Sunday, May 3, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 188

நாட்டில் அதிகரித்த உயிர்க்கொல்லி நோய்!

0

நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா ஒரு சுகாதாரப் பிரச்சினையாக வளர்ந்து வருவதாக பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹங்க விஜேமுனி தெரிவித்துள்ளார். 

தற்போதைய தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு டெங்கு பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டிகிறார். 

காய்ச்சல் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறுமாறு பிரதி அமைச்சர் மக்களுக்கு அறிவுறுத்தினார். 

இதற்கிடையில், நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறை குறித்து பிரதியமைச்சர் அமைச்சர் கூறுகையில், 180 வகையான மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் வைத்தியசாலைகளில் 45 வகையான மருந்துகள் மட்டுமே பற்றாக்குறையாக உள்ளதாக குறிப்பிட்டார்.

40 ஆண்டில் 20,000 இந்தியர்கள் பலி!

0

கடந்த 40 ஆண்டில் 20,000 இந்தியர்கள் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளால் பலியாகி உள்ளனர் என்று ஐ.நா கூட்டத்தில் இந்திய பிரதிநிதி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் ஐ.நா. நிரந்தரப் பிரதிநிதி தூதர் பர்வதநேனி ஹரீஷ் பேசுகையில்,

“பாகிஸ்தானை பொருத்தமட்டில் அந்த நாட்டிற்கு தீவிரவாதிகளுக்கும், பொதுமக்களுக்கும் வித்தியாசம் பார்க்காத நாடாகும். கடந்த 2008ம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாத தாக்குதல் முதல், ஏப்ரலில் நடந்த பஹல்காம் தாக்குதல் வரை, இந்தியாவின் முன்னேற்றத்தையும், மன உறுதியையும் தாக்குவதே பாகிஸ்தானின் நோக்கமாக இருந்து வருகிறது.

இந்தத் தாக்குதல்களால் இந்தியாவின் பொருளாதாரமும், மக்களின் மன உறுதியும் பாதிக்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து இந்திய எல்லைக் கிராமங்களை தாக்கிய பாகிஸ்தான் ராணுவத்தினர், 20க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றதுடன், 80க்கும் மேற்பட்டோரை காயப்படுத்தினர். கோவில்கள், குருத்வாராக்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து தாக்க முயன்றனர். ஆனால் இதற்கு பதிலடியாக, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கியது.

இந்தியாவின் இந்த நடவடிக்கை, தீவிரவாதத்திற்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது. எனவே பொதுமக்களைப் பாதுகாப்பது குறித்து ஐ.நா-வில் பேசுவதற்கு பாகிஸ்தானுக்கு எந்த தகுதியும் இல்லை. கடந்த 40 ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதத் தாக்குதல்களால் 20,000க்கும் மேற்பட்ட இந்திய மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன’ என்று குற்றம் சாட்டினார்”

தலைமையகம் சென்ற புத்தளம் அணி!

0

புத்தளம் மாவட்டத்தில், உள்ளூராட்சித் தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாநகர சபை, புத்தளம் பிரதேச சபை, வண்ணாத்திவில்லு பிரதேச சபை, கற்பிட்டி பிரதேச சபை ஆகியவற்றில் மரச் சின்னத்தில் ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளதோடு, நாத்தாண்டிய பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் பிரஸ்தாப உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைவது தொடர்பான கலந்துரையாடல் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் நேற்று (23) நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான எஸ்.எச்.எம்.நியாஸ், ரணீஸ் பதுறுதீன் (புத்தளம் மாநகர சபை உறுப்பினர்), எம்.எச்.எம்.ஹில்மி, கே.எல்.எம்.ரிழ்வான், ஏ.எஸ்.எம் .ரிழ்வான் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்கு பற்றி கருத்துக்களைத் தெரிவித்தனர்.

மாகாண சபைத்தேர்தல் – வெளியான அறிவிப்பு!

0

விரைவில் மாகாண சபைத்தேர்தல் – நிசாம் காரியப்பருக்கு அரசு பதில்

நீண்டகாலமாக நடைபெறாதிருக்கும் மாகாண சபைத்தேர்தல் இவ்வருடத்திற்குள் நடைபெறுமென ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் கூறி வந்த நிலையில், மாகாண சபைத்தேர்தலை நடத்துவதென்றால் மாகாண சபைத்தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

கடந்த ஆட்சிக்காலத்தில் தற்போதைய இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மாகாண சபைத்தேர்தலை நடத்துவதற்கேற்றவாறு தனி நபர் பிரேரணையை பாராளுமன்றில் சமர்ப்பித்திருந்தார்.

