கொழும்பு தேசிய வைத்தியசாலையின் புதிய பிரதிப் பணிப்பாளர் நாயகமாக விசேட வைத்திய நிபுணர் எம்.கே.சம்பத் இந்திக குமார பதவியேற்பு!
கொழும்பு: நாட்டின் சுகாதாரத் துறையில் ஒரு முக்கிய நிர்வாக மாற்றமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் புதிய பிரதிப் பணிப்பாளர் நாயகமாக விசேட வைத்திய நிபுணர் எம்.கே.சம்பத் இந்திக குமார அவர்கள் நேற்று (15) உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அண்மையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் வைத்து, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களினால் இந்திக குமார உள்ளிட்ட 9 சிரேஷ்ட அதிகாரிகளுக்குப் புதிய பிரதிப் பணிப்பாளர் நாயகம் பதவிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
யார் இந்த விசேட வைத்திய நிபுணர் சம்பத் இந்திக குமார?
இலங்கையின் சுகாதாரத் துறையில் மாபெரும் திருப்புமுனைகளை ஏற்படுத்திய முன்னணி சிரேஷ்ட நிர்வாக அதிகாரிகளில் ஒருவரான இவர், மருத்துவ நிர்வாகத் துறையில் நீண்டகால அனுபவமும் நிபுணத்துவமும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் முதன்மை மருத்துவமனையான கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நிர்வாகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், மக்களுக்குச் சிறந்த சுகாதாரச் சேவைகளைத் தங்குதடையின்றி வழங்கவும் இவரது பரந்த அனுபவம் பெரிதும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



