப்புடன், இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனப்  படுகொலைகளுக்கு மத்தியிலும், ஈரான் மீது  இஸ்ரேலும், அமெரிக்காவும் ஒரு தலைப் பட்சமாகத் தொடுத்த பலத்த தாக்குதலுக்கு மத்தியிலும் இன்னொரு இஸ்லாமியப்  புத்தாண்டை உலக முஸ்லிம்கள் சந்திக்கின்றனர்.

இவ்வாறு,முதல் மாதம் முஹர்ரம் தலைப்பிறையோடு நாம் ஒரு புதிய இஸ்லாமிய ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சந்தர்ப்பத்தில், அல்லாஹ் நம்மனைவருக்கும் சிறந்த  வழிகாட்டுதல்களையும், பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், சமாதானத்தையும்,நீதியின் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் ஆற்றலையும் வழங்கி  அருள்வானாக .

Rauf Hakeem, MP.
Leader,Sri Lanka Muslim Congress.

வெளியேற்றப்பட்டார் சீ.வி.கே. சிவஞானம்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “அணையா விளக்கு” போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற வட மாகாண சபை அவைத் தலைவரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவருமான சீ.வி.கே. சிவஞானம் போராட்ட களத்தில் நின்ற மக்களால் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

அணையா விளக்கு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை (25) மூன்றாவது நாளாக தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் பகல் வேளையில் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற சிவஞானத்தை அங்கிருந்த மக்கள் வெளியேறுமாறு கோஷங்களை எழுப்பி போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றியிருந்தனர். 

யாழ்ப்பாணத்தில் பலர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என பகிரங்கமாக குற்றச்சாட்டப்பட்டு வரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினருடன் கூட்டு சேர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைகளில் இலங்கை தமிழ் அரசு கட்சி ஆட்சி அமைத்துள்ளதாகவும், அவ்வாறானவர்களுடன் கூட்டு சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள தகுதியற்றவர்கள் என்றும் கூறியே போராட்டகளத்தில் இருந்து சிவஞானத்தை அப்புறப்படுத்தியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். 

அதேவேளை செம்மணியில் இடம்பெறும் அனையா விளக்கு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக கிளிநொச்சி வர்த்தகர்கள் கதவடைப்பை மேற்கொண்டுள்ளனர். உணவங்கள், மருந்தகங்கள், வங்கிகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாட்சப் தடை!

0

அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அதிகாரபூர்வமான சாதனங்களில் வாட்ஸ்அப் செயலி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான இந்த செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறி இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறிய தடைக்கான காரணமாக, பயனர்களின் தரவு பாதுகாப்பில் வெளிப்படைத்தன்மை இல்லாதது, சேமிக்கப்பட்ட தரவுகள் குறியாக்கப்படாமல் இருப்பது, மற்றும் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை சைபர் பாதுகாப்பு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

வாட்ஸ்அப் பயன்பாடு பயனர்களுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கும் என்று அவர்கள் கருதுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை மெட்டா நிறுவனம் மிகவும் கடுமையாக எதிர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப், அங்கீகரிக்கப்பட்ட மற்ற செயலிகளை விட உயர் பாதுகாப்பு தரங்களைக் கொண்டிருப்பதாக மெட்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2022ம் ஆண்டில் பாதுகாப்பு பிரச்சினைகளைக் காரணத்தை சுட்டிக்காட்டி, டிக்டாக் உள்ளிட்ட சில செயலிகளை நாடாளுமன்ற ஊழியர்களின் சாதனங்களிலிருந்து பிரதிநிதிகள் சபை தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் வரலாறு காணாத பருவமழை!

0

சீனாவில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தில் சிக்கி 80,000 பேர் பாதிக்கப்பட்டு இருப்பிடங்களை இழந்துள்ளனர்.

சீனாவில் வரலாறு காணாத அளவுக்கு பருவமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் அந்நாட்டின் ஹூனான், ஹூபே மாகாணங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

தெற்கு சீனாவில் உள்ள குய்சூ மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் தவிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். கிட்டத்தட்ட 80,000 மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

கோன்ஜியங், ரோன்ஜியங் நகரங்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. அங்கு பாயும் ஆறுகளின் நீர்மட்டம் வெகு வேகமாக உயர்ந்து வருகிறது.

எனவே, தாழ்வான பகுதிகளில வசிக்கும் ஏராளமான மக்கள் உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை பத்திரமாக மீட்கும் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

22 பல்கலைக்ககழக மாணவர்களுக்கு வகுப்பு தடை!

0

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 22 மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிப்பதற்கு பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

பகிடிவதை செய்த சம்பவத்தின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

புதிய மாணவ குழுவிற்கு கொடூரமாக பகிடிவதை செய்த வீடியோ சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. 

