Friday, March 13, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 232

இன்று பல இடங்களில் இடியுடன் மழை!

0

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல் மாகாணத்திலும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரசவித்த பெண்ணுக்கு ரூ.11.42 கோடி இழப்பீடு!

0

மருத்துவ அலட்சியத்தால் உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு, இரண்டு மருத்துவர்கள் ரூ.11.42 கோடி இழப்பீடு வழங்க மலேசியா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2019 ஜனவரி 9 மலேசியாவை சேர்ந்த புனிதா மோகன், 36, தனது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். பிரசவத்திற்குப் பிந்தைய ரத்தப்போக்கால் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு மலேசியா உயர்நீதி மன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிவில் உயர்நீதிமன்றம் கூறியதாவது:

புனிதாவிற்கு ஜனவரி 9ம் தேதி டாக்டர் ரவியின் மேற்பார்வையில் பிரசவம் நடந்தது. அவர் வலியால் அழத் தொடங்கியபோது நிலைமை மோசமாக மாறியது. அவரது தாயார் பிரசவ அறைக்கு விரைந்தார். புனிதாவுக்கு அதிக ரத்தப்போக்கு இருப்பதைக் கண்டார்.

மருத்துவர்களில் ஒருவர், குழந்தையை பெற்றெடுத்த புனிதா மோகனை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டு, சென்று விட்டார்.இதன் விளைவாக பிரசவத்திற்குப் பிறகு அவர் ரத்தப்போக்கு ஏற்பட்டு இறந்ததாகவும் கண்டறியப்பட்டது.

மருத்துவர்கள் டாக்டர் ரவி, டாக்டர் சண்முகம் மற்றும் பணியில் இருந்த மூன்று செவிலியர்களின் மருத்துவ அலட்சியத்தால் புனிதா இறந்தார். பிரசவத்திற்குப் பிந்தைய வழக்குகளைக் கையாள்வதில் பல வருட அனுபவம் பெற்ற பிறகும், அவர்கள் நோயாளியின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் செவிலியர்களிடம் விட்டுச் சென்றது தெரியவந்துள்ளது.

புனிதாவின் நிலைமை மோசமானபோது, செவிலியர்கள், டாக்டர்களை தேடினர். அப்போது அவர்களை கண்டறிய முடிவில்லை. அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அறுவை சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

மருத்துவர்கள் பொறுப்புடன் செயல்பட்டிருந்தால் மரணத்தைத் தவிர்த்திருக்கலாம்.

கர்ப்பத்திற்குப் பிறகு அதிகப்படியான ரத்த இழப்பு என்பது அறியப்பட்ட பிரச்சினை. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டால் எந்தவொரு விரும்பத்தகாத சம்பவத்தையும் தவிர்க்க முடியும். ஆகையால் மருத்துவர்கள் இருவரும் பிரசவித்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.11.42 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.

எரிந்து சாம்பலாகும் அமெரிக்கா. இதுவரை 11 பேர் பலி!

0

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பரவி வரும் காட்டுத் தீக்கு இதுவரை 11 பேர் பலியான நிலையில் ஆயிரக்கணக்கான கட்டடங்களும் வீடுகளும் தீக்கிரையாகி சாம்பலாக மாறிவருகிறது.

நீரேற்று நிலையங்களிலிருந்து தண்ணீர் எடுத்து பீய்ச்சி அடிக்கப்பட்டு வந்த நிலையில், அதுவும் தண்ணீரின்றி வறண்டுபோயிருக்கிறது. விமானம் மூலமும் காட்டுத் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.

ஏழை முதல் கோடீஸ்வரர்கள் என அனைவரிடமும் இருந்து அனைத்தையும் பறித்துச் சென்றிருக்கிறது காட்டுத் தீ. வீடு என்றோ, பள்ளி என்றோ, வங்கி என்றோ பார்க்கவில்லை. அதற்கு அனைவரும் அனைத்தும் சமம் என்பது போல சாம்பலாக்கிச் சென்றிருக்கிறது.