கடந்து அரசாங்கம் கவனத்திலெடுக்காததால் அவை நிறைவேற்றப்படவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் மாகாண சபைத்தேர்தல் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியின் படி இவ்வருடத்திற்குள் நடைபெறுமா?, அதற்கான சட்டமூலம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனவா? எவ்வாறான நடவடிக்கை?, நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றால் என்ன காரணம்? என்ற தோரணையில் பொது நிர்வாகம் மற்றும் உளளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரிடம் நேற்று (23) பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.நிசாம் காரியப்பர் கேள்வி தொடுத்திருந்தார்.

குறித்த கேள்விகளுக்கு விடயத்திற்குப் பொறுப்பான பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி, மாகாண சபை அமைச்சர் தாமதமின்றி மாகாண சபைத்தேர்தல் விரைவாக நடத்தப்படும் எனவும், அதற்கான உரிய ஏற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பதிலளித்தார்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி.

கொழும்பில் நாளை 12 மணி நேர நீர் வெட்டு!

0

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய மேம்பாட்டு பணிகள் காரணமாக கொழும்பு நகரம் உட்பட பல பகுதிகளுக்கு நாளை (25) 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. 

நாளை காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 12 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று அந்த சபை தெரிவித்துள்ளது. 

கொழும்பு 1 முதல் 15 வரையிலும், கோட்டே, கடுவலை, பத்தரமுல்லை, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, முல்லேரியா, ஐ.டி.எச், மஹரகம, தெஹிவளை, கல்கிஸ்ஸை, இரத்மலானை மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

வடக்கில் உதைபந்து பயிற்சி முகாம்!

553 வது இராணுவ படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 09 பாடசாலை மாணவர்களுக்கான இரண்டு நாள் உதைபந்து பயிற்சி முகாம் முல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலயத்தில் நேற்றும் இன்றும் நடைபெற்றது.

நேற்றைய இறுதி நாள் பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் 3.00மணிக்கு நடைபெற்றது.

553 படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் பிரபாத் முத்துநாயக்கா தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் 55வது படைப்பிரிவின் பதில் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ வனசேகர பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

குறித்த நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், விசுவமடு மகா வித்தியாலய அதிபர், இராணுவ உயரதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இராணுவ அணிக்கும் விசுவமடு தோழர்கள் விளையாட்டுக்கழக அணிகளுக்குமிடையிலான உதைபந்து காட்சி போட்டியும் நடைபெற்றது.

குறித்த காட்சி போட்டியில் இராணுவ அணி 2:0 என்ற கோல் கணக்கில் விசுவமடு தோழர்கள் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கின் மூலப்பொருட்கள் தெற்கிற்கு!

வடக்கிலிருந்து விவசாய உற்பத்திப்பொருட்கள் மூலப்பொருட்களாகவே தென்பகுதிக்குச் செல்கின்றன. அவற்றை முடிவுப்பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநருக்கும், ஐ.நா.வின் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் (யுனிடோ) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (22.05.2025) நடைபெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.

யுனிடோ நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்கள் தொடர்பில் ஆளுநருக்குத் இதன்போது தெரியப்படுத்தப்பட்டத்து.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் விவசாயம் மற்றும் மீன்பிடி இரண்டுமே மிக முக்கியமானவை என்றும் அவற்றை பெறுமதிசேர் பொருட்களாக மாற்றுவதில் சவால்கள் காணப்படுகின்றன எனவும் குறிப்பிட்டார். விலைத் தளம்பலால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் என்றும், இதனால் அவர்கள் கால ஓட்டத்தில் விவசாய உற்பத்தியையே கைவிடுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

சில சந்தர்ப்பங்களில் வடக்கு விவசாயிகளின் உற்பத்திப்பொருட்களின் விலையைவிட இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை குறைவாக இருப்பதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது என்பதைக் குறிப்பிட்ட ஆளுநர் எதிர்காலத்தில் இத்தகையை நிலைமையைத் தவிர்ப்பதற்காக வடக்கு மாகாணத்தில் எந்தக் காலத்தில் எந்த உற்பத்திப்பொருள் என்ன அளவில் உற்பத்தி செய்யப்படும் என்ற விவரக்கொத்தை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாகவும், அதனை அரசாங்கத்துக்கு வழங்குவதன் மூலம் இறக்குமதி வரியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதற்கு திட்டமிடுவதாகவும் தெரிவித்தார்.

