மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 ஆம் ஆண்டில் கல்விகற்றுவரும் சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படம் காட்டி வந்த 57 வயதுடைய பாடசாலை அதிபர் ஒருவரை நேற்று (21) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 5 ஆம் ஆண்டில் 3 சிறுமிகள், 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் கல்விகற்று வருகின்றனர். இந்நிலையில் குறித்த மாணவர்கள் 5 ஆம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் அந்த மாணவர்களுக்கு பாடசாலை முடிவுற்ற பின்னர் மேலதிகமாக மாலையில் அதிபர் கற்பித்து வந்துள்ளார்
இதன் போது குறித்த அதிபர் மாணவர்களுக்கு தனது கையடக்க தொலைபேசியில் இருந்து ஆபாச படங்களை காட்டிவந்துள்ள நிலையில் ஒரு மாணவி மாலை நேர வகுப்பிற்கு போகமுடியாது என பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அதற்கான காரணத்தை கேட்டபோது சிறுமி அதிபரின் இந்த செயல் தொடர்பாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவதினமான நேற்று இரவு பெற்றோர்பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸார் பாதிக்கப்பட்ட 3 மாணவிகளிடம் இருந்து வாக்கு மூலத்தை பதிவு செய்ததுடன் 57 வயதுடைய அதிபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அதிபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். அலி சாஹிர் மௌலானாவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதைத் தடுக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மற்றும் செயலாளர் நாயகத்திற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (28) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அலி சாஹிர் மௌலானாவினால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டினை ஆராய்ந்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோருக்கு எதிராகவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு வரும் 11ம் திகதி வரை அமுலில் இருக்கும்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் கடந்த ஓகஸ்ட்மாதம் 4ஆம் திகதி கூடி தீர்மானித்தது.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க கட்சி தீர்மானித்திருந்த உயர்பீடக் கூட்டத்தில் தான் பங்கேற்கவில்லை என்றும், ஆனால் அந்த முடிவு தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
இருந்த போதிலும், தாம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாகக் குற்றம் சுமத்தி, எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் இன்றி தமது கட்சி உறுப்புரிமையைப் பறிக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினமான செயல்மட்டுமன்றி அது வெற்றிகரமான செயல் அல்ல என்று வெளிநாட்டலுவல்கள் மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வலியுறுத்தினார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால் எதிர்வரும் டிசம்பரில் சர்வதேச நாணய நிதியம் வழங்கவிருக்கும் அடுத்த தவணை மற்றும் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) வழங்கவுள்ள தவணைகளை இழக்க நேரிடும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்படி 2024 டிசம்பர் முதல் 2025 ஜனவரி வரை நாடு 1.2 பில்லியன் முதல் 1.3 பில்லியன் டொலர் வரை இந்நாடு இழக்கும் எனவும், அதன் காரணமாக நாடு மீண்டும் ஸ்திரமற்ற நிலைக்கு மாறுவதை யாராளும் தடுக்க முடியாது எனவும் அமைச்சர் அலி சப்ரி மேலும் சுட்டிக்காட்டினார்.
இன்று (28) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே வெளிநாட்டலுவல்கள் மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இதனைக் குறிப்பிட்டார்.
புத்தளம் அறுவாக்காடு பிரதேசத்தில் கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட கழிவு குப்பைகள் மீண்டும் கொட்டப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அதிகாலை எதுவித முன்னறிவித்தலுமின்றி கொள்கலன்களில் நிரப்பப்பட்ட குப்பைகள் புகையிரதம் மூலமாக கொழும்பில் இருந்து கொண்டு வரப்பட்டு அறுவாக்காடு பிரதேசத்தில் கொட்டப்பட்ட நிகழ்வு புத்தளத்தில் மீண்டும் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
சீன செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக கொண்டுவரப்பட்ட சுமார் 20 கொள்கலன்களில் நிரப்பப்பட்ட கழிவு குப்பைகள் ரயில் மூலம் புத்தளம் அறுவாக்காடு பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.
