நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை வவுனியா மாவட்டங்களிலும் மற்றும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வு காரணமாக, நாளை (15) வரையில் இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
அதற்கிணங்க இன்று நண்பகல் 12.10 அளவில் நாவலடி, பரந்தன், முரசுமோட்டை, வெள்ளிக்கண்டல், உடபத்துக்கண்டல், புளியம்பொக்கணைஆகிய பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
எழுந்துள்ள சவால்களைத் துணிவுடன் எதிர்கொண்டு, வளமான நாடு – அழகான வாழ்க்கை எனும் இலக்கை அனைவருக்கும் உரித்தாக்குவதற்குச் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
மலர்ந்துள்ள பராபவ சித்திரை புத்தாண்டுக்கான தமது வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பௌதிக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் புதுமைபெறும் எதிர்பார்ப்பை அடையாளப்படுத்தும் சித்திரை புத்தாண்டு, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார விழாவாகும்.
பாரம்பரிய சம்பிரதாயங்களைப் பாதுகாத்து, சடங்குகளுக்கும் சமயக் கிரியைகளுக்கும் முன்னுரிமை அளித்து, அனைவரும் ஒன்றிணைந்து ஒரே சுபவேளையில் செயற்படுவது இப்புத்தாண்டின் சிறப்பம்சமாகும்.
இவ்வாறு பகிர்ந்துகொள்ளப்படும் கலாசாரம் உலகிற்கு முன்னால் எமது நாட்டின் தனித்துவத்தையும், எமது சமூகங்களுக்கு இடையே நிலவும் சமூக-கலாசார பிணைப்பையும் மிகச்சிறப்பாகப் பிரதிபலிக்கின்றது.
நாட்டின் எதிர்கால அபிவிருத்திப் பாதையை இந்த பெறுமதிமிக்க கலாசாரத்துடனும், சிறந்த வரலாற்று மரபுரிமையுடனும் மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்று நாம் திடமாக நம்புகின்றோம்.
அதற்கமைய, எமது அனைத்து எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களும் அந்த பெறுமதிமிக்க மரபுரிமை மற்றும் கலாசாரத்தின் மீது வலுவாகக் காலூன்றித் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதை இங்கு நினைவுகூர வேண்டும்.
அதேபோல், சூரியப் பெயர்ச்சிக்கு இணையாக மேற்கொள்ளப்படும் அனைத்துச் சடங்குகளினதும் பொதுவான எதிர்பார்ப்பு, கூட்டுமுயற்சியை மதிக்கின்ற, மற்றவர்களினதும் இயற்கையினதும் இருப்புக்கு மதிப்பளிக்கின்ற ஒரு மனிதாபிமானமுள்ள புதிய மனிதனை உருவாக்குவதாகும்.
புத்தாண்டின் சடங்குகள் மூலம் வெளிப்படும் அந்த ஒற்றுமையின் பண்புகளும் விழுமியங்களும் அந்த சில நாட்களுக்கு மாத்திரமன்றி, வருடம் முழுவதும் எமது நடத்தையில் பிரதிபலிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
கடந்த வருடம் நாம் எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கை அனர்த்த சவால்களின் போது உலகிற்கு வெளிப்படுத்திய எமது உள்வாங்கும் திறன் மற்றும் சகிப்புத்தன்மையைப் போலவே, மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள வெளிப்புற சவால்களையும் திட்டமிட்ட முறையான முகாமைத்துவத்துடன் வெற்றிகொள்வதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது.
ஒரு நாடாக ஒன்றிணைந்து இந்தச் சவால்களை வென்றெடுக்கும்போது, சித்திரை புத்தாண்டு காலத்தில் வெளிப்படுத்தப்படும் ஒற்றுமை மற்றும் பகிர்தல் போன்ற பண்புகளால் எமது வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.
