தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல் பயணித்த மகிழுந்து , உந்துருளியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் உந்துருளியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இன்று நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக சென்றுகொண்டிருந்த போது, வென்னப்பு பகுதியில் வைத்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கார் விபத்து தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசலின் சகோதரரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த கார், வீதியை விட்டு விலகி, எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரே விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த நேரத்தில் வாகனத்தில் இருந்த பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர், கொஸ்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்திற்குச் சொந்தமான அனைத்து களஞ்சியசாலைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
சில விவசாயிகள் ஏற்கனவே தங்கள் அறுவடை மாதிரிகளை நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளில் சோதனைக்காக சமர்ப்பித்துள்ளதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார்.
இருப்பினும், விவசாயிகள் இன்னும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லை வழங்கவில்லை என்றும் தலைவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, விவசாயிகள் தங்கள் அறுவடையில் குறைந்தபட்சம் ஒரு பகுதியையாவது நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்க வேண்டும் என்று அநுராதபுரம் விவசாயிகள் ஒன்றிய அமைப்பின் தலைவர் புஞ்சிரல ரத்நாயக்க இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
காதலர் தினத்தைக் கொண்டாட யாழ்ப்பாணம் செல்ல தனது காதலி விரும்பாததால் மனமுடைந்த கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார்.
கிளிநொச்சி தர்மபுரம் அம்பலபொக்கணை பகுதியைச் சேர்ந்த வர்ணகுலராசா பிரதீபன் என்ற 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த வருடம் காதலர் தினத்தைக் கொண்டாடுவதற்காக யாழ்ப்பாணம் சென்று வர அவர் தனது காதலியை பலமுறை கேட்டிருந்தார், ஆனால் அந்தப் பெண் அதற்கு சம்மதிக்கவில்லை.
அந்த இளைஞன் பலமுறை வற்புறுத்தியதால், அந்த பெண் இளைஞன் மீது கோபமடைந்துள்ளார்.
இதனால் அந்த இளைஞன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
சம்பவம் நடந்த நாளில், அந்த இளைஞன் தனது காதலிக்கு பலமுறை தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும், ஆனால் அவர் பதிலளிக்காமல் தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மனஉளைச்சலுக்குள்ளான இளைஞர், கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார்.
கிணற்றிலிருந்து இளைஞனின் உடலை தர்மபுரம் காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக அவரைப் பாதுகாக்கத் தயங்க மாட்டோம் என்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அன்மையில் சட்டமா அதிபர் குறித்து வெளியிடப்படும் தவறான மற்றும் ஏமாற்று கருத்துக்கள் குறித்து தனது சங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அந்த சங்கத்தின் பதில் செயலாளர் டஷ்யா கஜநாயக்க அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளார்.
ஒரு வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்ய சட்டமா அதிபர் சமீபத்தில் வழங்கிய பரிந்துரைகள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் மரபுக்கு இணங்க செய்யப்பட்டுள்ளதாக சட்ட அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
முறையான சட்ட விடயங்களைக் கருத்தில் கொண்ட பிறகு, சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த பரிந்துரைகளை மேற்கொண்டுள்ளதுடன், அந்த முடிவில் சங்கம் தனது மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் உயர் மரபுகளுக்கு இணங்க சுயாதீனமான செயற்பட்டுள்ளதால், சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்கும் எந்தவொரு முயற்சியையும் எதிர்ப்போம் என்று சட்ட அதிகாரிகள் சங்கம் மேலும் சுட்டிக்காட்டுகிறது.
சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் வாகனமொன்று போலி இலக்கத் தகட்டுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட நிலையில் பெலவத்தை-நாடாளுமன்ற சந்திக்கு அருகில் இந்த ஜீப் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவிற்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து ஜீப் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பத்துடன் தொடர்புடைய 52 வயதான தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் மஹர தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அமைப்பாளராகவும், பின்னர் முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் ஒருங்கிணைப்பு செயலாளராகவும் பணியாற்றியுள்ளவர் எனத் தெரியவந்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 1158 கிலோகிராம் உலர் இஞ்சியுடன் மூன்று சந்தேகநபர்கள் புத்தளத்தில் வைத்து கடற்படையினரால் கைது
புத்தளம் தளுவ பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஆயிரத்து நூற்று ஐம்பத்தெட்டு (1158) கிலோகிராம் மற்றும் அறுபது (60) கிராம் உலர் இஞ்சி மற்றும் நாற்பத்தைந்து (45) கிலோகிராம் உலர் கருவாடு, 01 கெப் வண்டியுடன் மூன்று (03) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்க்கரைகளை உள்ளடக்கி கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான தம்பபன்னி பிரிவால் புத்தளம் தளுவ பிரதேசத்தில் நேற்று (பெப்ரவரி 11 ஆம் திகதி) இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான கெப் வண்டியொன்று சோதனையிடப்பட்டது. அங்கு கெப் வண்டியில், சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட (32) பொதி செய்திருந்த பைகளில் ஆயிரத்து நூற்று ஐம்பத்தெட்டு (1158) கிலோகிராம் காய்ந்த இஞ்சி, நாற்பத்தைந்து (45) கிலோ காய்ந்த கருவாடு, (01) ஒரு கெப் மற்றும் மூன்று (03) சந்தேகநபர்கள் ஆகியோருடன் கடற்படையினர் கைது செய்தனர்.