போருக்கு முன்னர் வடக்கில் இயங்கிய சில உற்பத்தித் தொழிற்சாலைகளால் பல ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை பெற்றிருந்தனர் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், தற்போது அத்தகைய நிலைமை இல்லை என்பதால் வேலை வாய்ப்பும் சவாலாக உள்ளதாகத் தெரிவித்தார்.

அதேநேரம் வடக்கில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள முதலீட்டு வலயங்கள் தொடர்பிலும் ஆளுநர் தெரியப்படுத்தினார். முதலீட்டு வலயத்தில் அமையவுள்ள தொழிற்சாலைகள் தொடர்பிலும், அதற்கான ஆளணிகள் உள்ளனவா என்பது தொடர்பிலும் யுனிடோ நிறுவனத்தினர் கேட்டறிந்துகொண்டனர்.

அத்துடன் விவசாயிகளுக்கு, விவசாய உற்பத்திப்பொருட்களுக்கான சிறந்த தரநிலைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் திட்டம் தொடர்பான பயிற்சிகளை வழங்குவதாக யுனிடோ நிறுவனத்தினர் ஆளுநருக்கு தெரியப்படுத்தியதுடன், தொடர்ந்தும் வடக்கு மாகாணத்துடன் இணைந்திருப்பதாக யுனிடோ நிறுவனத்தினர் குறிப்பிட்டிருந்த நிலையில் அதனை ஆளுநர் வரவேற்றார்.

உருவாகும் உப்பு மாபியா – அரசு மீது ஹக்கீம் சாடல்!

0

புத்தளம் உப்பள பிரச்சினைக்கான தீர்வே உப்பு பிரச்சினக்கான தீர்வாக அமையும்.

புத்தளத்தின் உப்பள பிரச்சினைக்கு தீர்வு தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

புத்தள உப்பு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினை தொடர்பில் ஏற்கனவே சபை ஒத்திவைப்பு நேர பிரேரணையில் குறிப்பிட்ட நிலையில் இன்று மேற்படி கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.

புத்தளம் பிரதேசத்தில் பூர்வீகக்காணிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த உப்பள சங்கத்தின் உற்பத்தி தடைசெய்து அவர்களை அங்கிருந்து அகற்ற வேண்டுமென்பதற்காக திட்டமிட்டு காணிகளை அரசு அபகரித்துக்கொண்டது.

அது மட்டுமல்ல, நீண்டகாலமாக அவர்கள் உப்பு உற்பத்தி செய்து வந்த காணிகளை வேறு நபர்களுக்கு வழங்கும் நோக்கில் கடந்த அரசாங்க காலத்தில் சில விடயங்கள் நடந்தெறின.

அது இன ரீதியான பாகுபாடாகவும் அப்பிரதேசங்களில் பார்க்கப்படும் அதே வேளை, இன ரீதியான விடயங்களாக இவ்விவகாரங்கள் நடக்கவோ அணுகப்படவோ கூடாது எனப்பேசுகின்ற அரசு புத்தளம் பிரதேச செயலகத்தினூடாக அரசாங்கம் கையகப்படுத்தி வைத்திருக்கின்ற அக்காணிகளையும் அனுமதிப்பத்திரத்தையும் உப்பள சங்க உறுப்பினர்களுக்கு வழங்குவதன் மூலம் அக்காணிகள் மீளவும் கையளிக்க வேண்டும்.

அதனை உப்பு பிரச்சினைக்கான தீர்வுகளில் ஓரங்கமாகப் பார்க்க வேண்டும்.

அது மட்டுமல்லமால், புத்தளத்தில் இருக்கின்ற களப்புகளில் வெவ்வேறு நீர் நிலைகளின் நீர் சேர்வதானால் உவர்த்தன்மை வெகுவாகக் குறைந்து வருகின்றது.