பெற்றுக்கொண்ட வெற்றிகளை மேலும் உறுதிப்படுத்துவதுடன், எழுந்துள்ள சவால்களைத் துணிவுடன் எதிர்கொண்டு, வளமான நாடு – அழகான வாழ்க்கை எனும் இலக்கை அனைவருக்கும் உரித்தாக்குவதற்குச் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம் என அழைப்பு விடுத்து, பிறந்துள்ள இச்சித்திரை புத்தாண்டு அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய வாழ்த்துவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
சோமாலியாவில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் உகாண்டா ராணுவம் உதவியதற்காக, 100 கோடி அமெரிக்க டாலர் நிதி மற்றும் அழகான பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என உகாண்டா ராணுவ தளபதி, துருக்கிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
உகாண்டா அருகே உள்ள நாடு சோமாலியா. இங்கு அல் – ஷபாப் பயங்கரவாதிகள் பல பகுதிகளை கட்டுப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக, 20 ஆண்டுகளாக உகாண்டா ராணுவம் போர் புரிந்து வருகிறது. ஆப்ரிக்க யூனியன் திட்டத்தின் ஒரு பகுதியாக உகாண்டா படையினர் சோமாலியாவில் சட்டம் – ஒழுங்கை ஏற்படுத்தினர்.
அதன்பின் சோமாலியாவில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலைகள் போன்ற உட்கட்டமைப்பு திட்டங்களில் துருக்கி முதலீடு செய்தது. இதற்கு உகாண்டா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ‘எங்கள் படை வீரர்கள் ரத்தம் சிந்தி அமைதியை ஏற்படுத்தினால், அதை வைத்து துருக்கி லாபமடைகிறது’ என உகாண்டா ராணுவ தளபதியும், உகாண்டா அதிபர் முசவேனியின் மகனுமான முஹூஸி கைனெருகபா கூறி வருகிறார்.
இந்நிலையில், முஹூசி கைனெருகபா விநோதமான ஒன்றை கேட்டு உள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், சோமாலியாவில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் உகாண்டா ராணுவம் பயன்படுத்தப்பட்டதற்காக 100 கோடி அமெரிக்க டாலர் பணம் பாதுகாப்பு லாப பங்காகவும் மற்றும் துருக்கியின் மிகவும் அழகான பெண்ணை தனக்கு மனைவியாக்க வேண்டும். இதனை செய்ய தவறினால், துருக்கி விமானங்கள், எங்கள் வான் எல்லையை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்.
இங்குள்ள தூதரகத்தை மூடுவோம். அந்நாட்டில் உள்ள எங்கள் தூதரகத்தை மூடினாலும் எங்களுக்கு கவலையில்லை. உகாண்டா மக்கள் பாதுகாப்பு கருதி துருக்கி செல்வதை தவிர்க்க வேண்டும்.
1 லட்சம் உகாண்டா ராணுவ வீரர்களுடன் எனது தலைமையில் இஸ்ரேல் சென்று, இயேசு பிறந்த நிலத்தை பாதுகாக்க தயாராக இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். அவரது இந்த மிரட்டல், இருநாட்டு உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு துருக்கி கண்டனம் தெரிவித்துள்ளது.
பழைய வரலாறு
உகாண்டா ராணுவ தளபதி இவ்வாறு கேட்பது இது முதல்முறை அல்ல. கடந்த 2022 ம் ஆண்டு உலகின் மிகவும் அழகான 100 அங்கோல் பசுக்களை தருவதாகவும், அதற்கு பதிலாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் எனவும், இதனை நிராகரித்தால், இத்தாலியை நாங்கள் கைப்பற்றுவோம் எனக்கூறினார்.
இது அப்போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியதால், அவரது தந்தையும் உகாண்டாவின் அதிபருமான யோவேரி முசவேனி மன்னிப்பு கோரினார். சகோதரத்துவ நாடுகளின் விஷயங்களில் தலையிடுவதற்கு மகனை கண்டித்தார்.
