Friday, June 26, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 209

சிக்கிய பெருந்தொகை ஐஸ் போதைப் பொருள்!

0

இலங்கை கடற்படையினர், புலனாய்வு சேவை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் மற்றும் பிராந்திய செயல்பாட்டு ஒருங்கிணைப்பு மையம் ஆகியன இணைந்து மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பில், இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் போதைப்பொருட்களை கொண்டு சென்ற இரண்டு உள்ளூர் மீன்பிடி படகுகளுடன் பதினொரு (11) சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.

குறித்த, நீண்ட நாள் மீன்பிடி படகுகள் டிக்கோவிட்ட துறைமுகத்திற்கு இன்று (2025 மே 28) பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் நிபுணர்களின் உதவியுடன் கொண்டுவரப்பட்டதுடன், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு), கடற்படைத் தளபதி மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் பங்குபற்றலுடன் குறித்த போதைப்பொருள் சோதனையிடப்பட்டது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் நிபுணர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் குறித்த படகுகளிலிருந்து மீட்கப்பட்டது.

இரண்டு (02) படகுகளில் இருந்து சுமார் 503 கிலோகிராம் 618 கிராம் ஐஸ் மற்றும் சுமார் 275 கிலோகிராம் 594 கிராம் ஹெரோயின் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்படி போதைப்பொருட்கள், சந்தேக நபர்கள் மற்றும் பல நாள் மீன்பிடி ஈடுபட்ட படகுகள் இன்று (2025 மே 28) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம், இலங்கை கடற்படை, மற்ற தரப்பினருடன் இணைந்து, 2025 ஆம் ஆண்டில் இதுவரை நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கைகளின் மூலம் 544 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 1217 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதுடன், எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து மீட்பதற்காக கடற்படை தொடர்ந்து இதுபோன்ற கூட்டு நடவடிக்கைகளுக்கு பங்களிக்கும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.

யாழில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பு!

தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் வழங்குமாறு அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை.!!!

ஆட்சி மாற்றத்தின் பின்னும் இந்த நாட்டில் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவரும் இன, மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியுள்ளதன் அவசியம் உணர்ந்து, ஆஸ்திரேலிய அரசின் தீர்மானங்களும், இராஜதந்திர அழுத்தங்களும் ஈழத்தமிழர் நலன்சார்ந்து வலுப்பெற வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடன் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, ​​பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், அரசாங்க மாற்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரையிலான தற்போதைய தமிழ் அரசியல் குறித்து உயர்ஸ்தானிகரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு தொடர்பான நிலப் பிரச்சினைகள், வடக்கு மாகாணத்தில் சுமார் 6000 ஏக்கர் கடலோர நிலங்களை அரசு நிலங்களாக அறிவிக்கும் சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவிப்பு குறித்தும், தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வாக வடக்கு மற்றும் கிழக்கில் நிலங்கள், காவல்துறை மற்றும் நிதி ஆகியவற்றில் மீளமுடியாத அதிகாரங்களைக் கொண்ட சமஸ்டி அடிப்படையில் அரசியல் தீர்வு நிறுவப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், அவரது துணைவியார் கிரிட்டினா ஸ்டீபன்ஸ், திட்ட ஒத்துழைப்புக்கான முதல் செயலாளர், திருமதி ஜோ கிட், அரசியல் துறைக்கான இரண்டாவது செயலாளர் திரு. மேத்யூ லார்ட் மற்றும் மூத்த ஆராய்ச்சி அதிகாரி திரு. சில்வெஸ்டர் வொர்திங்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

21 மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதி!

உணவு ஒவ்வாமை காரணமாக 21 மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள பாரதி வித்யாலயத்தின் இன்றைய தினம் 28.05.2025 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக ஒரே வகுப்பைச் சேர்ந்த 21 மாணவர்கள் தர்மபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக 10 மாணவர்கள் கிளியோ வச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு சுகாதார பரிசோதர்கள் உணவின் மாதிரியை பெற்றுச் சென்றுள்ளனர்.

இருப்பினும் ஏனைய வகுப்பைச் சேர்ந்த எந்த ஒரு மாணவர்களுக்கும் உணவு ஒவ்வாமை ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

முஸ்லீம் காங்கிரசும் தமிழரசுக் கட்சியும் இணைவு!

0

குச்சவெளி மற்றும் மூதூர் பிரதேச சபைகளில் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸிற்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் அதன் தேசிய அமைப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் திருகோணமலை மாவட்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசனும் இதில் கையொப்பமிட்டுள்ளனர். 

