Friday, March 13, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 236

மீண்டும் சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்!

0

சீனாவில் உருவான கோவிட் வைரஸ் காரணமாக உலகமே முடங்கிய நிலையில், தற்போது அங்கு எச்எம்பிவி வைரஸ் வேகமாக பரவி வருவது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு சீனாவில் உருவான கோவிட் வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதில் உலகளவில் கோடிக்கணக்கான பேர் உயிரிழந்தனர். இதனால், அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. இதில் இருந்து தற்போது தான் பல நாடுகள் மீண்டு வருகின்றன.

இந்நிலையில், சீனாவில் புதிய வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருகிறது. ஹியூமன் மெடா நிமோ வைரஸ் எச்எம்பிவி ( Human MetaPneumo Virus) என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த வைரஸ், குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிகம் தாக்குகிறது. இதனால், மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது. எச்எம்பிவி எனப்படும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு கடுமையான காய்ச்சல், நுழையீரல் தொற்று பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிகிறது.

இந்த வைரஸ் பரவலை பரவக்கூடிய தொற்று நோயாக சீனா சுகாதாரத்துறையினர் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், குளிர்காலங்களில் மூச்சு மற்றும் சளி தொந்தரவுகள் அதிகரிக்கும் என்பதால், அதிகமானோர் மருத்துவமனைகளில் குவிந்து வருவதை கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எச்எம்பிவி வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமல், தும்மல், தொண்டை எரிச்சல் , மூச்சுவிடுவதில் பிரச்னை உள்ளிட்டவை முதலில் ஏற்படும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கும் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

இந்த வைரஸ் கடந்த 2001ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது., பொதுவாக சுவாசப்பாதை மற்றும் தொண்டையில் தான் தொற்றை ஏற்படுத்தும். ஒரு சிலருக்கு நிமோனியா, ஆஸ்துமா உள்ளிட்டவற்றை உண்டாக்கும். இந்த வைரஸ் காரணமாக 3 முதல் 6 நாட்கள் வரை பாதிப்பு இருக்கும். அதேநேரத்தில் வைரஸ் தொற்றின் தாக்கத்தை பொறுத்து இது மாறுபடும்.

தடுப்பது எப்படி

எச்எம்பிவி வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க கைகளை சோப் மற்றும் தண்ணீர் மூலம் 20 நொடிகள் கழுவ வேண்டும். கைகளை கழுவாமல், கண்கள், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றை தொடக்கூடாது. இந்த வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பு கூடாது. வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிய வேண்டும்.

தடுப்பூசி

தற்போது வரை இந்த வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க எந்த சிகிச்சையும் இல்லை. தடுப்பூசிகளும் இல்லை. சாதாரணமாக அளிக்கப்படும் சிகிச்சையே அளிக்கப்படுகிறது. இப்பிரச்னை உலக நாடுகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

தினமலர் – இந்திய ஊடக அறிக்கை

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதில் தாமதம்!

0

அச்சிடுவதில் ஏற்பட்டிருந்த தாமதம் காரணமாக, தற்போது நிலுவையில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களை ஒரு மாதத்திற்குள் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார்.

அதற்கமைய, அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ள சுமார் 1,30,000 சாரதி அனுமதிப்பத்திரங்களை ஜனவரி மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர அலுவலகத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்குவும் கலந்துகொண்டார்.

நிறுவனத்தில் இணையவழி முறை மூலம் சேவைகளை பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அலுவலகத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பிரதியமைச்சர்கள், தற்போதைய தொழில்நுட்ப முறைகளுக்குப் பதிலாக, அதிக திறன் வாய்ந்த நவீன முறைகளைப் பயன்படுத்தி, வினைத்திறனான பொதுச் சேவையை வழங்கும் ஒரு அரச நிறுவனமாக மாற்றத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர்.

ஊடக சுதந்திரம் ஒடுக்கப்படுகிறதா?