இந்த விடயம் தொடர்பான ஆரம்ப விசாரணைகளை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மூன்றாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொறியியல் பீடங்களைச் சேர்ந்த 22 மாணவர்களுக்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பகிடிவதை செய்த சம்பவம் குறித்து பொலிஸாரும் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கிடையில், பகிடிவதை உட்பட அனைத்து வகையான துன்புறுத்தல்களையும் தடுப்பதற்காக செயலணி ஒன்றை நியமிக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ நடவடிக்கை எடுத்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து புதிய அப்டேட்!

0

நாட்டினுள் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது. 

இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் முன்பதிவுகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார். 

“மக்களுக்கு சொல்ல விரும்புவது, எந்த பிரச்சனையும் இல்லாமல் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருளை நாங்கள் முன்பதிவுகள் செய்துள்ளோம். அந்த முன்பதிவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 

இந்த நாட்டில் எந்த காரணத்தினாலும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. பிரச்சனை என்னவென்றால், எரிபொருள் எந்த இடங்களிலிருந்து வருகிறது என்பதுதான். அதற்கு பிறகு, போரின் தாக்கம் இருக்கிறதா என்பதை நாம் பார்க்க வேண்டும்.” என்றார். 

அத்துடன் தற்போதைய நிலைமையில், சட்டவிரோதமாக எரிபொருள் கையிருப்பு வைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜே. ராஜகருணா மேலும் தெரிவித்தார். 

“எங்களிடம் உள்ள அறிக்கைகளின்படி, ஒக்டேன் 92 பெற்றோல் பெருமளவு இறக்குமதி செய்யப்படுவது போர் நடக்கும் பிராந்தியத்திலிருந்து அல்ல. அந்த எரிபொருள் மலேசியா, சிங்கப்பூர், இந்தியாவில் இருந்து வருகிறது. 

ஒரே ஒரு இறக்குமதி ஓமானிலிருந்து செய்யப்பட்டது. அதுவும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டாலும் எங்களுக்கு பிரச்சனை இல்லை. நாங்கள் அந்த விநியோகஸ்தர்களிடம் பேசி, அதை முழுமையாக உறுதி செய்துள்ளோம். டீசல் விடயத்திலும் அப்படித்தான். எந்த சிக்கலும் இல்லை” என்றார்.

இணையும் ஹக்கீம் – முஷாரப்!

0

அகில இலங்கை மக்கள் காங்கிரசின், முன்னாள் பாராளமன்ற உறுப்பினரும் தற்போது பொத்துவில் பிரதேச சபை உறுப்பினருமான SMM. முஷர்ரப் அவர்களும் அவர்களுடைய பொத்துவில் பிரதேச சபையின் எழு (07) உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடைய முக்கியஸ்தர்களும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் நாளை இணைவதாக அக்கட்சியின் மாவட்ட செயற்குழு செயலாளர் சமால்டீன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்க முஸ்லீம் காங்கிரஸின் தேசியத் தலைவர் அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் ( MP) அவர்களின் முன்னிலையில் நாளை (25) காலை 9.30 மணியளவில் மாளிகைக்காடு பிரதான வீதியில் அமைத்துள்ள வாவா திருமண மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெறும் என அவர் அறிவித்துள்ளார்.

இந் நிகழ்வில் பாராளமன்ற உறுப்பினர்கள், முன்னால் பாராளமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள் அத்தோடு அம்பாறை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,தேர்தலில் போட்டியிட்ட , பட்டியல் வேட்பாளர்கள்,மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள்

சிங்கள இளைஞர்களும் ஆறுகளில் பிணமாக மிதந்தார்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தின் மீன்வள அபிவிருத்தி தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கடற்றொழில் பிரதியமைச்சர் ரத்ன கமகே தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்கள் மீன் பிடித்துறைக்கு முன்னுரிமை அளிக்கின்ற மாவட்டங்கள் எனவும், இதில் மன்னார் மாவட்டம் நூற்றுக்கு நாற்பது வீதம் மீன் பிடி தொழிலையே பிரதானமாகக் கொண்டுள்ளது எனவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்,

கடந்த காலத்தில் கடடற்றொழிலாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் கடற்றொழிலாளர்களை பகடைக்காய்களாக மாத்திரமே பயன்படுத்தினர். நிரந்தர ஓய்வூதியம் கூட பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

சட்டவிரோத கடற்தொழிலை தடுத்தல் அதில் ஈடுபடும் மீனவர்களை தெளிவூட்ட வேண்டும். இந்திய மீனவர்களின் வருகையையும் இதன் ஊடாக தெளிவு படுத்த வேண்டியுள்ளது. இந்தியாவுக்கும் எடுத்து சொல்ல வேண்டியுள்ளது.