காட்டுத் தீக்கு காரணம்?

தெற்கு கலிஃபோர்னியாவில் ஆண்டுதோறும் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இருக்கும். இதனால் காடுகளிலும் மரங்கள் செழித்து இருக்கும், காற்றிலும் தேவையான ஈரப்பதம் இருப்பதால் காட்டுத் தீ பரவுவதற்கான அபாயம் குறைவாக இரக்கும்.

ஆனால், இந்த ஆண்டு குறைந்த மழைப்பொழிவும், பலமான காற்றும், காடுகளில் காய்ந்த மரங்களும், காட்டுத் தீ வேகமாகப் பரவக் காரணிகளாக அமைந்துவிட்டாகக் கூறப்படுகிறது.

தெற்கு கலிஃபோர்னியாவில் பற்றிய தீ மேலும் பரவக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஏற்கனவே லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் 35 ஆயிரம் ஏக்கர் நிலத்தை காவு வாங்கிக்கொண்டு, மேலும் தனது ஜூவாலையால் காட்டுப் பகுதிகளையும் குடியிருப்புகளையும் சம்பலாக்கும் வேலையை தீவிரமாக செய்து வருகிறது.

திடீரென இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர்!

0

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன், உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்னல் மந்தீப் சிங் நேகியுடன், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகரவை இன்று (ஜனவரி 10) கொழும்பில் உள்ள பிரதி அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, ​​ஜனவரி 26 ஆம் திகதி இந்தியாவின் 76 வது குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்குபற்ற பிரதி அமைச்சருக்கு கேப்டன் முகுந்தன் உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்தார். இச்சந்திப்பின் போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

எதிர்கால, மற்றும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால மற்றும் வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட இரு நாட்டு மக்களுக்கிடையிலான வலுவான தொடர்புகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதி அமைச்சர், இந்தியாவின் தொடர்ச்சியான இராணுவ உதவிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் ஆதரவை பிரதி அமைச்சர் பாராட்டி, இப்பிரச்சினையை எதிர்த்துப் போராடுவதற்கான பரஸ்பர உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்த சந்திப்பு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீடித்த நட்பு மற்றும் ஒத்துழைப்பு உணர்வை வலுப்படுத்துவதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் படத்தில் நடிக்க மாட்டேன் – அஜித்

0

நடிகர் அஜித் குமார் ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கியுள்ளார். தற்போது கார் பந்தயத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகி்றார். அதன்படி கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக அஜித் துபாய் சென்றுள்ளார்.

அங்கு ரேசிற்கான பயிற்சியில் அவர் கலந்துக்கொண்டார். அப்பொழுது அவர் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஜித் காயமின்றி உயிர் தப்பினார். இதனையடுத்து மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் கார் ரேஸ் வீரராக போட்டியில் பங்கேற்பது குறித்து நடிகர் அஜித்குமார் பேட்டியளித்துள்ளார், அதில் திரைப்படங்களில் நடிக்க வேண்டியிருந்ததால் இடையில் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

நடப்பு கார் ரேஸ் தொடர் முடியும் வரை திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. கார் பந்தய ஓட்டுநராக மட்டுமல்ல அணியின் உரிமையாளராகவும் வந்துள்ளேன். கார் ரேஸ் தொடர் நடைபெறாத மாதங்களான ஒக்டோபர் முதல் மார்ச் வரை திரைப்படங்களில் நடிப்பேன் என அஜித் குமார் கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!

0

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்,ரோஹிங்கிய அகதிகளை மியன்மாருக்கு திருப்பி அனுப்பாதீர்கள்

புதிய ஆண்டில் ஆரம்பமாகியிருக்கும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரவூப் ஹக்கீம் முக்கிய சில விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தார்.

