Home Blog Page 265

கனடா தேர்தலில் வெற்றிபெற்ற இலங்கையர்கள்!

கனடா பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது.

இதில் இலங்கை தமிழர்கள் ஹரிஆனந்த சங்கரி மற்றும் யுவனிதா நாதன் ஆகிய 2 பேர் வெற்றி பெற்றுள்ளனா்.

கனடா பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அப்போது தொடக்கம் முதலே, முன்னாள் பிரதமர் ஜட்டீன ட்ரூடோவின் லிபரல் கட்சி முன்னிலை பெற்று வந்தது. இறுதியில் லிபரல் கட்சி அபார வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து கனடாவின் இடைக்கால பிரதமராக செயல்பட்ட மார்க் கார்னி, மீண்டும் முழுநேர பிரதமராக செயற்பட உள்ளார்.

அவருக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனா். இந்த நிலையில் கனடா பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழர்கள் 2 பேர் வெற்றி பெற்றுள்ளமை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஹரிஆனந்த சங்கரி மற்றும் யுவனிதா நாதன் ஆகிய 2 பேரும் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டனா். இந்த நிலையில் தற்போது அவர்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

ஒட்டுமொத்தமாக கனடா பாராளுமன்ற தேர்தலில் 5 இலங்கை தமிழர்கள் வேட்பாளராக களம் இறங்கினா். இதில் 2 பேர் வெற்றி பெற்றுள்ளனா். இலங்கை தமிழர்கள் வெற்றி பெற்று இருப்பது இலங்கை மற்றும் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமையாக பார்க்கப்படுகிறது. 

வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது.

இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, ஊவா, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மீண்டும் கலைகட்டவுள்ள நுவரெலியா!

இம்முறை வெசாக் மகோற்சவத்தை நுவரெலியாவில் நடாத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதிவணக்கத்திற்குரிய  பௌத்த  பிக்குமார்கள்  மற்றும்  ஒட்டுமொத்த  புத்தசாசனப் பேரவையின் ஆலோசனையின்  பிரகாரம்    2569  (2025)  ஆவது  ஸ்ரீ  பௌத்த வருடத்தின்  வெசாக்  மகோற்சவம் புத்தசாசன,  சமய  மற்றும்  கலாச்சார விவகாரங்கள்  அமைச்சு,  பொது  நிருவாக,  மாகாண  சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மற்றும் பௌத்த விவகாரங்கள் திணைக்களமும் இணைந்து நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நுவரெலியா சர்வதேச பௌத்த நிலைய விகாரையில் நடாத்துவது  பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.


இவ்வாண்டு அரச வெசாக் மகோற்சவம்  ‘ ஹஜெத மித்தே கல்யாண  –   ஹஜெத புரிசுத்தமே’   (நற்குணங்கள் கொண்ட உன்னத நண்பர்களுடன் பழகுவோம் )  எனும் தொனிப்பெருளின்   கீழ்  நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

அதற்கிணங்க, நுவரெலியா சர்வதேச பௌத்த நிலைய விகாரையை மையமாகக் கொண்டு தேசிய வெசாக் மகோற்சவத்தை நடாத்துவதற்கும், 2025 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை வெசாக் வாரமாகப் பிரகடனப்படுத்துவதற்கும்,  குறித்த  காலப்பகுதியில்  பல்வேறு பௌத்த  மத நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கமைத்து நடைமுறைப்படுத்துவதற்கும் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.   