முதல் கட்டமாக 20 கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட கழிவு குப்பைகளில் சுமார் 9 கொள்கலன் குப்பைகள் குறித்த பகுதியில் கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் பல கழிவு கொள்கலன்கள் அடுத்த சில நாட்களில் கொண்டுவரப்பட இருந்ததாகவும் அறிய முடிகிறது.
புத்தளம் அருவாக்காடு பகுதிக்கு கழிவு குப்பைகள் கொண்டுவரப்பட்டதை அறிந்த மக்கள் தமது எதிர்ப்புக்களை தெரிவித்ததுடன், குறித்த விடயம் குறித்து புத்தளம் மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்றனர்.
குறித்த பிரச்சினையை ஆராய்ந்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்கள், மேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடனும், விடயத்திற்கு பொறுப்பான கெளரவ அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க அவர்களுடனும் கலந்துரையாடி உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த கழிவு குப்பைகள் கொண்டு வருவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் நாட்களில் புத்தளம் பகுதிக்கு மீண்டும் பல கொள்கலன்களில் கொண்டுவரப்பட இருந்த கழிவு குப்பைகள், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியால் முறியடிக்கப்பட்டதுடன், நேற்று கொண்டுவரப்பட்ட 20 கொள்கலன் குப்பைகளில் 11 கொள்கலன்கள் இன்று திருப்பி அனுப்படுவதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
குறித்த கழிவு குப்பைகளை மீண்டும் கொழும்புக்கு எடுத்துச் செல்ல கொழும்பிலிருந்து கொள்கலன்கள் அனுப்பப்பட்டுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க தெரிவித்துள்ளமை குறிபிடத்தக்கது.
சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த நிலையில் உயிரிழந்த வைத்தியர் ஹைதுருஸ் மொஹமட் இல்யாஸுக்குப் (Mohammad Ilyas) பதிலாக வேறொரு வேட்பாளரை முன்நிறுத்த சந்தர்ப்பம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri Lanka) தெரிவித்துள்ளது.
ஹைதுருஸ் மொஹம்மட் இல்யாஸின் மரணச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதன் மூலம் அவர் சார்பில் வேட்புமனுவில் கையொப்பமிட்டவருக்கு வேறொரு வேட்பாளரை பரிந்துரைக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L Rathnayake) குறிப்பிட்டுள்ளார்.
வாக்குச்சீட்டில் மாற்றம் இல்லை
இதற்கு 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் வாக்குச்சீட்டில் மொஹமட் இல்யாஸின் வாக்காளர் சின்னமும் பெயரும் அச்சிடப்பட்டுள்ளதால் அவற்றில் மாற்றங்கள் எதுவும் இடம்பெறமாட்டாது என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை சுயாதீன வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த புத்தளத்தைச் (Puttalam) சேர்ந்த வைத்தியர் மொஹமட் இல்யாஸ் கடந்த வியாழக்கிழமை (22) உயிரிழந்தார்.
மாரடைப்பால் புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் தனது 79 ஆவது வயதில் இயற்கை எய்தியமை குறிப்பிடத்தக்கது.
அரகல போராட்டம் தீவிரமடைந்த நிலையில் 2022 மே 09 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்கிறார்.
பிரதமர் பதவி வெற்றிடமானால், ஜனாதிபதி அவரது அபிப்பிராயப்படி எந்த பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தின் அதிக நம்பிக்கையைப் பெறுவதற்கு அதிக சாத்தியம் கொண்டவராக இருக்கின்றாரோ அந்த பாராளுமன்ற உறுப்பினரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்ற நிலை உருவாகிறது. (அரசியலமைப்பின் உறுப்புரை 43(4))
அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டில் நிலவிய கொந்தளிப்பான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அதிக சாத்தியம் கொண்டவராக இருப்பார் என்ற அதீத நம்பிக்கையில் பிரதமர் பதவியை ஏற்கும்படி அவருக்கு பல தடவை அழைப்பு விடுக்கிறார்.