இந் நாட்டில் சட்டமும்,ஒழுங்கும் நிலைநாட்டப்படுவதனூடாக சரியான வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதோடு,அதற்குச் சாதகமான சூழ்நிலையையும் உருவாகும் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

நமது நாட்டில் இந்த சட்டமும்,ஒழுங்கு
ம் பாதுகாக்கப்படுகின்றதா என்று நாங்கள் சிந்திக்கவேண்டும் எனக் கூறிய ரவூப் ஹக்கீம் ,பத்திரிகை செய்தியையும் சுட்டிக்காட்டினார். அதாவது, “சட்டமா அதிபர் திணைக்கள அலுவலர்களை ஜனாதிபதி
நீதியமைச்சரோடு சந்தித்த ஒரு செய்தியைக் காணக் கிடைத்தது. அவர்களது சந்திப்பில் இந்த வழக்குகள் தாமதித்தல் உள்ளிட்ட பல விடயங்களை கலந்துரையாடியிருப்பதாக தெரியவருகின்றது” என்றார்.

ஜனாதிபதி , ஊழல் ஒழிப்பு தினத்தில் ஆற்றிய உரை பற்றி நாங்கள் கவனம் செலுத்துவதென்றால் சட்டமா அதிபர் திணைக்களத்திற்குள்ள பல சவால்களை முன்வைத்தார், அதன் பலனாகத்தான் இந்த கலந்துரையாடல் நடந்திருக்கலாம் என்ற எண்ணம் இருப்பதாக ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

மேலும் , சட்டமா அதிபர் திணைக்கள அலுவலர்கள் ஒரு விடயத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கின்றது. அதாவது பொலிஸ் திணைக்களத்தில் பல குறைகள் இருப்பதாக தெரியவந்திருக்கின்றது. அவர்கள் சரியாக கோப்புக்களை அனுப்புவதில்லை என்றும், விசாரணைகள் சரியாக முடிக்கப்படாமல் கோப்புக்கள் அனுப்பப்படுவதாக கூறப்பட்டிருக்கின்றது. இவ்வாறு பத்திரிகை செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

சட்டமா அதிபர் திணைக்கள உத்தியோகத்தர்கள் அறிக்கை ஒன்றையும் வழங்கவிருப்பதோடு, தற்போதைய வழக்குகள் பற்றிய விபரத்தையும் வழங்கவிருக்கிறார்கள்.

இன்று ஜனவரி 8 ஆம் திகதி, இதே போன்றதொரு தினத்தில் 2009 ஆம் ஆண்டில் எமது நாட்டில் இருந்த ஒரு ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நினைவு படுத்திய ரவூப் ஹக்கீம், தானும்,ரவி கருணாநாயக்கவும் கனத்தை மயானத்திற்குச் சென்று அன்னாரை நினைவு கூர்ந்ததை குறிப்பிட்டு, குறித்த படுகொலை இன்னும் ஒரு இரகசிய கொலையாக இருப்பதையும் சுட்டிக்காட்டினார். லசந்த விக்கிரமதுங்க “மிக்” விமான கொடுக்கல்,வாங்கல் பற்றிய தகவல்களை, சர்ச்சைக்குரிய விடயங்களை பத்திரிகைகளில் எழுதி வந்தார். பல சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் வெளியிட்டிருந்தார். அது பற்றி ஒரு வழக்கும் இருக்கின்றது. அவருக்கு எதிராகவும் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அவரது வழக்கு தொடர்பான சாட்சியங்களை விசாரித்தால் அவரது படுகொலை தொடர்பான விபரங்களை கண்டறியக்கூடியதாகவிருக்கும்,அந்த குற்றவாளிகள் யார் என்பதையும் நாங்கள் கண்டுபிடிக்க முடியும்.

நான்கு ஜனாதிபதிகள் வந்து சென்றுவிட்டார்கள் ஆனால் இந்த வழக்கில் நடவடிக்கைகள் இன்றும் தொடர்ந்துவருவதை சுட்டிக்காட்டினார்.