0

தற்போதைய அரசாங்கம், ஒரு அரசாங்கமாக ஊடக சுதந்திரத்தை அதிகபட்சமாக பாதுகாப்பதாகவும் ஊடக சுதந்திரத்திற்காக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்ளாதிருக்க வேண்டும் என்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயத்திஸ்ஸ தெரிவித்தார்.

இன்று (03) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அரசாங்கத்தின் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் தகவல்களை மக்களுக்குத் தெரிவிக்கும் போது ஊடகவியலாளர்களுக்கு அதிகூடிய சந்தர்ப்பம் வழங்குவதாகவும் ஊடக சுதந்திரத்தில் கை வைப்பதற்கு எவ்விதத்திலும் தயார் இல்லை என்றும் சுகாதார ஊடகத்துறை அமைச்சர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டினார்.

கருத்து மற்றும் பேச்சு வெளிப்படுத்தும் சுதந்திரம் உயர் மட்டத்தில் பாதுகாப்பதற்காக செயற்படுவதுடன் ஜனநாயகத்தை உயர்ந்த மட்டத்தில் பாதுகாப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஏதேனும் சிறு இலக்குகளை இலக்குகளுடன் மிகவும் முரண்பாட்டுடன் மற்றும் தீங்கிழைக்கும் யாருக்கேனும் தமது வர்த்தக அல்லது அரசியல் நோக்கங்களுக்காக ஊடகத்துறையைப் பயன்படுத்துவதாயின் அல்லது அதற்காகத் தமது செய்தித்தாள் அல்லது அலைவரிசையைப் பயன்படுத்துவதாயின் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு மக்களுக்காக அரசாங்கத்திற்கு உரிமை உள்ளதாகவும் வலியுறுத்தினார்.

முதலாவதாக நாட்டில் மக்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பு அரசாங்கத்திற்கு முக்கியமானது என குறிப்பிட்ட வெகுசன ஊடக அமைச்சர், மக்களின் ஒற்றுமை, நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு, ஒற்றுமை என இவை அனைத்தையும் பாதுகாப்பதாக யாரேனும் அல்லது குறிக்கோளுடன் நிறைவேற்றும் பொய்யான திரிபுபடுத்தப்பட்ட செய்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தயார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாடு சுவாசிப்பதற்கு ஆரம்பித்துள்ள சந்தர்ப்பத்தில் அதனை நாசப்படுத்துவது நாட்டுக்கு செய்யும் துரோகம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இது இலாபம் ஈட்டும் சேவை நிறுவனமல்ல!

0

பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் மக்களுக்கு ஆரோக்கியமிகுந்த சுகாதாரமான வாழ்க்கையை வழங்குவதே சுகாதார அமைச்சின் பணியாகும் – சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ

பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் மக்களுக்கு ஆரோக்கியமிகுந்த சுகாதாரமான வாழ்க்கையை வழங்குவதே சுகாதார அமைச்சின் பணியாகும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஜனவரி முதலாம் திகதி, சுகாதார அமைச்சின் ஊழியர்கள் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையும் எதிர்காலத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் வர்த்தமானியாக வெளியிடப்படும் எனவும், புதிய யுகத்திற்கு பிரவேசிக்கும் நம்பிக்கையுடன் இந்நாட்டு மக்கள் புதிய அரசாங்கத்திற்கு பாரிய ஆணையை வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அனைத்து அதிகாரிகள் மற்றும் பிரஜைகளின் பங்களிப்புடன் எதிர்வரும் ஐந்து வருடங்களில் இலங்கை பிரஜைகளின் நம்பிக்கையை நிறைவேற்றி நாட்டை மேம்படுத்தும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், சுகாதார சேவையை இலாபம் ஈட்டும் சேவையாக அரசாங்கம் கருதுவதில்லை, சுகாதாரம் என்பது பொது சேவையாகும். எனவே, இந்த சேவையை நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் மக்களுக்கு இயன்றனவு வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டார் தென்கொரிய ஜனாதிபதி!

0

ராணுவ ஆட்சியை அமல் செய்த விவகாரத்தில், கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, பதவி நீக்கப்பட்ட தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோலை அதிகாரிகள் கைது செய்தனர்.

கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில், அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் மசோதா தொடர்பாக ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, அந்நாட்டின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், 63, அவசரநிலை ராணுவ சட்டத்தை சமீபத்தில் அமல்படுத்தினார். இதற்கு எதிர்க்கட்சிகளும், ஆளுங் கட்சியில் சில எம்.பி.,க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், சில மணி நேரங்களில் அவசரநிலை அறிவிப்பை யூன் சுக் இயோல் திரும்பப் பெற்றார். இதற்கிடையே, ராணுவ சட்டத்தை பிரகடனம் செய்த யூன் சுக் இயோலை பதவிநீக்க வலியுறுத்தி, அந்நாட்டு பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்றது; இதையடுத்து, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் யூன் சுக் இயோலுக்கு தென் கொரிய நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில், இன்று (ஜன.,03) தென் கொரியா புலன் ஆய்வு அதிகாரிகள், பதவி நீக்கப்பட்ட தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோல் வீட்டிற்கு சென்று கோர்ட் கைது வாரன்ட் உத்தரவு செயல்படுத்தினர். யூன் சுக் இயோலை அதிகாரிகள் கைது செய்த போது அவரது ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர்.

எனினும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது உத்தரவை செயல்படுத்தினர். இந்த கைது சட்ட விரோதமானது என்று பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குமா?

0

இலங்கையின் புதிய இடதுசாரி அதிபரும் அவரது கட்சியும் பெற்ற பிரமிக்க வைக்கும் தேர்தல் வெற்றி அந்நாட்டு அரசியல் சூழலை மாற்றியுள்ளன.

ஆனால், இலங்கையில் நிதி நெருக்கடி நிலவும் நிலையில் அந்நாட்டின் புதிய தலைவர்கள், தங்கள் பிரசார வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குக் கடினமான சூழல் நிலவுகிறது.

செப்டம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவின் குறிப்பிடத்தக்க வெற்றியைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் அவரது தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைத்தது.

ஒரு புதிய ஆண்டு தொடங்கும் வேளையில், மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் பல ஆண்டுகளாக தவறான ஆட்சியில் இருந்து மீள முயற்சிக்கும் நாட்டுக்கு இது ஒரு திருப்புமுனையாக இருக்க வேண்டும் என்று அவரும் அவரது ஆதரவாளர்களும் விரும்புகிறார்கள்.

முந்தைய அரசாங்கம் இலங்கையின் பொருளாதாரத்தை உறுதியாக்கும் விதமாக 2.9 பில்லியன் டாலர் (2.31 பில்லியன் யூரோ) நிதித் தொகைப் பெறுவதற்காக, ஐ.எம்.எஃப் உடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

கடுமையான சிக்கன நடவடிக்கைகள், வரி உயர்வு மற்றும் எரிசக்தி மானியங்களை குறைவாக வழங்குவதற்கு, ஐஎம்எஃப் ஒப்பந்தம் வழி வகுத்ததால் சர்ச்சைக்குரியதாக மாறியது. மேலும், இது பொதுமக்களின் வாழ்வில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

தேர்தல் பிரசாரத்தின் போது திஸாநாயக்கவும் அவரது கூட்டணியும் ஐஎம்எஃப் உடன்படிக்கையின் சில பகுதிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதாக உறுதியளித்தனர்.

ஆனால், நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையில், தனது நிலைப்பாட்டை முற்றிலும் மாற்றிக்கொண்டார்.

“பொருளாதாரம் மிகவும் பலவீனமாக உள்ளது, ஒரு சிறிய மாற்றம் கூட பேரழிவை ஏற்படுத்தும்…தவறு செய்வதற்கு எந்த வாய்ப்பையும் வழங்க முடியாது,” என்று திஸாநாயக்க கூறினார்.

“(ஐஎம்எஃப் கடனின்) விதிமுறைகள் நல்லதா அல்லது கெட்டதா, ஒப்பந்தம் நமக்கு சாதகமாக உள்ளதா, இல்லையா என்பதைப் பற்றி விவாதிக்க இது நேரம் அல்ல. இந்தச் செயல்முறை சுமார் இரண்டு ஆண்டுகள் எடுத்தது, இதனை எங்களால் மீண்டும் தொடங்க முடியாது” என்றும் அவர் தெரிவித்தார்.