தலைமன்னாரில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

இலங்கை கடற்படையினர் 2025 ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களில் தலைமன்னார், கல்பிட்டி மற்றும் நீர்க்கொழும்பு ஆகிய கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட அறுநூற்று நாற்பத்து மூன்று (643) கிலோ முந்நூற்று எண்பது (380) கிராம் பீடி இலைகளுடன் (01) டிங்கி படகினை கடற்படையினர் கைது செய்தனர்.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்கரையோரங்களை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, 2025 ஏப்ரல் 26 அன்று, தலைமன்னார், மணல்திட்டை சுற்றியுள்ள கடல் பகுதியில், வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிறுவனம் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சிறப்பு கடற்படைப் படைக் குழு 94 கிலோ 880 கிராம் பீடி இலைகளையும், வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயா நிறுவனம் குடாவ கடல் பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, 150 கிலோ பீடி இலைகளுடன் ஒரு டிங்கி படகையும், 2025 ஏப்ரல் 27 அன்று, நீர்கொழும்பு களப்பு பகுதியில், மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கெளனி நிறுவனம் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, 398 கிலோ 500 கிராம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் 18 பைகளில் அடைக்கப்பட்டிருந்ததுடன். அதன் மொத்த எடை 643 கிலோகிராம் 380 கிராம் ஆகும்.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பீடி இலைகளுடன் சேர்த்து டிங்கி படகும், மன்னார் மற்றும் புத்தளம் மதுவரி விசேட பிரிவினரிடமும், கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடமும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டது.

பெருந்தோட்டத் துறையில் புதிய சட்டங்கள்!

Tea picker in a tea plantation in the 'tea country' of Sri Lanka, Asia, by documentary travel photographer Matthew Williams-Ellis

பெருந்தோட்டத்துறை    மற்றும்    சமுதாய    உட்கட்டமைப்பு    வசதிகள் அமைச்சின் 
விடயதானத்திற்குரிய புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும் மற்றும்  தற்போதுள்ள சட்டங்களைத் திருத்தம் செய்யவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பெருந்தோட்டத்துறை மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் விடயதானத்திற்குரிய அரச கொள்கைகளின்  முன்னுரிமைக்கமைய, 2025  ஆம் ஆண்டில்  தற்போதுள்ள  சட்டங்களைத் திருத்தம் செய்தல்  மற்றும்  புதிதாக சட்டங்களைத்  தயாரிக்க  வேண்டிய  தேவை  கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய,  கீழ்க்காணும்  புதிய  சட்டங்களை  அறிமுகப்படுத்தல்  மற்றும் சட்டங்களைத்  திருத்தம் செய்தல்  2025  ஆம்  ஆண்டின்  அரச  சட்ட  வரைவாக்க வேலைத்திட்டத்தில்  உள்வாங்குவதற்காக பெருந்தோட்டத்துறை மற்றும்   சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

• 1958  ஆம்  ஆண்டின்   02  ஆம்  இலக்க,  தேயிலை,  இறப்பர்  மற்றும்  தென்னந்தோட்டங்கள் (கூறுபோடல் கட்டுப்பாட்டு) சட்டத்தைத் திருத்தம் செய்தல்  

• 2005  ஆம்  ஆண்டின்  19  ஆம்  இலக்க ,  சௌமியமூர்த்தி  தொண்டமான்  ஞாபகார்த்த  மன்ற சட்டத்தைத் திருத்தம் செய்தல்  

• 2000 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, தேயிலைச் சக்தி நிதியச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்  

• 1957 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க, தேயிலை கட்டுப்பாட்டுச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்  

• 1956 ஆம் ஆண்டின் 11 ஆம்  இலக்க, இறப்பர் கட்டுப்பாட்டுச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்  

• பெருந்தோட்ட முகாமைத்துவச் சட்டமெனப் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தல்  

• துருசவிய   சங்கங்களின்   அதிகாரங்களை   இறப்பர்   அபிவிருத்தித்   திணைக்களத்திற்கு ஒப்படைப்பதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தல்  

• 1971  ஆம்  ஆண்டின்  46  ஆம்  இலக்க  தெங்கு  அபிவிருத்திச்  சட்டத்தைக் சமகாலத் தேவைகளுக்கேற்ப புதிய ஒழுங்குவிதிகளை உள்வாங்கக் கூடிய வகையில் குறித்த சட்டத்தைத் திருத்தம் செய்தல்  

• 1975  ஆம்  ஆண்டின்  14  ஆம்  இலக்க  தேயிலை  சபைச்  சட்டம்  மற்றும் ஒழுங்குவிதிகள் தொடர்பான திருத்தங்களை மேற்கொள்ளல்

பல் வைத்தியரின் வாயில் வெடித்த பட்டாசு!