மேலும், கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் புத்தளம் மற்றும் மணல்தோட்டம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் மூவரும், உலர் இஞ்சி, உலர் கருவாடு மற்றும் கெப் வண்டியுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
கல்யாணம் ஆகாத ஆண்களுக்கு, வாடகைக்கு பெண்கள் கிடைக்கிறார்களாம்.. இதற்காக ரூ. 15,000 முதல் 25,000 வரை அந்தப் பெண்களுக்கு பணம் தரப்படுகிறதாம்.. இதுபோன்ற ஒரு கலாச்சாரம், மேலைத்தேய நாடுகளில் மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது நம்முடைய இந்தியாவிலும் ஆரம்பமாகிவிட்டது.
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தாய்லாந்து, உலகின் மிகச்சிறந்த சுற்றுலா தலமும்கூட.. கடலால் சூழப்பட்டுள்ள இந்த தாய்லாந்துக்கு, லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்…
இந்த தாய்லாந்தில், “Wife on Hire” அல்லது “Black Pearl” என்ற நடைமுறை உள்ளது. அதாவது குறிப்பிட்ட பணம் செலுத்தி பெண்களை வாடகை மனைவியாக மாற்றிக்கொள்ளலாம். இந்த தற்காலிகத் திருமண ஏற்பாட்டின் மூலம், மனைவியின் பாரம்பரியக் கடமைகள் அனைத்தையும் அந்த பெண் நிறைவேற்ற வேண்டும்… ஆனால், ஒப்பந்த காலத்துக்கு மட்டுமே அந்த பெண் மனைவியாக இருப்பார். இது தாய்லாந்திலுள்ள பல பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மிகவும் உபயோகமாக இருக்கிறதாம்.
இந்த பெண்களின் வயது, அழகு, கல்வி மற்றும் ஒப்பந்தத்தின் காலம் போன்ற பல்வேறு காரணிகளை பொறுத்து அவர்களுக்கு வழங்கப்படும் பணம் மாறுபடும். அதன்படி 1,600 டாலர் முதல் 116,000 டாலர் வரை வாடகை மனைவிகளுக்கு பணம் கொடுப்பதாக கூறப்படுகிறது.
இப்போது விஷயம் என்னவென்றால், இதுபோன்ற ஒருநடைமுறை, நம்முடைய இந்தியாவிலும் இருக்கிறதாம். மத்திய பிரதேசம் மாநிலத்திலுள்ள சிவபுரி மாவட்டத்தின் கிராமங்களில், இப்படியொரு நடைமுறை பலவருட காலமாகவே இருந்துவருவதாக தெரியவந்துள்ளது.
Valentine Offer
இந்த நடைமுறைக்கு “தாதிச்சா பிரதா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெரிய பெரிய பணக்கார ஆண்கள், தங்களுக்கு பிடித்த பெண்களை ஏலத்தில் எடுத்துக் கொள்வார்கள்.. 1 மாதம் முதல் 1 வருடம் வரை, இந்த பணக்கார ஆண்களுக்கு மனைவிகளாக அப்பெண்கள் வாடகைக்கு விடப்படுகிறார்கள். இதில் விசித்திரம் என்னவென்றால், இளம் பெண்கள் மட்டுமல்லாமல், திருமணமான மனைவிகளையும் சந்தையில் வாடகைக்கு விடுகிறார்கள்.
கன்னித்தன்மை, உடல் தோற்றம், வயது போன்றவற்றை வைத்து, பெண்கள் ஏலம் எடுக்கப்படுகிறார்கள். 8 வயது முதல் 15 வயதிற்குட்பட்ட கன்னிப்பெண்களுக்கு முன்னுரிமை தரப்படுவதாகவும், ரூ. 15,000 முதல் 25,000 வரை பணம் தரப்படுவதாகவும, லீகல் சர்வீசஸ் இந்தியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈ.பி.டி.பி (E.P.D.P) கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவின் கொச்சி என்ற இடத்தில் வைத்து கடந்த திங்கட்கிழமை (10) தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையிலிருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற அவர் அங்கிருந்து பிறிதொரு கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்ட நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவின் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 49 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 214 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பின்னர் 215 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 33.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
இந்த வெற்றியின் ஊடாக இரண்டு போட்டிகளை கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும், ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தகம் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தமக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் நபர் முறைப்பாடளித்துள்ளாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தனர்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கூறுகையில், நேற்றிரவு விருந்தகம் ஒன்றில் தாமும் தமது பிரத்தியேக செயலாளரும் உணவருந்திக் கொண்டிருந்தபோது, இருவர் தம்முடன் முரண்பட்டதாகத் தெரிவித்தார்.
தையிட்டி விகாரை இடிக்கப்படக்கூடாது என தாம் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துக் குறித்த இருவரும் தம்முடன் முரண்பட்டதாகவும் அதனை காணொளியாக பதிவுசெய்ய முற்பட்டபோது, அவர்கள் தம்மைத் தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்பாதுகாப்புக்காகத் தாமும் அவர்களில் ஒருவரைத் தாக்கியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவினால் தாக்கப்பட்டதாகக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபருக்கு நெற்றிப்பகுதியில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
இந்தநிலையில், இரு தரப்பினரிடமிருந்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அதனடிப்படையில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.