அதற்கு சஜித் பிரேமதாசவிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. மாறாக, கட்சியின் உறுப்பினர்கள் சிலரின் வழிகாட்டுதலில் பல இழுத்தடிப்புக்கள் இடம்பெறுகின்றன.
இந்நிலையில் சஜித் பிரேமதாசவுக்கு கோட்டாபய ராஜபக்ச வழங்கியிருந்த அவகாசம் முடிவடைகின்ற நிலையில், குறித்த பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவிடம் பிரதமர் பதவியை ஏற்கும்படி கோட்டாபய அழைப்பு விடுத்ததும் பிரதமர் பதவியை ஏற்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
2022 மே 12 ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமராக பதவி ஏற்கிறார் ரணில்.
ரணில் பிரதமரான பின்னரும் “கோட்டா கோ ஹோம்” கோஷம் உக்கிரமடைய, 2022 ஜூலை 14 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்கிறார்.
ஒரு ஜனாதிபதியின் பதவி அவரது பதவிக்காலம் முடிவடைய முன்னர் வெற்றிடமானால், அரசியலமைப்பின் படி, எஞ்சியுள்ள காலத்துக்கு பதவி வகிப்பதற்கென பாராளுமன்றம் அதன் உறுப்பினர்களுள் இருந்து ஒருவரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது நியதி (உறுப்புரை 40(1)(a))
அவ்வாறு தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஜனாதிபதி பதவி வெற்றிடமானதிலிருந்து ஒரு மாதத்துக்குள் பாராளுமன்றத்தில் நடத்தப்பட வேண்டும். (உறுப்புரை 40(1)(b))
ஜனாதிபதி பதவி வெற்றிடமான திகதியிலிருந்து புதிய ஜனாதிபதி பதவியேற்கும் வரையான இடைப்பட்ட காலத்தில், நாட்டின் பிரதமரே பதில் ஜனாதிபதியாக பதவி வகிக்க வேண்டும். (உறுப்புரை 40(1)(c))
இந்த 40(1)(c) எனும் உறுப்புரைக்கமைய 2022 ஜூலை 14 ஆம் திகதி, ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாகின்றார்.
2022 ஜூலை 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது. வங்குரோத்து அடைந்த நாட்டை பொறுப்பேற்பதற்காக புதிய ஜனாதிபதி பதவிக்கு மூவர் தைரியமாக போட்டியிட்டனர்.
வாக்கெடுப்பு முடிவில், ரணில் விக்ரமசிங்கவிற்கு 134 வாக்குகளும், டளஸ் அழகப்பெருமவிற்கு 82 வாக்குகளும், அநுர குமார திஸாநாயக்கவிற்கு 3 வாக்குகளும் கிடைக்க, புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் அதிக வாக்குகளை பெற்று நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகின்றார்.
இதுதான்ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகுவதற்காக நாட்டில் பின்பற்றப்பட்ட சட்ட நடைமுறை. இதுவே பின்பற்றப்படவும் வேண்டும்.
பிரதமர் பதிவியை ஏற்பதற்கு சஜித் பிரேமதாசவுக்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் விடுக்கப்பட்ட அழைப்பைப் போல், அனுர குமரா திஸ்ஸநாயக்கவுக்கோ அல்லது டலஸ் அலகப்பெருமவுக்கோ பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறான அழைப்பு முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு சில சமூக வலைத்தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆதரவளிப்பதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பான செய்திகள் என முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
அந்த செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் ஊடகப்பிரிவு குறித்த மறுப்பறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொள்கை, கட்சி தீர்மானங்களை மீறி எவ்வித முடிவுகளையும் எடுக்காதவராக தொடர்ந்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பயணிப்பார் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் குறித்து வெளியான செய்தி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட தீர்மானத்துக்கு அமைய, சஜித் பிரேதமாசவை ஆதரிக்கும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடாதவர்களுக்கு எதிராக கட்சித் தலைமை கடுமையான முடிவை எடுக்கும் என, கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் நேற்று (19) ஓட்டமாவடியில் நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கைகளை பிடித்துக் கொண்டிருப்பதை இன்னும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிசை குறிப்பிட்டே மு.கா தலைவர் இதனைப் பேசியதாக கட்சி போராளிகள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சஜித் பிரேதமதாசவை ஆதரிப்பதென முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்ததை அடுத்து, குருணாகலில் சஜித்தை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் மாதிரம் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில்தான் ஜனாதிபதியைச் சந்தித்து மு.காங்கிரஸின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா கட்சியின் தீர்மானத்துக்கு முரணாக ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவை வழங்குவதாக அறிவித்தார்.