சீனப் பட்டாசு ஒன்றை கடித்த பெண் பல் வைத்தியர் ஒருவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் பாணந்துறையின் வேகட பகுதியில் உள்ள அரச வைத்தியசாலையில் பணிபுரியும் பல் வைத்தியர் என பொலிசார் தெரிவித்தனர்.

காயமடைந்த வைத்தியரின் மகன் அருகிலுள்ள ஒரு கடையில் இருந்து சீனப் பட்டாசுகளை வாங்கி, அவற்றில் சிலவற்றை வீட்டின் வரவேற்பறையில் உள்ள மேசையில் வைத்திருந்துள்ளான்.

இது தொடர்பில் சரியான புரிதல் இல்லாமல், பல் வைத்தியர் அதை பரிசோதிக்க தனது பற்களால் கடித்ததாகவும், இதனால் அது வெடித்து பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

‘சீனப் பட்டாசு’ அவரது வாயில் வெடித்ததால், அவரது வாய், முகம் மற்றும் பற்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படுகாயமடைந்த வைத்தியர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பாணந்துறை பிரதேச குற்றப்பிரிவு அதிகாரிகள்  வெடிப்பு நிகழ்ந்த வீட்டிற்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில் பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் (29) நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்கள் இன்று தங்கள் பணியிடங்களில் தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

இம்முறை உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு  கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், 25 மற்றும் 28 ஆம் திகதிகளிலும் இதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவடைய உள்ளது.

இதுவரை சுமார் 90 சதவீத வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.

இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றிய குழு!

ஐரோப்பிய ஒன்றிய GSP+ கண்காணிப்புக் குழுவொன்று இன்று (28) நாட்டிற்கு வருகை தரவுள்ளது. 

GSP+ வர்த்தக விருப்பத்தேர்வுகளை வழங்குவது தொடர்பான நிபந்தனைகளை நிறைவேற்றுவது குறித்த முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய GSP+ கண்காணிப்புக் குழு இவ்வாறு நாட்டுக்கு வருகை தருகிறது. 

இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழு இன்று 28 முதல் மே மாதம் 7ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது, அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள், சிவில் சமூகத்தினர் மற்றும் பல தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல்களை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

2024 ஆம் ஆண்டில் 2.7 பில்லியன் யூரோக்கள் ஏற்றுமதியுடன், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி இடமாக மாறியுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக் கல்லூரியை விடுவிப்பது எப்போது?

ஆனைவிழுந்தான் தொழில்நுட்பக் கல்லூரியை விடுவிக்குமா அரசாங்கம்? – சிறீதரன் எம்.பி கேள்வி..!!

போர்க்காலம், சமாதான காலம் என்ற நிலைமாறுதல்கள் எல்லாவற்றையும் கடந்து, கல்வி, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் தளங்களை சமநிலையில் மேலுயர்த்திய விடுதலைப் புலிகளின் காலத்தில், கிளிநொச்சி மண்ணின் அடையாளங்களுள் ஒன்றாக இருந்த ஆனைவிழுந்தான் தொழில்நுட்பக் கல்லூரியை இராணுவத்திடமிருந்து விடுவித்து, மீள இயக்குவதற்கு இந்த அரசாங்கமாவது நடவடிக்கை எடுக்குமா? என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று முன்தினம், தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வன்னேரிக்குளம் வட்டாரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் வன்னேரிக்குளம் வட்டாரக் கிளைத் தலைவர் தியாகராசா செந்தூரன் தலைமையில் ஆனைவிழுந்தானில் நடைபெற்ற கூட்டத்தில், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் வன்னேரிக்குளம் வட்டார வேட்பாளருமான நாகேந்திரம் செல்வநாயகம், குறித்த வட்டார வேட்பாளரான சிவலிங்கம் பிறின்ஸ் சிந்துஜன், போதகர் சிவலிங்கம் சாம்சன், கரைச்சி பிரதேச சபையின் மேனாள் உறுப்பினர் சுந்தரமூர்த்தி தயாபரன், அக்கராயன் வட்டார வேட்பாளர் தட்சிணாமூர்த்தி முரளி ஆகியோர் உரையாற்றியிருந்ததுடன், பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலஞ்ச ஊழல் விசாரணைக்கு வந்த ரணில்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.