2022ல் கென்யா மீது படையெடுக்கப்போவதாகவும் முஹூசி, மிரட்டல் விடுத்து இருந்தார். இதனால், மகனது பதவியை தற்காலிகமாக பறித்த அதிபர், கென்யாவிடமும் மன்னிப்பு கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எல்லா கப்பல்களும் செல்வதற்கு ஈரான் அனுமதிக்கும் வரை, ஹார்முஸ் நீரிணை வழியாக எந்த ஒரு கப்பலும் செல்ல அனுமதிக்க மாட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
மேற்காசிய போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமைதி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. பெரும்பாலான விஷயங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால் கவலைக்குரிய விஷயமான அணுஆயுதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
உலகின் மிச்சிறந்த அமெரிக்க கடற்படை , ஹார்முஸ் நீரிணைக்குள் நுழையவோ அல்லது அதில் இருந்து வெளியேறவோ முயற்சி செய்யும் அனைத்து கப்பல்களையும் தடுக்கும் வேலையை உடனடியாக துவங்கும். எல்லா கப்பல்களுக்கும் ஈரான் அனுமதிக்கும் வரையும் இது தொடரும்.
ஆனால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை செல்ல அனுமதிக்காத ஈரான், அங்கு கண்ணி வெடி வைக்கப்பட்டுள்ளது. எங்கிருக்கிறது தெரியவில்லை எனக்கூறி வருகிறது. இது உலகளவில் மிரட்டி பணம் பறித்தல் ஆகும். இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட தலைவர்கள் யாரும் பயப்பட மாட்டார்கள்.
சர்வதேச கடல் பரப்பில் ஈரானுக்கு கப்பம் செலுத்திய கப்பல்களை தேடி கண்டறிந்து தடுத்து நிறுத்தும்படி அமெரிக்க கடற்படைக்கு உத்தரவிட்டு உள்ளேன். சட்டவிரோதமாக கப்பம் கட்டிய எவருக்கும், பாதுகாப்பான பயணம் சாத்தியமாகாது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் புதைத்து வைத்துள்ள கண்ணி வெடிகளை அழிக்கும் பணியையும் துவங்கி உள்ளோம். எங்கள் மீதோ அல்லது அமைதியான முறையில் பயணிக்கும் கப்பல்கள் மீதோ துப்பாக்கிச்சூடு நடத்தும் எவரேனும் நரகத்துக்கு அனுப்பப்படுவார்கள்.
மற்றவர்களை விட ஈரானுக்கு இது நன்றாக தெரியும். ஏற்கனவே அழிவை சந்தித்துள்ள ஈரானுக்கு எப்படி இந்த சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வருவது என்பது பற்றி தெரியும். அவர்களின் கடற்படை, விமானப்படை அழிந்துவிட்டது. ரேடார் பயனற்றதாகிவிட்டது. அணு ஆயுதக் கொள்கையால் கமேனி உள்ளிட்ட பல தலைவர்கள் இறந்துவிட்டனர்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களை தடுக்கும் பணி விரைவில் துவங்கும். மற்ற நாடுகளும் இந்தப் பணியில் ஈடுபடும். சட்டவிரோதமாக மிரட்டி பணம் பறித்து லாபம் பார்க்கும் ஈரானின் செயலை அனுமதிக்க முடியாது. அவர்களுக்கு பணம் தேவைப்படுகிறது. குறிப்பாக அணுஆயுதம் தேவைப்படுகிறது. ஈரானில் மிச்சமிருப்பதையும் ராணுவம் அழித்துவிடும். இவ்வாறு அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளமையானது, பாரம்பரிய அரசியல் ஆய்வாளர்களிடையே ஒரு புதிய விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது. குறிப்பாக, அரசியல் தத்துவார்த்த ரீதியாக முழுமையான ஒரு அரசியல் வகையினமாக கருதப்படாத “ஊழல் எதிர்ப்பு” எனும் கோஷம், எவ்வாறு ஒரு மக்கள் சக்தியைத் திரட்டி அரச அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு வலுப்பெற்றது என்பது இங்குள்ள முக்கிய கேள்வியாகும்.