இது பற்றி சட்டமா அதிபர் திணைக்களம் மௌனம் சாதிப்பதாகவும்,பொலிஸ் திணைக்களம் என்ன கூறுகிறது என்று பார்த்தால் அதுவும் மௌனமாக இருப்பதாக தெரிவித்தார்.

இவ்விடயங்களில் கடந்த காலங்களில் நேர்மையாக செயற்பட்ட அதிகாரிகள் தொடர்பாக சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம், குறித்த விடயங்கள் தொடர்பான எல்லா விடயங்களும் அறிந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களிடமுள்ள தகவல்களை உள்ளடக்கி இறுதியாக ஒரு முடிவுக்கு வருவது இந்த அரசாங்கத்தின் பிரதான கடமையாகவுள்ளது என்பதை பல விடயங்களை முன்வைத்து உரையாற்றினார்.

அதுமாத்திரமில்லை கீத் நோயர், உபாலி தென்னகோன் போன்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் அதில் கீத் நோயர்க்கு நடந்த கொடுமைகள் தொடர்பாகவும் ரவூப் ஹக்கீம் நினைவு படுத்தியதோடு,உண்மை வெளிக்கொணரப்படவேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார். மேலும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு பற்றி இந்த அரசாங்கம் கவனத்தில் வெள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதேநேரம், ஒடுக்கு முறையை இந்த அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என்பதை பத்திரிகை செய்தியொன்றை மேற்கோள் காட்டி உரையாற்றினார். அதில் சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி திட்டம் தொடர்பான கலந்துரையாடல் பேராதனை பல்கலைக்கழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது தொடர்பாகவும்,பல்கலைக்கழகங்களில் இப்படியான ஒரு விடயம் இடம்பெறுமாக இருந்தால் அது மிக பாரதூரமானது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழகத்தின் கல்விசார் சுதந்திரம் ஒரு நாட்டின் முக்கிய விடயமாகும் என்பதையும் தெளிவுபடுத்தினார். சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி திட்டம் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கான பொதுமக்களுக்கான உரிமையை தெளிவுபடுத்தியதோடு, இந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தில் கட்டளைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை ஏற்றுக்கொண்டுள்ளதையும் தெளிவாக எடுத்துரைத்தார்.

மியன்மாரில் இருந்து இலங்கை வந்துள்ள ரோஹிங்கிய அகதிகள் தொடர்பாகவும் சபைக்கு தனது நிலைப்பாட்டை தெரிவித்ததோடு, இவ் விடயத்தில் அரசாங்கம் நடந்துகொள்ளும் விதத்தையும் கண்டித்தார்.

மனித உரிமை ஆணைக்குழு எங்கும் சென்று தங்களுக்கு தேவையான விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரம் இருந்தும், அவர்களை ரோஹிங்கிய அகதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள விமானப்படைத் தளத்திற்கு சென்று சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ரோஹிங்கிய சிறுபான்மையினர்கள் இலங்கைக்குள் வந்திருப்பது இது முதற்தடவை அல்ல கடந்த காலங்களிலும் வருகை தந்ததை நினைவுபடுத்திய ரவூப் ஹக்கீம், ரோஹிங்கிய அகதிகள் பங்களாதேஷ், மலேசியா, சவூதி அரேபியா போன்ற நாடுகளில் இடம்பெயர்ந்து வாழ்வதை குறிப்பிட்டார்.

இலங்கை அமைச்சர் ஒருவர் ரோஹிங்கிய அகதிகளை மனித கடத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் எனக் கூறிய கருத்தை விமர்சித்த ரவூப் ஹக்கீம், “மனித கடத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என்று நீங்கள் இவ்வாறு கூற என்ன துணிவு உங்களுக்குள்ளது” என வினா எழுப்பி, 1980 களில் வன்முறைகள் நடைபெற்றபோது இத்தாலி,லெபனான்,பிரான்ஸ்,ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளுக்கு மக்கள் விடுதலை முன்னணி(JVP) அங்கத்தவர்கள் சென்றார்கள் என்பதை எடுத்துக்காட்டி இன்றைய அரசாங்கத்திற்கு ரோஹிங்கிய மக்களின் நெருக்கடியான நிலையை உணர்த்தினார்.