“இவர்கள் ஜனாதிபதியின் கையைப் பிடித்துக்கொண்பிருப்பதை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, கட்சியின் உயர் பீடம் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான தேர்தல் வேலைகளில் ஈடுபடாது விட்டால், அவருக்கு எதிரான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்” என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஓட்டமாவடியிலுள்ள முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்களை கட்சித் தலைவர் ஹக்கீம் சந்தித்த போதே இவ்விடயங்களை தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து அபிவிருத்தி வேலைகளுக்காக சுமார் 860 மில்லியன் ரூபா பணத்தை பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் பெற்றுக் கொண்டார் என்ற விடயமும் பேசப்பட்டது வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
‘உலகின் தெற்கு நாடுகளின் குரல்’ மாநாட்டின் அரச தலைவர்கள் அமர்வில் நேற்று (17) அனுராதபுரம் ஜனாதிபதி மாளிகையில் இருந்து இணையவழி மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார்.
“நிலைபேறான எதிர்காலத்திற்கான வலுவூட்டப்பட்ட உலகின் தெற்கு நாடுகள்” என்ற தொனிப்பொருளின் கீழ் மூன்றாவது முறையாக நடைபெறும் இந்த மாநாடு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மற்றும் பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
வங்காள விரிகுடா மற்றும் அதைச் சூழ உள்ள பிராந்தியங்கள் தற்போது அபிவிருத்தி மையமாக மாறி வருவதால், பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கையானது இந்தியாவுடன் நெருக்கமான பொருளாதார ஒருங்கிணைப்புடனும், ஜப்பான் முதல் இந்தியா வரை பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கைகளை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
உலகளாவிய தலைமைத்துவத்தில் மேற்கிற்கு இனிமேலும் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையை அடைந்துள்ளதாகவும், இவ்வாறான நிலையில், உலகின் தெற்கு நாடுகளை வலுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளுக்கு இதன்போது ஜனாதிபதி பாராட்டினார்.
உலகின் தெற்கு நாடுகள் எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்கள் தொடர்பில் பொதுவான ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு ‘உலகின் தெற்கு நாடுகளின் குரல்’ மாநாடு உதவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்திய – இலங்கை உறவு குறித்து இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ‘நோக்கு’ பிரகடனம் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ஒத்துழைப்பை நினைவுபடுத்துவதுடன் எதிர்காலத்தில் நெருக்கமான உறவுகளுக்கு வழி வகுக்கும் என்றும் இது இறுதியில் பல்வேறு துறைகளின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், இந்தியப் பிரதமர் மோடி மற்றும் இந்தியாவின் பெருந்தன்மையால் இலங்கை மக்கள் இரண்டு வருடங்களாக எதிர்கொண்ட சிரமங்களைக் குறைத்து வங்குரோத்து நிலையிலிருந்து மீள முடிந்ததை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அதற்காக நன்றிகளைத் கூறினார்.