“அதிகமான வரிவிதிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு ஏற்படுத்திய நெருக்கடி காரணமாக மக்களுக்கு சில பொருளாதார நிவாரணங்களை வழங்குவதே திஸாநாயக்கவின் முன்னுரிமைகளில் ஒன்றாகும். கடன் மேலாண்மை மற்றொரு பெரிய சவாலாகும்,” என்று மூத்த அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட பிபிசியிடம் கூறினார்.

அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கும்போது உண்மையான போராட்டம் தொடங்கும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால், ஜனாதிபதி திஸாநாயக்க மற்றும் அவரது புதிய அரசாங்கம் பற்றிய மக்களின் பார்வை மாறலாம்.

“மக்கள் அவருக்கு ஒரு மிகப்பெரும் தீர்ப்பை வழங்கியுள்ளனர். சமூக நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க அவரை அனுமதிப்பதன் மூலம் சர்வதேச நாணய நிதியம் அதற்கு மதிப்பளிக்க வேண்டும்” என்கிறார் பேராசிரியர் உயங்கொட.

திஸாநாயக்க, இலங்கையில் இந்தியா மற்றும் சீனாவின் செல்வாக்கை சமநிலைப்படுத்தும் சவாலை எதிர்கொள்கிறார். இரண்டு நாடுகளும் சமீபத்திய ஆண்டுகளில் இலங்கையில் கணிசமான முதலீடுகளைச் செய்துள்ளன.

இலங்கையில் அதிகரித்து வரும் சீனாவின் தாக்கம், குறிப்பாக சீன “ஆராய்ச்சி” கப்பல்கள் இந்தியாவின் தெற்கு முனைக்கு அருகில் உள்ள தீவின் துறைமுகங்களுக்கு வருகை தருவது இந்தியாவுக்குக் கவலை அளித்துள்ளது.

“இந்தியாவின் நலனுக்கு பாதகமான வகையில் எங்களது நிலத்தை எந்த வகையிலும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று நான் இந்திய பிரதமரிடம் உறுதியளித்துள்ளேன்,” என்று நரேந்திர மோதியுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் திஸாநாயக்க கூறினார்.

இந்த உறுதிமொழியால் இந்தியா மகிழ்ச்சியடையும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் சீனாவுக்கு பயணம் செய்யும்போது சீனா என்ன எதிர்பார்க்கிறது என்பதை திஸாநாயக்க அறிந்துகொள்வார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

சட்டென்று மாறிய வானிலை!

0

மட்டக்களப்பிலிருந்து பொத்துவில், ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:

கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!

0

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு 10000 ரூபாய் வரை அதிகரிப்பு

சிறுநீரக நோயாளர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவு டிசம்பர் மாதத்தின் பின்னர் குறைக்கப்படும் என்று வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று கிராமிய அபிவிருத்தி, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவை 7500 ரூபாவில் இல் இருந்து 10000 ரூபாய் வரை அதிகரிக்க இந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்நாட்களில் பிரதேச செயலக மட்டத்தில் தகவல்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்ற போதிலும், இதனால் மக்களுக்கு கிடைக்கும் பயன்கள் எந்தவிதத்திலும் குறைக்கப்பட மாட்டாது என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தின் தகவல்களின்படி தற்போது 47244 சிறுநீரக நோயாளர்கள் உள்ளனர என்று தரவுகள் பதிவாகியுள்ளன. அந்த தரவுகள் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் தகவல் புதுப்பிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர மாணவர்கள் குறித்து ஆராயவேண்டும்!

0

உயர் தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவதை ஆராய வேண்டும்.

– பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

உயர் தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும், எந்தவொரு காரணங்களுக்காகவும் பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மஹரகம தேசிய கல்வி நிறுவனத்திற்கு நேற்றை தினம் (31) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போதே பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

தற்காலத்தில் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளில் பிள்ளைகள் தொடர்ச்சியாக இருப்பது மிகவும் குறைவாகவே உள்ளது. விசேடமாக ஆண் பிள்ளைகள் கல்வி செயற்பாடுகளிலிருந்து விலகிச் செல்வது அதிகரித்துள்ளது. எந்தவொரு சமூக, பொருளாதார காரணங்களை அடிப்படையாக கொண்டும் பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது. குழந்தை பருவ வளர்ச்சியிலிருந்து 13 வருடகால பாடசாலை கல்வி உட்பட உயர் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் அனைத்து பிள்ளைகளுக்கும் பகிரங்கமாக காணப்பட வேண்டும். தனிநபர் மற்றும் சமூக பரிணாமத்தை ஏற்படுத்துவதை கல்வியின் பிரதான இலக்காகக்கொள்வது மிக முக்கியமாகும்.

மக்கள் கோரிய சமூக பரிணாமத்தை முன்னெடுப்பதற்கென பரிணாமமடைந்த கல்வி மாற்றத்தை மேற்கொள்வதன் ஊடாக இந்த நாட்டின் பிள்ளைகளுக்கு புதிய உலகில் கால் பதிப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எமது அரசு செயற்படுகிறது. சமூகத்திற்கு பொறுப்புக்கூறும் பிரஜையை உருவாக்குவதற்கென கல்விக்காக ஒதுக்கப்படும் ஒவ்வொரு மூலதனத்தையும் நாட்டின் எதிர்கால முதலீடாகவே நாம் பார்க்கின்றோம். நீண்டகால பிரதிபலன்களைக் கொண்டுள்ள இந்த உணர்வுபூர்வமான வேலைத்திட்டங்கள் குறித்து தேசிய கல்வி நிறுவனத்திற்கு விசேட பொறுப்புக்கள் காணப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுலா விதானபத்திரண, பிரதி பணிப்பாளர் நாயகங்கள், பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

பிரதமர் ஊடக பிரிவு

இலங்கையில் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட சிகிச்சை பிரிவு!

0

இலங்கை விமானப்படையின் உழைப்பு மற்றும் பங்களிப்புடன் கதிர்காமம் ஆலயத்தின் நிதி அனுசரணையுடன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்த அணுக்கள் மாற்று  சிகிச்சைப் பிரிவு மஹரகம அபெக்ஷா  வைத்தியசாலையில் இன்று (02) திறந்து வைக்கப்பட்டது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக அரசு மருத்துவமனையில் கட்டப்பட்ட முதல் மற்றும் ஒரே எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்த அணுக்கள் மாற்று சிகிச்சை பிரிவு இதுவாகும்.

மஹரகம அபெக்ஷா வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்ற திறப்பு விழாவில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர ஆகியோர் கலந்துகொண்டனர்.

மஹரகம அபெக்ஷா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தினால்,  கதிர்காமம் ஆலய நிதி உதவியுடன் 2023 ஆம் ஆண்டு மூன்று மாடிகளைக் கொண்ட சிகிச்சை வளாகம் நிர்மாணிப்பதற்காக அதன் பஸ்நாயக்க நிலமே முன்வந்தார்.

இத்திட்டத்திற்கு விமானப்படையினரின் உழைப்பின் காரணமாக மூன்று மாடிகளை கொண்ட சிகிச்சை வளாகம் நான்கு மாடிகளை கொண்ட சிகிச்சை வளாகமாக கட்டப்பட்டு 2024 ஆம் ஆண்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.

நான்கு மாடி கட்டிடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களைப் பயன்படுத்தி , புதிய எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்த அணுக்கள் மாற்று சிகிச்சை சிகிச்சைப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது. 

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்விற்கு இந்த திட்டம் நம்பிக்கையளித்து வழிவகுத்துள்ளது.

இந்த பிரிவின் அனைத்து பராமரிப்பு நடவடிக்கைகளுக்கும் இலங்கை விமானப்படைக்கு பங்களிப்பை வழங்குவதற்கு விமானப்படை தளபதி இதன்போது தமது இணக்கத்தை வௌியிட்டார்.