ரோஹிங்கிய அகதிகள் தொடர்பாக மியன்மார் அதிகாரிகளோடு அரசாங்கம் பேசுவதை கண்டித்து ,அந்த மக்களுக்கு நடக்கும் கொடுமைகளை எடுத்துச் சொல்லி, ரோஹிங்கிய அகதிகள் விடயத்தில் அதிகாரிகள் சொல்வதை கேட்டு இங்கு வந்து கூறுவதற்கு அமைச்சர்கள் நியமிக்கவில்லை. கிளிப்பிள்ளை போல் பேசவேண்டாம் எனவும் கண்டித்தார்,மேலும், விடயங்களை ஆராய்ந்து பார்த்து தீர்மானங்களை எடுங்கள் என வலியுறுத்தினார். மேலும் ரோஹிங்ய அகதிகளை திரும்பவும் மியன்மாருக்கு அனுப்புவதற்கு அரசாங்கம் எடுக்கும் முடிவானது சர்வதேச ரீதியாக நாட்டிற்கு இருக்கும் நற்பெயரை கெடுத்துக்கொள்ளும் செயல் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சமவாயங்களை ரோஹிங்கிய அகதிகள் விடயத்தில் பின்பற்றுமாறும் வலியுறுத்தினார்.

மேலும், மனித கடத்தல்காரர்கள் என அவர்களை கூறுவதை தவிர்க்குமாறும், திரும்பவும் அவர்களை மியன்மாருக்கு அனுப்பும் எண்ணத்தை இந்த அரசாங்கம் கைவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதோடு,பாதுகாப்பான வேறு நாடுகளுக்கு அனுப்புவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக ரோஹிங்கிய அகதிகள் விடயத்தில் தனது அக்கறையையும்,கரிசனையையும் தனது உரையினூடாக ரவூப் ஹக்கீம் தெட்டத்தெளிவாக வெளிப்படுத்தியதை காணமுடிந்தது.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (பீ.ஏ) -ஓட்டமாவடி.

சொகுசு பேருந்துக்களுக்கு மாத்திரம் அனுமதி!

0

187 வழித்தடத்தில் இயங்கும் கோட்டை – கட்டுநாயக்க சொகுசு பேருந்துகள் இன்று (10) முதல் விமான நிலைய புறப்பாடு முனையத்திற்குள் பிரவேசிப்பதற்கு விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.

விமானப் பயணிகளின் வசதிக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார்  6 ஆண்டுகளுக்குப் பிறகு கோட்டை – கட்டுநாயக்க பேருந்துகள், விமான நிலைய புறப்பாடு முனையத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றன.

இருப்பினும், விமான நிலையத்தில் தரித்து நின்று இந்தப் பேருந்து சேவையை இயக்க வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

மெக்சிகன் அமெரிக்கா என்று பெயர் மாற்றலாம்!

0

மெக்சிகோ வளைகுடா பெயரை மாற்றப் போவதாக அறிவிப்பு வெளியிட்ட, அமெரிக்கா அதிபர் (தேர்வு) டொனால்டு டிரம்புக்கு, அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன் பாம் பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்கா அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். அவர் தனது நிர்வாகத்தில் பணிபுரியும் அனைவரையும் தேர்வு செய்து விட்டார். வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார். அவர் தற்போது மற்ற நாடுகளுக்கு சொந்தம் கொண்டாடி வருகிறார். சமீபத்தில் கிரீன்லாந்து நாட்டிற்கு உரிமை கொண்டாடினார். ஆனால் அந்நாடு தக்க பதிலடி கொடுத்தது.