திருகோணமலையில் வைத்து இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், குறித்த பிரதேச சபைகளில் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவிகளை வகிப்பது தொடர்பில் இரு கட்சிகளுக்கும் இடையில் பொதுவான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குச்சவெளி பிரதேச சபையில் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் தவிசாளராகவும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் பிரதி தவிசாளராகவும் செயற்படுவதுடன், இறுதி இரு ஆண்டுகளில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தவிசாளராகவும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் உறுப்பினர் பிரதி தவிசாளராகவும் செயற்படுவர். 

அதேபோன்று மூதூர் பிரதேச சபையில் முதல் இரு ஆண்டுகளுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் தவிசாளராகவும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் உறுப்பினர் பிரதி தவிசாளராகவும் செயற்படுவதுடன் அதனை அடுத்து வரும் இரு ஆண்டுகள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் உறுப்பினர் தவிசாளராகவும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பிரதி தவிசாளராகவும் செயற்படுவர் என்ற வகையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. 

அதேநேரம், திருகோணமலை மாநகர சபை, பட்டினமும் சூழலும் பிரதேச சபை, தம்பலகாமம் பிரதேச சபை ஆகியவற்றில் பரஸ்பர ஆதரவை வழங்குவதற்கும் இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.

நாட்டில் டெங்கு, சிக்குன்குன்யா அதிகரிப்பு!

0

15 மாவட்டங்களில் உள்ள 95 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினூடாக நுளம்புகள் பெருகக்கூடிய 31,145 இடங்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அத்துடன், நுளம்பு முட்டைகள் மற்றும் குடம்பிகளுடன் கூடிய 6,077 இடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. 

இதன்போது, வீடுகள், பாடசாலைகள், அரச மற்றும் தனியார் அலுவலகங்கள், கட்டுமான தளங்கள், தொழிற்சாலைகள், பொது இடங்கள், மத ஸ்தலங்கள் உட்பட ஒரு இலட்சத்து 28,824 கட்டடங்கள் சோதனையிடப்பட்டுள்ளன. 

அவற்றில் 3,916 இடங்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதுடன், 1,470 இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களின் பரவல் அதிகரித்துள்ள நிலையில் கடந்த 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

நாடு முழுவதும் நுளம்பு பெருகக்கூடிய இடங்களைக் கண்டறிந்து அகற்றுவதன் மூலம் நுளம்புகளால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ரயில்வே சேவையில் சிக்கல்!

0

ரயில்வே திணைக்களத்தில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக, திணைக்களத்தின் சேவைகளைப் பராமரிப்பதில் அவ்வப்போது தடைகள் ஏற்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

ரயில்களை இயக்க ரயில்வே திணைக்களத்திற்கு சுமார் 430 ரயில் சாரதிகள் தேவைப்படுவதாகவும், ஆனால் தற்போது ரயில்வே திணைக்களத்தில் 275 சாரதிகளே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

கடந்த காலங்களில் திணைக்களத்தில் காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு முறையான அனுமதி பெறப்படவில்லை என்றும், இதன் காரணமாக, திணைக்களத்தின் சேவைகளைப் பராமரிப்பதில் சில சிக்கல்கள் எழுவதாகவும் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர், காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய கடந்த மார்ச் மாதம் அனுமதி பெறப்பட்டதாகவும், அதன்படி தற்போது விண்ணப்பங்களை கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

அதன்படி, பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் ஜூலை முதல் வாரத்தில் ரயில்வே சேவைக்கான ஆட்சேர்ப்புத் தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான முதற்கட்ட ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொது முகாமையாளர் தெரிவித்தார். 

அத்துடன், தற்போது பணிபுரியும் ரயில் சாரதிகளின் எண்ணிக்கை காரணமாக, மேலதிக ரயில் சேவைகளுக்கு 275 பேரை பணியமர்த்த வேண்டியுள்ளது என்றும், அவர்கள் எப்போதாவது விடுமுறை எடுத்தால், ரயில் சேவையை பராமரிப்பதில் சிக்கல்கள் ஏற்படும் என்றும் அவர் கூறினார். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதே போன்ற நிலைமையே ஏற்பட்டதாகக் கூறிய ரயில்வே பொது முகாமையாளர், சுமார் 20 ரயில் சாரதிகள் பணிக்கு வராததால் ரயில்வே திணைக்களத்தால் பல ரயில் சேவைகளை இரத்து செய்ய வேண்டியிருந்தது என்று கூறினார். 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், ரயில் சேவையை மீண்டும் வழமைக்கு கொண்டு வர ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கும், கடற்படைக்கு ஆலோசணை வழங்கி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் கடற்றொழில் அமைச்சு தயார் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்கங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக பாராளுமன்றத்தில் கடற்படை, பொலிஸ், இராணுவம் உள்ளிட்டோரின் கருத்துக்கள் பரிமாறப்பட்டது. சட்டவிரோத மீன் பிடியால் எமது சொத்துக்கள் அழிக்கப்படுவதோடு எதிர்கால சந்ததிக்கு இல்லாது போகின்றது. இந்த சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஒருவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை என தெரிவித்தார்.