நெருக்கடியின் மத்தியில் ஊழல் எதிர்ப்பு: ஒரு “வெற்று அடையாளமாக” (Empty Signifier)
அரசியல் கோட்பாட்டாளர் எர்னஸ்டோ லாக்லோ (Ernesto Laclau) குறிப்பிடுவது போல, ஊழல் எதிர்ப்பு என்பது ஒரு “வெற்று அடையாளமாக” இங்கு தொழிற்பட்டுள்ளது. பொருளாதார வீழ்ச்சி, நிர்வாகத் தோல்வி, குடும்ப ஆட்சி மற்றும் அரச நிறுவனங்களின் பலவீனம் என அனைத்துப் பிரச்சினைகளும் “ஊழல்” என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடக்கப்பட்டன.
இந்தச் சூழலில், பிரச்சினைகளுக்கான ஆழமான கட்டமைப்பு ரீதியான காரணங்கள் புறந்தள்ளப்பட்டு, “அனைவரும் திருடர்கள், அவர்களைத் தண்டிக்க வேண்டும்” என்ற மிக எளிமையான, பொதுவான மற்றும் உணர்ச்சிகரமான கோஷம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இது ஒரு மாற்றுக் கொள்கையை முன்வைப்பதை விட, நிலவும் முறையை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் ஒரு மொழியாகவே பயன்படுத்தப்பட்டது.
அரசியல் மாற்றத்தின் வரலாற்றுப் பின்னணி
NPP இன் வெற்றி என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல; இது தசாப்தங்களாக வேரூன்றியிருந்த ஒரு அரசியல் கலாசாரத்தை மக்கள் நிராகரித்த ஒரு வரலாற்றுத் தருணமாகும்.
மக்களின் அவநம்பிக்கை: ஐக்கிய தேசியக் கட்சி (UNP) போன்ற பாரம்பரிய கட்சிகள் மீதான கடும் அதிருப்தி NPP க்கான பாதையைச் செப்பனிட்டது.
எதிர்க்கட்சிகளின் பிளவு: எதிர்க்கட்சிகள் பிளவுபட்டிருந்ததும், பழைய அரசியல் முறைமையையே பிரதிநிதித்துவப்படுத்தியதும் NPP க்கான அரசியல் வாய்ப்பை அதிகரித்தது.
ஜே.வி.பி (JVP) முதல் தேசிய மக்கள் சக்தி வரை: ஜனரஞ்சகவாதத்தின் புதிய முகம்
முன்னர் “இடதுசாரி ஜனரஞ்சகவாதத்தை” முன்னிறுத்திய ஜே.வி.பி, இன்று “தேசியவாத ஜனரஞ்சகவாதத்தின்” ஆரம்ப அறிகுறிகளைக் காட்டுவது ஒரு முரண்பாடான உண்மையாகப் பார்க்கப்படுகிறது. ஊழல் எதிர்ப்பு என்ற தார்மீகக் கோஷத்தை முன்னிறுத்தி, முழு அமைப்பையும் விமர்சிக்கும் ஒரு அரசியல் மொழியை NPP உருவாக்கியுள்ளது. “ஊழலை ஒழிப்பதன் மூலம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விமோசனம் கிடைக்கும்” என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது.
அதிகாரத்தைக் கைப்பற்றிய பின் எழும் சவால்கள்
அதிகாரத்தைப் பெறுவதற்கு ஊழல் எதிர்ப்பு ஒரு சிறந்த ஆயுதமாக இருந்திருக்கலாம், ஆனால் ஆட்சி நடத்துவதற்கு அது போதுமானதல்ல. ஜாக் டெரிடாவின் (Jacques Derrida) “கட்டமைப்புச் சிதைவு” (Deconstruction) எனும் கருதுகோளின் அடிப்படையில் பார்த்தால், தற்போது நிலவும் அதிகார உறவுகள் மற்றும் நிறுவன முறைகள் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும்.
எதிர்ப்பு முதல் கட்டமைப்பு வரை: “எதற்கெதிராக இருக்கிறோம்” என்பதில் இருந்து “எதனை உருவாக்கப் போகிறோம்” என்ற இடத்திற்கு NPP நகர வேண்டியுள்ளது.