தற்போது கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணம் ஆக்குங்கள் என கூறியிருந்தார். இதற்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இதற்கு வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கிடையே, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைத்திருக்கும், அகண்ட அமெரிக்கா வரைப்படத்தை வெளியிட்டு டிரம்ப் பரபரப்பை கிளப்பி இருந்தார். இந்நிலையில், அவர், மெக்சிகோ வளைகுடாவை ‘அமெரிக்க வளைகுடா’ என்று பெயர் மாற்ற விரும்புவதாக தெரிவித்தார்.

மேலும், அவர், ‘இது அழகான பெயர். பொருத்தமானது என்று கூறியிருந்தார். இதற்கு, பதில் அளித்து மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் கூறியதாவது: மெக்சிகோ நாட்டின் ஒரு பகுதியாக இருந்த டெக்ஸாஸ், அரிசோனா, நெவாடா, நியூ மெக்சிகோ, கலிபோர்னியா மாநிலங்கள் இப்போது அமெரிக்காவிடம் இருக்கின்றன. அதனால் அந்த பகுதிகளை, மெக்சிகன் அமெரிக்கா என்று பெயர் மாற்றலாம்; அதுவும் நன்றாக இருக்கிறது.

உண்மை என்னவென்றால் மெக்சிகோ வளைகுடா என்ற பெயர் 17ம் நூற்றாண்டில் இருந்து அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ வளைகுடா பெயரை மாற்றுவதாக, டிரம்ப் கூறுவதை ஏற்க முடியாது. எதிர்காலத்தில் ஒரு நல்ல உறவு இருக்கும் என்று நான் விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

62 வயதான மெக்சிகோவில் அதிபர் கிளாடியா ஷீன்பாம் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வரி விதிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் தொடர்பாக டிரம்ப் மெக்சிகோவுடன் பலமுறை மோதிக்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரிசி இறக்குமதியில் பாரிய மோசடி!

0

அரிசி இறக்குமதி செய்ய அரசாங்கம் வழங்கிய அனுமதியைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் குழு தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் ஆராய்ந்த போது, பாஸ்மதி அரிசியைப் போன்ற ஒரு வகை அரிசி குறைந்த விலையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு பாஸ்மதி அரிசியாக சந்தைப்படுத்தப்படுவது தெரியவந்ததுள்ளதாக தெரன ஊடகம் தெரிவித்துள்ளது.

பாஸ்மதி அரிசியை எந்த நேரத்திலும் நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியும் என்பதோடு,  ஒரு கிலோ அரிசிக்கு 300 ரூபாவுக்கும் அதிகமான வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நாட்டில் ரூ.220 முதல் 250 வரை விற்கக்கூடிய பாஸ்மதி அரிசியைப் போன்ற ஒரு வகை அரிசி, ஒரு கிலோவுக்கு ரூ.65 வரி செலுத்தி நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

இந்த விடயம், தொடர்பாக ‘அத தெரண’ சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்க பணிப்பாளர் ஜெனரல் சீவலி அருக்கோடவிடம் வினவியது.

நாட்டிற்கு வரும் அரிசி இருப்புகளின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பப்பட்டால் மாத்திரமே அவை பாஸ்மதி அரிசியா இல்லை என்பது தொடர்பில் அடையாளம் காணமுடியும் என அவர் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க சுங்கத் துறைக்கு எந்த சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லை என்றும், இது தொடர்பான அதிகாரம் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடமே உள்ளது என்றும் சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Clean Sri Lanka வலுக்கட்டாயமான திட்டமல்ல!