மேலும் கடற்படை மற்றும் ஏனைய துறைசார்ந்தவர்களோடு விரிவாக பேசியிருக்கின்றோம் எனவும், விரைவாக நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கடற்படையினருக்கு அறிவுறுத்தியிருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

கொவிட் குறித்து சுகாதார அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

0

உலகெங்கிலும் பல நாடுகளில் மீண்டும் பரவி வரும் புதிய கொவிட் வைரஸ் குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

இன்று (27) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர், நாட்டில் இன்னும் ஆபத்தான சூழ்நிலை இல்லை என்றாலும், விமான நிலையப் பகுதியில் ஏற்கனவே தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். 

அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

“சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் சில எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. நாங்கள் அதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். கடந்த காலத்தில் நடந்தது போன்ற அனர்த்தம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால் ஏற்கனவே விமான நிலையத்திலிருந்தே அந்த விடயம் தொடர்பில் தலையிடப்பட்டு வருகிறது.” என்றார். 

இலங்கைக்கு மிக நெருக்கமான நாடான இந்தியாவில் இருந்து புதிய கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 1,009 நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், இந்த நோயால் 4 பேர் இறந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டன.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தீயணைப்பு பயிற்சி!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தீயணைப்பு ஒத்திகை!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தீயணைப்பு பயிற்சி தொடர்பான ஒத்திகை மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (26.05.2025) காலை 10.00மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வினைப் மாவட்ட செயலக உற்பத்தித் திறன் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் கட்டடத் தொகுதியில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்பு கருவிகளினை அனர்த்த காலங்களில் உடனடியாக களத்தில் எல்லோரும் பயன்படுத்துதல் மற்றும் குறித்த கருவிகளின் பயன்பாடுகள் தொடர்பாக செயன்முறை ரீதியாக விழிப்புணர்வூட்டும் நோக்கில் இது நடைபெற்றது.

இதன்போது தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தடுப்பது, விபத்து ஏற்பட்டால் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், தீயணைப்பு கருவிகளின் பயன்பாடுகள் மற்றும் கையாளுகை தொடர்பாக தெளிவூட்டல் பற்றி மாவட்ட அனர்த்த ஒருங்கிணைப்பு பிரிவின் உதவிப் பணிப்பாளர் சி.கோகுலராஜா அவர்கள் ஒத்திகையின் மூலம் விளக்கினர்.

தொடர்ந்து தீயணைப்பு கொள்கலன்களை கையாளுகின்ற முறைமை தொடர்பாக செயன்முறை ரீதியாக விளக்கமளிக்கப்பட்டு, உத்தியோகத்தர்களும் கையாளுவதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டு தெளிவூட்டப்பட்டுள்ளது.

இச் செயலமர்வில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) இ.நளாஜினி, பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட அனர்த்த ஒருங்கிணைப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள், உற்பத்தித்திறன் பிரிவின் உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஆனையிரவு உப்பளம் முன்பாக போராட்டம்!

ஆனையிரவு உப்பளத்தில் கடந்த 14.05.2025 ஆம் திகதியிலிருந்து தமது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் தம்மை ஒரு அடிமைகள் போல் நடாத்தப்பட்டு தமக்கு உப்பளத்தில் தொடர்ச்சியாக வேலை வழங்கப்படுவதில்லை எனவும் அங்கு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உப்பளத்தின் முகாமையாளருக்கு சார்பாக இருப்பவர்களுக்கு மாதம் முழுவதும் வேலை வழங்கப்படுவதாகவும், இதன் காரணமாக தமக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்வாறான நடவடிக்கை தமது வாழ்வாதாரத்தில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கடந்த 13 ஆம் திகதியிலிருந்து இன்று 26.05.2025 வரை எந்த வித வேலையும் வழங்கப்படவில்லை எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய தீர்வை தமக்கு வழங்குவார்கள் என எதிர்பார்த்துள்ளதாகவும், உரிய தீர்ப்பு கிடைக்கும் எதிர்பார்ப்புடன் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எம்முடன் கலந்துரையாடி எமக்கான உரிய தீர்வினை பெற்றுத்தந்து எம்மை வலமை போன்று பணியில் ஈடுபடுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.