அரசியல் விலை: கடந்த காலப் போராட்டங்களின் நினைவுகள், தியாகங்கள் மற்றும் சகோதரத்துவத்தின் விழுமியங்கள் இந்த அதிகாரப் போட்டியில் நீர்த்துப்போகும் அபாயம் உள்ளது. இந்த அரசியல் விலையைச் செலுத்த ஜே.வி.பி தயாராக உள்ளதா?
ஜனநாயகத்தை மறுசீரமைப்பதற்கான வாய்ப்பு
பழைய அரசியல் முறைமை வீழ்ச்சியடைந்துள்ள இந்த தருணத்தைப் பயன்படுத்தி, ஜனநாயகத்தைப் பலப்படுத்த பின்வரும் சீர்திருத்தங்கள் அவசியமானவை:
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மறுபரிசீலனை செய்தல்.
நாடாளுமன்றக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துதல்.
மக்கள் பங்கேற்புடனான அரசியல் உரையாடல்களை உருவாக்குதல்.
முடிவுரை
தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி என்பது ஊழல் எதிர்ப்பு எனும் கோஷம் ஒரு சக்திவாய்ந்த அரசியல் கருவியாக இருக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது.
எனினும், ஒரு தார்மீகக் கோஷத்தை மட்டும் வைத்துக் கொண்டு நீண்ட காலத் தீர்வுகளை வழங்க முடியாது. பழைய விமர்சனங்களை நிராகரிக்காமல், புதிய அரசியல் யதார்த்தத்தோடு இணைந்த, இன்னும் ஆழமான ஜனநாயகப் பொறிமுறையை நோக்கி நாம் நகர வேண்டியுள்ளது.
இது தோல்வியடையும் பட்சத்தில், நிராகரிக்கப்பட்ட பழைய பிற்போக்கு சக்திகள் மீண்டும் பலம்பெறும் அபாயம் இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
Digital creator Lecturer at Open University of Sri Lanka Former Teaching assistant at University of Colombo
மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது மின் உற்பத்தி, கடத்தல் மற்றும் விநியோகத்திற்காக ஏற்படும் நியாயமான செலவுகளை மாத்திரமே கருத்திற் கொள்ளவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்குச் சுமையளிக்காத வகையில், மின்சாரக் கட்டணங்களை நிர்ணயிப்பது தொடர்பில் ஆணைக்குழு முக்கிய தீர்மானங்கள் சிலவற்றை முன்மொழிந்துள்ளது.
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போதும், நிலக்கரி இறக்குமதியின் போது ஏற்பட்ட மேலதிக செலவுகள் அல்லது ஏனைய நியாயமற்ற செலவினங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்காலத்தில் முன்வைக்கப்படும் மின்சாரக் கட்டணத் திருத்த யோசனைகளின் போதும் பின்வரும் விடயங்களை மின்சாரக் கட்டணத்தில் உள்ளடக்காதிருக்க ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது:
நிலக்கரி விநியோகச் சிக்கல்கள் அல்லது தரக்குறைபாடுகள் காரணமாக ஏற்படும் மேலதிக செலவுகள்.
மின்சார சபையினால் முன்வைக்கப்படும் ஏனைய நியாயமற்ற செலவினங்கள்.
நிலக்கரியின் தரம் மற்றும் ஏனைய நிர்வாக ரீதியான குறைபாடுகளால் ஏற்படும் நட்டங்களை நுகர்வோர் மீது சுமத்த முடியாது என்பதில் ஆணைக்குழு உறுதியாக உள்ளது.
உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் உண்மையான மற்றும் அவசியமான செலவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எதிர்கால மின்சாரக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
லெபனானில், மூன்று கிராமங்களை இஸ்ரேல் ராணுவம் வெடிகுண்டுகளை வீசி தரைமட்டமாக்கியது.
ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் ஹெஸ்பொல்லா அமைப்பினரின் பதுங்கு குழிகள் மற்றும் ராணுவ கட்டமைப்புகளை தகர்ப்பதாக கூறி, வீடுகள் மீது இஸ்ரேல் வெடிகுண்டுகளை வீசுவதாக லெபனான் குற்றச்சாட்டி வருகிறது.
இந்நிலையில், லெபனான் எல்லையில் உள்ள தைய்பே, நகுரா மற்றும் தீர் செர்யான் ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகள் ஒட்டுமொத்தமாக வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
தெற்கு லெபனானின் லிட்டானி ஆறு வரையிலான பகுதிகளைக் கைப்பற்றி, அங்கு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதனால் லெபனானில் இருந்து வெளியேற்றப்பட்ட, 10 லட்சம் பேர், மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த போரில், லெபனானில் மட்டும் இதுவரை, 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் நடந்த அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தது. உடன்பாடு ஏற்படவில்லை என அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக பெரிய அளவிலான தாக்குதலை கடந்த பிப்., 28ல் துவக்கின. இந்த தாக்குதலில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இருப்பினும், சண்டையில் இருந்து ஈரான் பின் வாங்கவில்லை; மேற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்கியது.
கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்லும் அப்பிராந்தியத்தின் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதனால், சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் பொருளாதார அழுத்தத்தை சந்தித்தன.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி ‘ஈரான் நாகரிகத்தையே அழித்துவிடுவேன்’ என அதிபர் டிரம்ப் கொக்கரித்தார்; அதற்காக கெடு விதித்திருந்தார். இதனால், ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படுமோ என்ற பதற்றம் எழுந்தது. கெடு முடிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், பாகிஸ்தான் மற்றும் சீனாவின் மத்தியஸ்த முயற்சியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இரு வார தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. இதையடுத்து, அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பை இஸ்லாமாபாதில் பேச்சு நடத்த, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்தார். இதை இரு தரப்பும் ஏற்றன.
ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழு நேற்று முன்தினமே இதற்காக இஸ்லாமாபாத் வந்தது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான அமெரிக்க குழுவினர் நேற்று காலை இஸ்லாமாபாத் வந்தனர். ஈரான் மற்றும் அமெரிக்கா தரப்பினர் தனித் தனியே பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினர்.
இதில், ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்ட முன்வைப்புகளில் சிலவற்றை அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவுடன் நேரடியாக பேசுவதற்கு ஈரான் ஒப்புக் கொண்டது. இவ்வாறு மாறி மாறி கூட்டங்கள் நடந்தன. இதனால், அமைதி பேச்சுக்கான கூட்டம் ஐந்து மணி நேரம் தாமதமாகி மாலை துவங்கி 20 மணி நேரமாக நடந்தது.
எனினும் இதில் முடிவு எதுவும் ஏற்படவில்லை. அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க ஈரான் குழுவினர் மறுத்துவிட்டனர். இதையடுத்து அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தது. பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை என அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்தார்.
நிருபர்களிடம் துணை அதிபர் ஜேடி வான்ஸ் கூறியதாவது: அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பாகிஸ்தானில் 21 மணி நேரமாக நடைபெற்ற அமைதி பேச்சு எவ்வித முடிவும் இன்றி நிறைவு பெற்றது. அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டது. எங்கள் குழு அமெரிக்கா திரும்புகிறது, என்றார்.
பேச்சு தோல்வி அடைந்துள்ளதால் மீண்டும் போர் நடக்கும் சூழல் உருவாகுமா என்ற என்ற அச்சம் உலகை மீண்டும் ஆழ்த்தியுள்ளது!
கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதியில் மட்டும் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்துகளில் பெரும்பாலானவை போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் செலுத்தியமையாலேயே ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ஆபத்தான முறையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் குறித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்குமாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது ‘QR’ முறையைக் கருத்தில் கொள்ளப் போவதில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா, புத்தாண்டு காலத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், வாகன இலக்கத் தகட்டின் ஒற்றை மற்றும் இரட்டை எண்களைக் கருத்தில் கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.