எதிர்வரும் ஜுலை மாதத்திலிருந்து மீனவர்களின் பங்களிப்புக்கு ஏற்ப ஓய்வூதியத்தையும் அதிகரிக்கவுளள்ளோம். மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தையும் அதிகரிக்க பெண்கள் அமைப்புக்களுக்கு ஊக்குவிக்கவுள்ளோம். கூட்டுறவு சங்கங்களையும் பலப்படுத்தவுள்ளோம்.

யாழ்ப்பாணம் வரும் மனித உரிமை ஆணையாளரை வரவேற்கின்றோம். உலகில் எங்கையாவது மனித உரிமை மீறப்பட்டிருந்தால் அது தடுக்கப்படவேண்டும். மனித உரிமை மீறலில் ஈடுபபடுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படவேண்டும்.

உலகத்தில் இன்று மனித உரிமையை மீறுகின்றவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் சொல்லுகின்றோம் மக்களுக்கு யுத்தம் முடிந்து 17வருடங்கள் ஆகின்றது. நாங்கள் சொல்கின்றோம் இனியும் இப்படியான யுத்தம் ஏற்படக்கூடாது. இனிமேலும் இசைப்பிரியாக்கள், கிருசாந்திகள், கோணேஸ்வரிகள் உருவாகக்கூடாது.

மனித உரிமை மீறல்கள் என்பது வடக்கில் மாத்திரம் இல்லை, தமிழ் இளைஞர்களுக்கு மாத்திரம் அல்ல, ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்களும் இதே விதத்தில் அடித்து நொருக்கி ஆறுகளில் பிணங்கள் மிதந்த வரலாறு உள்ளது.

இந்த விடயத்தை மீள மீள பேசி எங்களுடைய உறவை பிரிக்கின்ற நடவடிக்கையாக எங்களுக்கு இது தேவையா? ஆனால் நாங்கள் சொல்கின்றோம் செம்மணியில் புதையுண்டவர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் உருவாகாத சமூதாயத்தை உருவாக்க வேண்டும். அதனையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செய்கின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

நாளை கொழும்பில் இலத்திரணியல் ஒலிபரப்பு மாநாடு!

0

நாளை (25) கொழும்பில் நடைபெறும் இலத்திரணியல் ஒலிபரப்பு மாநாடு (Broadcasting Symposium)

இலங்கை இலத்திரணியல் ஒலிபரப்பாளர்களின் சங்கமும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இலத்திரணியல் ஒலிபரப்பு மாநாடு (Broadcasting Symposium) நாளை (25) கொழும்பில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் என்.ஏ.கே.எல். விஜேநாயக்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (23) நடைபெற்ற, இலத்திரணியல் ஒலிபரப்பாளர்களின் மாநாடு குறித்து ஊடகங்களைத் தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலத்திரணியல் ஒலிபரப்பில் தற்போதைய சவால்கள் மற்றும் புதிய போக்குகள், புதிய ஊடகங்களின் வருகையுடன் ஊடகத் துறையில் எழுந்துள்ள சவால்கள் மற்றும் ஊடகக் கொள்கைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் இலங்கையை ஒலிபரப்புக்கான மையமாக மாற்றுவதே இதன் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஈரானுடன் சமாதான பேச்சு-காஸாவில் சுட்டுக்கொலை!

0

இஸ்ரேல், ஈரான் போர் உலகின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ள நிலையில் மறுபுறம் காஸா மக்கள் மீதான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

உணவுக்காக தவித்துக்கொண்டிருக்கும் அப்பாவி காஸா மக்கள் மீது தினமும் இஸ்ரேல் வன்முறைகளில் ஈடுபட்டு கொலைசெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமான உதவிகளுக்காக காத்திருந்த அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் சுமார் 50 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரப் பணியாளர்கள் தெரிவித்துள்ளதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

காசாவில் மனிதாபிமான உதவிகள் இடம்பெறும் மையங்களுக்கு அருகில் நேற்று அதிகாலை முதல் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் வரை கொல்லப்பட்டதாகவும், ஏனைய பகுதிகளில் 21 பேர் கொல்லப்பட்டதாகவும் காசா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய காசாவில் சலா அல்-தின் தெருவில் நடந்த ஒரு சம்பவத்தில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 62 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேலிடையே கட்டாய போர் நிறுத்தம் பற்றி பேசிவரும் சில மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்கா, காஸா போர் நிறுத்தம் பற்றி எதுவும் வாய் திறக்காமல் இருப்பது ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.