‘உலகின் தெற்கு நாடுகளின் குரல்’ தொடர்பான மூன்றாவது இணையவழி மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளமைக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இந்தத் தொடர் உச்சி மாநாடு எமது நோக்கங்கள் குறித்த புரிதல்கள் மற்றும் ஒவ்வொருக்கு இடையிலான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரான அலி சாஹிர் மௌலானாவின் கட்சி அங்கத்துவத்தை இடைநிறுத்தி செயலாளர் நிசாம் காரியப்பர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
2024 ஆகஸ்டு 4ஆம் திகதி நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்சி தீர்மானங்களை பாரதூரமாக மீறியமை காரணமாக அவரிடம் மேலதிக விளக்கம் கோரி குறித்த செயலாளறினால் குறித்த கடிதம் அனுப்பி வைகக்கப்பட்டுள்ளது.
2024 ஆகஸ்ட் 4ஆம் திகதி நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில் கட்சி உயர்பீட கூட்டத்தில் நீண்ட கலந்துரையாடலுக்குப் பின்னர் 2024 ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
நீங்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லையாயினும், அதற்காக மன்னிப்புக் கோரி பின்வருமாறு செய்தி அனுப்பியிருந்தீர்கள்:
“இன்றைய கூட்டத்தில் நான் உடல் ரீதியாக கலந்து கொள்ள வில்லையாயினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் தலைவரும்,உயர் பீடமும் எமது கட்சியின் நிலைப்பாட்டுடன் மேற்கொள்ளும் எத்தகைய முடிவுடனும் நான் இருப்பேன். கூட்டத்தின் போதும் அதன் பின்னரும் என்னிடமிருந்து கிடைக்க வேண்டிய பங்களிப்பை தயவு செய்து தயவு செய்து எந்த நேரத்திலும் எனக்குத் தெரியப்படுத்தத் தயங்க வேண்டாம். கட்சியின் மீதான விசுவாசத்துடனான என் உணர்வுகளை வெளிப்படுத்துவேன். இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத எனது இயலாமையும், தங்களது மன்னிப்பையும், புரிந்துணர்வையும் வேண்டி நிற்கின்றேன். எனது சலாம் உரித்தாவதாக- இப்படிக்கு, சையத் அலி சாஹிர் மௌலானா”.
இந்த உறுதிமொழிக்கு முற்றிலும் மாற்றமாக, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை நீங்கள் ஆதரிப்பதாக உறுதியளித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
2024 ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை நீங்கள் ஆதரிப்பது கட்சியின் தீர்மானத்தை முழுமையாக மீறும் செயலாகும் என்பதோடு, அதேபோன்று, 22 ஜூன் 2024 அன்று நடைபெற்ற கட்சியின் பேராளர் மாநாட்டில் பிரதித் தலைவர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட போது உங்கள் சத்திய கடதாசியில் நீங்கள் அளித்த உறுதிமொழிக்கும் முரணாக இருக்கின்றது.
ஆகையால், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் உங்களது கட்சி அங்கத்துவத்தை இடை நிறுத்துமாறு அறிவிக்கும்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் என்னைப் பணித்துள்ளார் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடிதத்திற்கு உடனடியாக நீங்கள் வட்ஸ்அப் (WhatsApp)பில் கூட பதிலளிக்கலாம்.
நீங்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் செய்தி தவறாக இருந்தால் அல்லது கட்சி தீர்மானங்களை மறுப்பதற்கான வேறு ஏதாவது ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய காரணம் இருந்தால் உங்களது பதிலை ஒரு கிழமைக்குள் கிடைக்குமாறு எழுத்து மூலம் தெரிவிக்கலாம் எனவும் குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்கள் பதில் அல்லது பதிலளிக்காமை பற்றி ஆராய்வதற்காக கட்சியின் உயர் கூட்டம் இம்மாதத்திற்குள் நடைபெறும் என்றும் தலைவர் உங்களுக்கு அறிவிக்குமாறு பணித்துள்ளதாக குறிப்பிட்ட செயலாளர் நிசாம் காரியப்பர், செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறக்கூடிய சூழ்நிலையில் அவசரத்தை கருத்தில் கொண்டு உங்களுக்கு இதற்கான நேர அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது என்றும் குறித்த கடிதத்தில் குறிபிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.