1-3% இருந்த உவர்த்தன்மை இன்று 0.5% இருந்து 1% வரையுள்ளது. எனவே தான் உப்பு உற்பத்தியில் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதனை அங்கிருக்கின்ற உப்பள உரிமையாளர்களும் ஏற்கனவே அரசுக்கு அறிவித்துள்ளார்கள்.

ஆனால், புத்தளத்தில் அதற்கான அதிகாரமுள்ள எவருமில்லை. அரசாங்கத்தினூடாக எந்தவிதமான உதவிகளும் வழங்கப்படுவதில்லையென்ற பாரிய பிரச்சினையுள்ளது.

எனவே, இவற்றையெல்லாம் கவனத்திற்கொண்டு உப்பு பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காண்பதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும்.

அதேநேரம், உப்பு வியாபாரத்தில் உப்பு மாபியாவொன்று உருவாகியிருக்கிறது. அந்த உப்பு மாபியாவுக்குப் பின்னால் அரசாங்கத்தின் அனுசரணை உள்ளதா என்பதையும் காலதாமதத்திற்கான காரணத்தையும் கண்டறிய வேண்டும்.

ஏன் காலம் தாழ்த்தி மும்பாயிலிருந்து உப்பு இறக்குமதி செய்கின்றார்கள்? 4 மில்லியன் மூடைகள் உப்பு தேவைப்படும் நிலையில் சுமார் 6 இலட்சம் மூடைகள் தான் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள பாரிய ஊழலை விசாரிக்க வேண்டும்.

உப்புக்கம்பனியின் சொந்தக்காரர்கள் யார்? ஏன் இவ்வாறான விடயங்கள் இடம்பெறுகின்றன என்பது தொடர்பில் அரசு கவனத்திற்கொள்ளல் வேண்டிய மிக முக்கியமாகும்.

அத்துடன், ஊழல் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்குறிப்பிட்டார்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA)- ஓட்டமாவடி.

வைத்தியசாலையில் தற்கொலை!

0

பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளி கூர்மையான ஆயுதத்தால் தனக்கு தானே தீங்கு விளைவித்து தற்கொலை செய்து கொண்டார். 

கடந்த 18ஆம் திகதி மாத்தளையில் இருந்து வந்த 55 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான இவர், வைத்தியசாலையின் 18ஆவது வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இவர் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 

பொலன்னறுவை வைத்தியசாலையின் 23ஆவது வார்டில் 5 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த இந்த நோயாளி, இன்று (22) பிற்பகல், தன்னிடம் வைத்திருந்த பழம் வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் சிறிய கத்தியால் தனது மார்பு பகுதியில் காயப்படுத்தி தற்கொலை செய்து கொண்டார். 

வைத்தியசாலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், நோயின் காரணமாக ஏற்பட்ட வலியை தாங்க முடியாமல் இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கூறினார். 

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

புத்தளத்தில் இடம்பெற்ற ஒன்லைன் பண மோசடி!

ஒன்லைன் பண மோசடி மூலம் சுமார் 5 லட்சம் ரூபாய் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று புத்தளம் நாகவில்லு பகுதியில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

மிகவும் சூட்சுமமான முறையில் வங்கி கணக்கு திருடப்பட்டு, வங்கி கணக்கு உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் கொள்ளையிடப்பட்ட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை இன்றைய தினமும் (22) ஒன்லைன் பண மோசடி செய்யும் கும்பல் ஒன்றிடமிருந்து பண மோசடி செய்வதற்காக புத்தளம் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு 071 583 6145 என்ற இலக்கத்திலிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளதாகவும், மேலதிக தகவல்கள் பெற முயன்றபோது கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அண்மைக்காலமாக ஒன்லைன் பண மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அரசு மற்றும் பொலிஸ் திணைக்களங்களினால் பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தும், இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவது அதிரித்தவண்ணமே உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் அண்மைக்காலமாக வாட்சப் கணக்குகள் முடக்கப்படும் சம்பவங்களும் அதிரித்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறிமுகமில்லாத எவரிடமிருந்தும் வரும் தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் வாட்சப் செய்திகளுக்கு உங்கள் வங்கிக் கணக்குகள் பற்றிய விபரங்களை வழங்குவதை தவிர்ப்பதன் மூலம் இவ்வாறான ஒன்லைன் பண மோசடிகளை முறியடிக்க முடியும் என்பதை மிகவும் ஆழமாக மனதில் பதித்துக்கொள்ளவும்.