0

Clean Sri Lanka வேலைத்திட்டம் கட்டாயத்தின் அடிப்படையில் மேற்கொள்ளும் ஒன்றல்ல, அனைவரினதும் விருப்பம் மற்றும் ஒத்துழைப்பின் கீழ் இடம்பெற வேண்டிய ஒன்றாகும்.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

Clean Sri Lanka வேலைத்திட்டம் கட்டாயத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல, அனைவரினதும் விருப்பம் மற்றும் ஒத்துழைப்பின் கீழ் இடம்பெற வேண்டிய வேலைத்திட்டமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

முன்மாதிரியை வழங்குதல், ஊக்குவித்தல், ஈடுபடுத்தல் மற்றும் மாற்றத்தின் தேவையை உணரச் செய்வதே Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் அடிப்படை நோக்கங்களாகும். இதன்மூலம் இலங்கை சமூகத்திற்குள் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

அபிவிருத்தியடைந்த தேசமாக இலங்கையை மீள ஸ்தாபிப்பதற்கென சமூக, நெறிமுறை மற்றும் சுற்றுச்சூழல் பூரணத்துவம் என்பவற்றுடன் நாட்டிற்குள் முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் ஒன்றுபடுத்தி அதற்கான வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோன்று நல்லதொரு ஆட்சி நிர்வாக எண்ணக்கருவை உறுதிப்படுத்தி, இலங்கை மக்கள் சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் சேர்ந்த உள்ளார்ந்த செயற்பாடுகள் மற்றும் மனித தொடர்புகளுக்கென அடையாளம் காணப்பட்ட விழுமியம் மற்றும் நெறிமுறைகளை ஸ்தாபிப்பதன் ஊடாக புன்னகை நிறைந்த மக்கள் வாழும் நாட்டை உருவாக்குவதே நோக்கமாகும்.

அதற்கென Clean Sri Lanka வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறிமுறைக்கென தேசிய மட்டத்திலான எண்ணக்கரு மற்றும் கொள்கை ரீதியிலான தீர்மானங்களை எடுப்பதற்கு பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல்யமானோர் மற்றும் சமூக செயற்ப்பாட்டாளர்களுடன் கூடிய 19 உறுப்பினர்களைக் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய நிகழ்ச்சித் திட்டங்களை அடையாளம் காணுதல், மக்களை தெளிவுபடுத்துதல், வளங்கள் முகாமைத்துவ ஒருங்கிணைப்பு, முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் உரிய நோக்கத்தை அடையும் வகையில் இடம்பெறுகின்றதா என பின்தொடர்தல் மற்றும் ஏற்படும் இடையூறுகள் தொடர்பில் உரிய நிறுவனங்களை தெளிவுபடுத்தல், வேலைத்திட்டம் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட நோக்கம் நிறைவேறியுள்ளதா என ஆராய்ந்து பார்த்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் இதில் உள்ளடங்குகின்றன.

இவ்வாறான வேலைத்திட்டங்கள் இதற்கு முன்னர் நாட்டிற்குள் முன்னெடுக்கப்படவில்லை. ஏதாவதொரு செயற்பாட்டை சட்டரீதியாக மாத்திரம் நடைமுறைப்படுத்த அல்லது கட்டாயத்தின் அடிப்படையில் முன்னெடுக்கவே எமது நிறுவனங்களும், அதிகாரிகளும் பழக்கப்பட்டுள்ளனர். தனிநபரின் அகத்திலிருந்து மாற்றங்களை ஏற்படுத்துவதன் ஊடாக சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே இந்த வேலைத்திட்டமாகும். இது சற்று உணர்வுபூர்வமானது. இதனை நடைமுறைப்படுத்தும் போது சில குறைபாடுகள் நிகழக்கூடும். சிலர் தவறான நோக்கத்தில் இதனை சீர்குலைக்க முயற்சிக்கலாம். வேலைத்திட்டத்தின் எண்ணக்கருவை புரிந்துகொண்டு அதனை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நாம் வழக்கம் போன்று பணிகளை மேற்கொள்ளும் போது சில சில விடயங்கள் இடம்பெறக்கூடும். எனினும் நாம் எதிர்பார்க்கும் பரிணாமத்தை கட்டாயத்தின் அடிப்படையில் ஏற்படுத்த முடியாது. அனைவரினதும் ஒத்துழைப்பு மற்றும் விருப்பத்தின் அடிப்படையிலேயே அதனை மேற்கொள்ள முடியுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.